அழகான ஆர்க்டிக் நரி அடடே தகவல்கள்!



நாய்களின் குடும்பத்தில் மிகச் சிறிய இனம் ஆர்க்டிக் நரி என்பதுதான். வெள்ளை நரி, துருவ நரி, பனி நரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஆர்க்டிக் நரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ... ஆர்க்டிக்கின் துந்த்ரா நிலப் பகுதியில் காணப்படுவதால், இது ஆர்க்டிக் நரி என்று அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டர் உயரத்தில், தென் துருவத்தின் பனிப் பிரதேசங்களில் வாழும். ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, வட ஐரோப்பா, ரஷ்யா, கனடா, அலாஸ்கா ஆகிய பகுதிகளில் ஆர்க்டிக் நரி வாழ்கிறது. ஐஸ்லாந்தை தாயகமாகக் கொண்ட ஒரே நிலவாழ் பாலூட்டி ஆர்க்டிக் நரிதான். 

ஒரு பெரிய பூனையின் அளவு இருக்கும் ஆர்க்டிக் நரி, 18 முதல் 27 அங்குல உயரம் வரை வளரும். இதன் ‘புசுபுசு’வென்ற வால், 12 அங்குலம் நீளம் இருக்கும்.
குளிர்காலத்தில் இதன் அடர்ந்த ரோமம் வெள்ளை நிறமாகவும் கோடைக் காலத்தில் சாம்பல் பழுப்பு நிறமாகவும் மாறிவிடும். இப்படி சூழலின் வண்ணத்துக்குத் தக்கவாறு ரோமத்தை தகவமைத்துக் கொள்ளும்.

மைனஸ் 50 டிகிரி செல்சியஸில் கூட சுகமாக வாழும் ஆர்க்டிக் நரியின் ரகசியம் என்ன தெரியுமா? உலகிலேயே வெதுவெதுப்பான முடியுள்ள பாலூட்டி இதுதான்.
இதன் உடல் அமைப்பு, குட்டைக் கால்கள், சின்ன காதுகள் மற்றும் உருண்டையான உடலுடன் அமைந்திருப்பதால், கடுமையான பனியில் கூட உடலில் சூடு குறையாமல் வாழும்.

தன் புசுபுசு வாலை வட்டமாக உடலைச் சுற்றி அரவணைத்து, வெப்பம் வெளியேறாமல் காத்துக் கொள்ளும்.இதன் குளம்புகளில் கூட ரோமம் இருப்பதால், பனியில் சுலபமாக நடக்கும்.  நிலத்தடியில் வளைகள்  தோண்டி அதில் வசிக்கும். இவற்றில் சுமார் 100 வாசல்கள் இருக்குமாம். நூற்றாண்டுகள் பழமையான இந்த வளைகளில் ஆர்க்டிக் நரி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும்.

இந்த பனி நரிகளுக்கு அட்டகாசமான கேட்கும் திறனும் மோப்ப சக்தியும் உண்டு. பனிக்கு அடியில் ஒளிந்திருக்கும் இரையைக் கூட கண்டுபிடித்து உண்ணும்.
ஆர்க்டிக் நரிகள் மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடும். பனியில் ஸ்டைலாக சறுக்கிச் செல்லும்.லெம்மிங்குகள் (எலி போன்ற விலங்குகள்), கடல் பறவைகள், அதன் முட்டைகள், சீல் குட்டிகள், மீன்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணும்.

 துருவக் கரடி மிச்சம் வைத்து விட்டுப் போகும் உணவையும் உண்ணும். சிவப்பு நரி, துருவக் கரடி மற்றும் மனிதர்கள் இதன் முக்கிய எதிரிகள் ஆகும்.
ஆர்க்டிக் நரிகள் கடைசி வரை ஒரே துணையுடனே வாழும். இதன் கர்ப்ப காலம் 51 முதல் 57 நாட்கள் ஆகும். ஒரு தடவைக்கு 5 முதல்  8 குட்டிகள் வரை போடும். தந்தை-தாய் இரண்டும் சேர்ந்து குட்டிகளை வளர்க்கும். இதன் ஆயுட்காலம் 3 முதல் 6 ஆண்டுகள் ஆகும்.

- அ.ஹம்ஸத், கீழக்கரை.