சிந்தனையை சிந்தித்தவர்



கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆய்முறை (Cartesian coordinate system), பகுப்பாய்வு வடிவியல் ஆகியவற்றைக் கண்டறிந்தவர் பிரான்ஸ் நாட்டு கணித மேதை ரெனே டெஸ்சார்ட்டீஸ்.

இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிநன்றன. இவர் 1596ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பிரான்சில் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்தவர். இவரின் தந்தை ஒரு அரசியல்வாதி. ரெனே கல்லூரியில் கணிதம் பயின்றார். பிறகு இயற்பியல் மீதும் ஈடுபாடு கொண்டார்.

‘நவீன தத்துவவியலின் தந்தை’ எனப் புகழப்படும் ரெனே 1641ல் எழுதிய  ‘மெடிடேஷன்ஸ் ஆஃப் ஃபர்ஸ்ட் ஃபிலாசபி’ (Meditations on First Philosophy) என்ற நூல் இன்று பல பல்கலைக்கழகங்களில் பாடமாக இருக்கிறது. கணிதம் தவிர வேறு எதிலும் நம்பகமான தகவல்கள் இல்லை என்று ரெனே கருதினார். ஹாலந்து, ஹங்கேரி, இத்தாலி, டென்மார்க் என நகர்ந்த இவர், ஹாலந்தில் குடியேறினார்.

1626ல் ‘ரூல்ஸ் ஃபார் த டைரக்‌ஷன் ஆஃப் தி மைண்ட்’ என்ற நூலை எழுதினார். ஒளியியல், வானியல், கணிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தார். கணிதம் மீது ஆர்வம் இருந்தாலும், இவரது மனதில் ஆன்மா தொடர்பான பல சந்தேகங்கள் இருந்து வந்தன. மனித வாழ்வின் முடிவு என்ன? ஆரம்பம் என்ன? நம்மைக் கடவுள்தான் உருவாக்கினார் என்றால் அவருக்கு அந்த அளவிற்கு யார் சுதந்திரம் தந்தது? நாம் வாழ்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

இப்படி பல கேள்விகள் அவருக்குள். அப்போதுதான் அவருக்குப் பொறி தட்டியது. இவற்றைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். ஆனால் நம் சிந்தனை பற்றி நாம் உணருவதில்லை என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. பின் தனது சிந்திக்கும் திறனை ஆராய்ந்தார். சிந்தனை என்ற ஒன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக இருப்பதை உணர்ந்தார். மேலும் அவையே மனிதனுக்கு இருக்கும் சக்திகளில் மிக வலிமை வாய்ந்தது எனவும் கருதினார். இறுதியில் இவர் தனது ஆராய்ச்சியின் முடிவை, ‘நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்’ (I think, therefore I am) என தனது குறிப்பேட்டில் எந்தவித சந்தேகமின்றி எழுதினார்.

மனித உடல் எந்திரவியல் விதிகளுக்கு உட்பட்டது என்றார். இது பின்னாளில் நிரூபிக்கப்பட்டு, நவீன உடலியலின் அடிப்படைக் கொள்கையாக அமைந்தது.  அக்காலத்தில் இவரை பலர் மனநோயாளி என்று நினைத்தனர். பின்னாளில்தான் இவரது அறிவைப் புரிந்துகொண்டார்கள். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு  1650, பிப்ரவரி 11ம் தேதி ரெனே மறைந்தார்.

- சி.பரத்