எல்லா குரூப் ரத்தமும் எல்லோருக்கும் சேரும்!



வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்

இடம்: ரத்த வங்கி.
டாக்டர்: என்ன வேண்டும் உங்களுக்கு?
வந்தவர்: என் மனைவிக்கு அவசர ஆபரேஷன். ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்படுகிறது. அதை வாங்குவதற்காகத்தான் வந்தேன்.
டாக்டர்: உங்கள் மனைவியின் ரத்தம் எந்த குரூப்?
வந்தவர்: ஏ பாசிட்டிவ், டாக்டர். இதோ என் மனைவியின் சாம்பிள் ரத்தம்.
டாக்டர்: ஐந்து நிமிஷத்தில் தயாராகிவிடும். வாங்கிச்செல்லுங்கள்.
இந்த மாதிரியான உரையாடலை இன்னும் சில வருடங்களில் கேட்கமுடியாது. பதிலாக இந்த உரையாடல் இப்படி மாறிப்போயிருக்கும்.
டாக்டர்: என்ன வேண்டும் உங்களுக்கு?
வந்தவர்: என் மனைவிக்கு ரத்தம் தேவைப்படுகிறது டாக்டர்.
டாக்டர்: இதோ வாங்கிச்செல்லுங்கள்.

வந்தவர்: என் மனைவியின் ரத்தப் பிரிவை நீங்கள் கேட்கவே இல்லையே?
டாக்டர்: தேவையில்லை. இப்போது எல்லோருடைய ரத்தமும் எல்லோருக்கும் சேரும்.
வந்தவர்: அது எப்படி? ரத்தப் பிரிவு மாறிவிட்டால் பிரச்னை ஏற்படாதா?

இந்தச் சந்தேகம் உங்களுக்கும் வருகிறதல்லவா? இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் எதுவும் சாத்தியம் என்றாகிவிட்டது. ஆம், ரத்தத்தின் தன்மையையே மாற்றி அமைக்கிற புதிய தொழில்நுட்பம் ஒன்று சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது.

அதன்படி எந்த ரத்தப் பிரிவையும் எல்லோரும் ஏற்கும்படி மாற்றக்கூடிய வழிமுறையைக் கனடாவில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மருத்துவ அதிசயத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நம் ரத்தப் பிரிவுகள் பற்றிய அடிப்படை அறிவியலைக் கொஞ்சம் அலசுவோம்.ரத்தம் எல்லோருக்கும் ஒரே நிறமாகத் தெரிந்தாலும், அதில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன  அந்த இருபதில் ஏ, பி, ஓ, ஏபி என்ற நான்கு வகைகள் மிக முக்கியமானவை.

ரத்தச் சிவப்பணுக்களின் மேல் உறையில் காணப்படும் ‘ஆன்டிஜெனை’ (Antigen) அடிப்படையாகக் கொண்டு ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. ரத்தச் சிவப்பணுவில் ‘ஏ’ ஆன்டிஜென் இருக்குமானால் அந்த ரத்தம் ‘ஏ’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தது. ‘ஏ’ ரத்தப் பிரிவின் ஆன்டிஜெனில் மேலும் இரு வகைகள் உள்ளன. ஆகவே, ‘ஏ’ ரத்தப் பிரிவு மட்டும் ரத்தம் ‘ஏ 1’, ‘ஏ 2’ என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ரத்தச் சிவப்பணுவில் ‘பி’ ஆன்டிஜென் இருந்தால் அது ‘பி’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தது. ரத்தச் சிவப்பணுவில் ‘ஏ’ ஆன்டிஜென், ‘பி’ ஆன்டிஜென் இரண்டுமே இருக்குமானால் அது ‘ஏபி’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தது. இவ்வகை ரத்தம் ‘ஏ1பி’ எனவும், ‘ஏ2 பி’ எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. ரத்தச் சிவப்பணுவில் எந்த வகை ஆன்டிஜெனும் இல்லை என்றால் அது ‘ஓ’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தது.

விபத்துகளின்போது, அறுவை சிகிச்சைகளின்போது, பல நோய்களின்போது உடலில் ரத்தமிழப்பு ஏற்படுவதால் மரணம் நிகழ்வது வழக்கம். இதனைத் தடுக்க ரத்தம் செலுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த வங்கிகளில் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தை சேமித்து வைத்து, தேவைப்படுபவர்களுக்கு அவர்களுடைய ரத்தப் பிரிவுக்குப் பொருந்தும் ரத்த வகையை வழங்குவது நடைமுறையில் உள்ளது.

ஆனால் எல்லோருடைய ரத்தமும் எல்லோருக்கும் சேராது எனும் நிலைமைதான் இன்றுவரை இருந்து வருகிறது. ‘ஓ’ பிரிவு ரத்தத்தை மட்டும் எல்லோருக்கும் வழங்கலாம் என்பதால் அப்பிரிவு உள்ளவரை ‘பொதுக் கொடையாளர்’ (Universal donor) என்று அழைக்கிறார்கள்.

சமயங்களில் நோயாளிக்கு அவசரமாக ரத்தம் செலுத்தப்பட வேண்டிய நிலைமை இருக்கும். ஆனால், ரத்த வங்கியில் அவருக்கேற்ற பிரிவு ரத்தம் கிடைக்காமல் போய்விடும். அப்போது நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதும் உண்டு.  இந்தப் பிரச்னைக்கு கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ரத்த ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த ஆய்வுக்குழு நல்லதொரு தீர்வு கண்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவர் டேவிட் கான் இதுபற்றி பேசினார்... ‘‘எல்லோருடைய ரத்தத்தையும் எல்லோருக்கும் செலுத்துவதற்கு ஏற்ப ரத்தத்தில் மாற்றம் செய்வதற்கென ஒரு புதிய என்சைமை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பச்சைக் காபிக் கொட்டையிலிருந்து இதை தயாரித்துள்ளோம். இது ‘ஏ’ பிரிவு ரத்தத்திலும், ‘பி’ பிரிவு ரத்தத்திலும் மட்டுமே காணப்படுகிற ஆன்டிஜெனை பிரித்து எடுத்துவிடுகிறது.

இதன் பலனால் அந்த ரத்தம் ‘ஓ’ பிரிவு ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடுகிறது. ‘ஓ’ பிரிவு ரத்தத்தை எல்லா ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கும் செலுத்த முடியும் என்பதால் இந்த என்சைம் செலுத்தப்பட்ட ‘ஏ’ பிரிவு, ‘பி’ பிரிவு ரத்தங்களையும் எல்லா நோயாளிகளுக்கும் செலுத்த முடியும். ‘ஏ’, ‘பி’ பிரிவு ரத்தங்களிலிருந்து ஆன்டிஜெனைப் பிரித்தெடுப்பது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நாங்கள் ‘பரிணாம வளர்ச்சி இயக்கம்’ (Directed evolution) எனும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கி இருக்கிறோம்.

எனவே, இந்த என்சைம் பல மடங்கு திறனுடன் ரத்தத்திலிருந்து ஆன்டிஜெனைப் பிரித்தெடுக்கிறது. இந்த முறையைப் பின்பற்றி எந்த ரத்தப் பிரிவினருக்கும் எல்லா பிரிவு ரத்தத்தையும் செலுத்தும் முறை விரைவிலேயே நடைமுறைக்கு வந்துவிடும். இதன் பலனால், தங்களுக்கு ஏற்ற ரத்தப் பிரிவு உள்ள ரத்தத்தைத் தேடி அலையும் அவதிக்கு இனி முற்றுப்புள்ளி வைக்க முடியும்’’ என்கிறார் வெற்றிக்களிப்புடன்!

(இன்னும் இருக்கு...)

டாக்டர் கு.கணேசன்