தெரிந்த இடங்கள் தெரியாத தகவல்கள்- தாஜ்மகால்



தாஜ்மகால் உருவானது  உண்மையில் மிகப்பெரிய சரித்திரம்தான். ஆசை மனைவிக்கு காதல் கணவன் எழுப்பிய அன்புச் சின்னம், இன்று உலகக் காதலின் அடையாளமாக நிற்கிறது.தாஜ்மகால் உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா நகரில் இருக்கிறது.  17ம் நூற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்டது. தாஜ்மகாலைப் பார்க்க விரும்பினால் டெல்லியில் இருந்து 200 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.

அதே ஆக்ரா நகரில் ஒரு செங்கோட்டையும் அருகே ஃபத்தேபூர் சிக்ரியும் உள்ளது.
தன் மனைவியை அளவு கடந்து காதலித்த ஷாஜகான், தான் அரியணை ஏறுவதற்காக தனக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக தனது 4 சகோதரர்களையும் அகற்றினான் என்பது முரண்.  மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு அவன் எல்லா மொகலாய மன்னர்களையும் போல கொடுங்கோலன்தான்.

சுமார் 22,000 தொழிலாளர்களின் உழைப்பால் உருவான பிரமாண்டம் தாஜ்மகால். சிலைகளை வடிக்கும் கலைஞர்கள், கற்களை அழகாகச் செதுக்கும் நிபுணர்கள் மற்றும் வண்ணக் கலவைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், கட்டிடம் கட்டுவதில் வல்லுநர்கள் எனப் பலரும் இதில் அடக்கம். இவர்கள் ஆசியாவின் பல பகுதிகளிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும், மத்திய் தரைக்கடல் பகுதியிலிருந்தும் இதற்காக வரவழைக்கப்பட்டனர்.

தாஜ்மகால் கட்டத் தேவைப்பட்ட சலவைக்கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டன. ராஜஸ்தானிலிருந்து அவற்றைக் கொண்டு வர ஆயிரம் யானைகள் உபயோகப்படுத்தப்பட்டன.  இவை தவிர 28 வகையான அபூர்வ கற்கள் ரஷ்யா, பெர்ஷியா, ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டன.பல வண்ண மணி வகைகள், செவ்வந்திக்கல், மணிக்கற்கள், நீல ரத்தினங்கள், விலை மதிக்க முடியாத கரும்பச்சை நீலக்கல் மற்றும் முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள் யாவும் தாஜ்மகாலை அலங்கரிக்க ஆங்காங்கே பதிக்கப்பட்டன.

தாஜ்மகாலை 1653ம் ஆண்டு கட்டி முடித்துவிட்டாலும்,  அதை அலங்கரிக்க மேலும் நான்கு ஆண்டுகள் ஆயின. இந்த அழகான தாஜ்மகாலை உருவாக்கிய சிற்பி யார் என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. உஸ்தாத் அகமது லகௌரி என்று அப்போதே எல்லோரும் யூகித்தாலும், வெளிப்படையாக அது யாருக்குமே தெரியாது. பெர்ஷியாவில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர் என்று சொல்லப்படுகிறது. ஏன் இந்த மாபெரும் கலைஞனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது? யாருக்குமே தெரியாது.

ஆனால் மொத்தமாக தாஜ்மகால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தது, அதன்படி அழகாக உருவாக்கியது எல்லாம்  ஷாஜகான்தான்.
முதலில் வாயிற்புறம், பிறகு தோட்டம், அழகாகக் கட்டப்பட்ட கல்லறை, பிறகு மசூதி என சுமார் 45 ஏக்கர் நிலத்தில், யமுனா நதிக்கரையோரம் கட்டப்பட்டது இந்த அழகு மாளிகை. தென்பக்கமாக உள்ள நுழைவாயில் பகுதியில் குரானின் வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. அழகான இந்த சொர்க்கத்திற்குள் வரும்படியான அழைப்பு அதில் காணப்படுகிறது.

தோட்டம் நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கும் சொர்க்கத்தில் உள்ள நந்தவனம்தான் உதாரணமாக சொல்லப்படுகிறது. தாஜ்மகாலை ஒட்டிப்பாயும் நதியில் தாஜ்மகாலின் பிம்பம் பிரதிபலிப்பது அழகிய கவிதை.மத்தியில் உள்ள பெரிய கல்லறைப் பகுதி தரையில் இருந்து சுமார் 23 அடி உயரத்தில் இருக்கிறது. அதைப் போலவே தாஜ்மகாலின் இடது - வலது புறங்களில் நான்கு பெரிய ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய கோபுரத்திற்கு அருகில் இரு பக்கம் சிறிய வட்ட வடிவமான தோற்றத்தில் இரண்டு கோபுரங்கள் உள்ளன.

இந்த அழகிய தாஜ்மகாலின் உள்ளே நுழையும் முன் மக்கள் தங்களது காலணிகளை கண்டிப்பாக வெளியே விடவேண்டும். இது விதிமுறை. உள்ளே நுழையும்போது சுற்றுப்புறச் சுவர்களில் உள்ள அலங்காரமான அராபிய மொழி வாசகங்கள் கண்களில் படும். அத்துடன் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அச்சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள வண்ணக் கற்கள் கண்களைப் பறிக்கும். பூக்களைப் போல் அவை அழகாகக் காட்சியளிப்பது மிகவும் நேர்த்தியானது. ஒவ்வொரு அங்குலமும் அங்கே பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது என்பது அதை நேரில் காணும்போது தெளிவாகப் புரியும்.

உள்ளே முதலில் சிறியதாக மும்தாஜ் மகாலின் கல்லறையும், அதற்கு அடுத்ததாக ஷாஜகானின் பெரிய கல்லறையும் வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படும். உள்ளே இரு சமாதிகளுக்குள் மிகவும் சாதாரண முறையில் இருவர் உடலும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்டவர்களின் சமாதி பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் எளிமையாகத் தெரியக்கூடாது என்கிற காரணத்தினால்தான் மேலே உள்ள கல்லறைகள் அலங்காரமாகக் கட்டப்பட்டன என்று சொல்றார்கள்.

தாஜ்மகாலுக்கு மேற்குப் பக்கத்தில் பெரிய பிரமாண்டமான மசூதியும், கிழக்குப் பக்கத்தில் இதைப் பிரதிபலிப்பது போல் ஒரு சிறு மசூதியும் காணப்படுகின்றன. இந்த இரண்டு மசூதிகளும் ‘ரெட் ஸ்டோன்’ என்னும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளன.மிகப்பெரிய கட்டிடம் என்றாலும் தாஜ்மகாலுக்குள் தேவையான வெளிச்சமும், காற்றும் கிடைப்பது போலவே அப்போதைய வல்லுநர்கள் கச்சிதமாக அமைத்துள்ளார்கள்.

மும்தாஜின் சிறிய கல்லறையின் மீது அவளைப் பற்றிய பல்வேறு புகழ்மாலைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் மன்னன் ஷாஜகானின் கல்லறை மீது பேனாவின் பெட்டியும், எழுதும் மேஜையும் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஒரு நிர்வாகிக்கு அவை தேவையானவை அல்லவா? இருவர் உடலும் சமாதிகளுக்குள் பத்திரமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் முகங்கள் மட்டும் புனித ஸ்தலமான மெக்காவை நோக்கியே இருக்கும். மும்தாஜின் வலது பக்கத்தில்தான் மன்னனின் கல்லறை இருக்கிறது.

கட்டிடம் முழுவதும் காணப்படும் அழகான வாசகங்களை எழுதியது, அமானத்கான் சிராஜ் என்பவர்தான். அப்போது அவரைவிட அழகாக எழுத யாருமில்லை. தன் பெயருக்குக் கீழே மிகவும் அடக்கமாக ‘முக்கியமில்லாத ஒருவன்’ என்று அவர் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளார்.

(பார்க்கலாம்)