ராணியின் கதை இது!



மர்மங்களின் மறுபக்கம் 53

1043 ஆம் ஆண்டு   பிரபுவும் அவரது மனைவியும் ‘பென்டிக்டைன்’ என்ற  ஒரு புதிய மடத்தை  கவென்டிரியில்  நிறுவினர்.  மிகவும் பிரபலமான அந்த சர்ச்சையும் அதைச் சார்ந்த மடத்தையும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி செயின்ட் ஓஸ்பர்க் கிலிருந்த செயின்ட் பீட்டர் ஸ்தாபனத்தின் நிர்வாகத்திற்கு ஒப்படைத்தார்கள் இத்தம்பதியினர்.

எல்லா மடத் தலைவர் களும், வர்ஜின்மேரி என லேடி கோடிவாவை புகழ்ந்தார்கள். அவள் மிகவும் தாராளமாகக் கொடுத்த தங்க நாணயங்களாலும்,  மற்ற வெகுமதி களாலும்   கவென்ட்ரி மடம்,   இங்கிலாந்தில்  இருந்த  மற்ற எல்லா சர்ச் மடங்களை விட, எலைட் சர்ச் மடமாக மாறியது. இதற்கு மட்டுமல்லாமல் லேடி கோடிவா பல கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் நன்கொடை களைத் அள்ளிக் கொடுத்தாள் என்கிறது வரலாறு.

மக்களின் வரி குறைக்க குதிரையில் நிர்வாணமாகச் சென்ற அவளது ஊர்வலமே அவளைப் பிரபலமாக்கியது என சொல்லப்படுகிறது. அதைப்பற்றி சுவாரசிய கதைகள் டஜன் கணக்கிலானவை.

முதலில் வந்த வரலாறுப்படி லேடி கோடிவா நிர்வாணமாக குதிரை சவாரி செய்தபோது, தனது நீண்ட முடியை முன்பக்கமாகப் போட்டுக் கொண்டதால் மார்பகங்கள் மறைக்கப்பட்டு விட்டன என்பது தெரிகறது. ஆனால் ஒருவர் சொன்னபடி பார்த்தால், நல்லது செய்யும் இப்பெண்ணுக்கு கடவுளே உதவ முன் வந்து, கண்களுக்குத் தெரியாத வகையில் அவளது உடலை  ஆடையால் மறைத்தார் என்கிறது ஒரு செய்தி.

இன்னொரு கதை,  தங்களுக்காகவே இந்த நல்ல பெண்மணி இப்படி நிர்வாண ஊர்வலம் வருவதால், அதைப் பார்ப்பது தவறு என மக்கள் தங்கள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தார்கள் என்கிறது. இன்னொரு சம்பவம். இது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த பழைய வரலாற்றுடன் இணைக்கப்பட்டது.

டெய்லர் டாம் மற்றவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் நிர்வாணமாக ஊர்வலம் வந்த ராணியின் மாசுமருவற்ற க்ளீன் அண்ட் கிளியர் அழகை ஜன்னல் வழியே கண்டுகளித்ததால் அவர் பார்வையே பறி போய்விட்டது என்றும் ஒரு  வரலாறு. ஆங்கிலத்தில் அதை ‘‘பீப்பிங் டாம்’’ (Peeping Tom) என்று கேலியாகச் சொல்வார்கள்.

1678 ஆம் ஆண்டு மே மாதம் கவென்டிரியில் இந்த நிர்வாண ஊர்வலம் பற்றிய விஷயம் மீண்டும் ஒரு முறை அரங்கேறியது.இந்த ஊர்வலத்தில் பங்கேற்றது ஒரு ஆண். இது எதற்காக என்றால், பழைய காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகத்தான். 1907 ஆம் ஆண்டு வரை எப்போதாவது ஒரு தடவை இந்த ஊர்வலம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது.

‘பீப்பிங் டாம்’ என்ற பழமொழியும் நிரந்தரமாகவே ஆங்கில இலக்கியத்தில் நிலையாக நின்று விட்டது. அடுத்த இரு நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடக  ஆசிரியர்கள் இந்த ஊர்வல மேட்டரை தங்களது நாடகங்களில் புகுத்த முயற்சித்தனர்.மெளரிஸ் மேட்டர்லிங்க்  என்னும் பெல்ஜியத்தைச் சேர்ந்த, 1911 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆசிரியர்,  தனது ‘மோனாவென்னா’ என்னும் நாடகத்தில் லேடி கோடிவாவை இத்தாலியப் பெண்மணியாக மாற்றினார்.

பட்டினி கிடக்கும் மக்கள் இறக்கக்கூடாது என் பதற்காக  சைக்கோ ஜெனரல் முன், ஒற்றை மேலாடையுடன்  மட்டும் நின்றாள் என்றும், அதையும் விலக்கி விட்டால் அவளது  நிர்வாணக் கோலத்தை அந்த ஜெனரல்  பார்க்க முடியும் என்பதைப் போல் அந்த நோபல் பரிசு  பெற்ற  ஆசிரியர் சித்தரித்திருந்தார்.

இன்னொரு ஆஸ்திரிய நாடக ஆசிரியர்- அவரது பெயர் ஆர்தர் சினிட்ஜெலர் - நாடக நாயகி பிராவின் எல்சி தனது தந்தையின் உயிரைக் காக்க  நிர்வாணமாக வேண்டிய  சூழ் நிலையில் தற்கொலை செய்துகொள்கிறாள் என்று அந்த நாடகத்தில் எழுதியிருந்தார்  ஆசிரியர்.
1966 ஆம்  ஆண்டு லேடி கோடிவாவின் கதை வேறுவிதமாக கற்பனையாக மாறியது. பிரிட்டனின் அரச குடும்பத்தில் யார், எவர் என்பதை முதலிலிருந்து விளக்கும் வகையில் ஒரு புத்தகம் வெளியானது.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)