உயரம்தான் என் ப்ளஸ்



மிஸ் தமிழ்நாடு ஸ்ரீஷா

5.9 அடி உயரம், சிரித்த முகம் என மிஸ் தமிழ்நாடு 2018 பட்டம் பெற்ற மகிழ்வில் அடுத்து மிஸ் சவுத் இந்தியாதான் டார்கெட் என கண் சிமிட்டுகிறார் ஸ்ரீஷா.

உங்களைப் பத்தி சொல்லுங்களேன்?
‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா ரிடையர்டு. நான் மயிலாப்பூர்லதான் ஸ்கூல் படிச்சேன். இப்போ எம்.ஓ.பி. வைஷ்ணவாவில் எலெக்ட்ரானிக் மீடியா படிக்கிறேன். இன்ஜினியரிங்தான் வீட்ல எல்லாருடைய சாய்ஸ். ஆனால் எனக்கு நிச்சயமா இன்ஜினியரிங் பெரிய டாஸ்க்.சரி ஒரு டிகிரி வேணும். அதனால இந்த எலெக்ட்ரானிக் மீடியாவை தேர்வு செய்துகிட்டேன்!”

எப்படி மிடில் க்ளாஸ் குடும்பத்துல இருந்து மிஸ் தமிழ்நாடு?
“எனக்கு நல்லாவே தெரியும் நான் கொஞ்சம் பப்ளி லுக்ல இருப்பேன். எனக்கு ஆக்டிங் பிடிக்கும். ஆனால் மாடலிங், பியூட்டி போட்டிகள் எனக்கு செட் ஆகுமான்னு இதுல எனக்கு ஒரு தயக்கம் உண்டு. ஆனாலும் வாய்ப்புகள் ஒரு தடவைதானே கதவைத் தட்டும். அதை ஏன் விடணும்? ஜெயிக்கிறோம் தோற்கறோம்னு அதைப் பத்தி யோசிக்காம கலந்துப்போமேன்னு யோசிச்சேன். அப்படிதான் ‘ஃபேஸ் ஆஃப் சென்னை’ போட்டி.

அதுல கொஞ்சம் மிஸ் ஆச்சு. எங்கே தப்பு பண்ணினேன், ஏன் அந்த போட்டி எனக்கு சரியான ரிசல்ட் கொடுக்கலைன்னு யோசிச்சு கொஞ்சம் கடினமாக ஒர்க் அவுட், டயட் இப்படி என்னை நானே மாடலுக்கு உரிய உருவமா மாத்திக்கிட்டேன். அப்போ அந்த நேரத்துலதான் மிஸ் தமிழ்நாடு போட்டி மீண்டும் எனக்கு வாய்ப்புக் கொடுத்துச்சு!

உண்மையை சொன்னா ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கொஞ்சம் வசதியான பெண்களால மட்டும்தான் இந்த பியூட்டி பீஜியண்ட் போட்டிகள்லாம் செட் ஆகும். ஆனால் அதையும் மீறி என்னால என்ன முடியுமோ... என் குடும்பத்துடைய சக்தி என்னவோ அதுல என்னுடைய பெஸ்டை கொடுத்தேன். கடைசி நிமிடத்துல கூட காஸ்ட்யூம் ரெடி பண்ண வேண்டிய ரிஸ்க்லாம் இருந்துச்சு. என் குடும்பமும் நிறைய ஆதரவு கொடுத்தாங்க!”

உங்களோட ஸ்பெஷலா நீங்களே எதை சொல்வீங்க?
“எனக்கு என் உயரம்தான் ப்ளஸ்னு நினைக்கிறேன். சென்னைல இருந்து ஒரு உயரமான பொண்ணு வந்தான்னுதான் என்னை அடையாளமா சொன்னாங்க. அடுத்து தன்னம்பிக்கை. எனக்கு நானே அதிகமா உற்சாகமும், நம்பிக்கையும் கொடுத்துப்பேன். இதுதான் என் ஸ்பெஷலா நான் உணர்றேன்!”

இந்த அழகிப் போட்டிகள் தேவையான்னு ஒரு சர்ச்சை இருக்கே… உங்க பதில் என்ன?
“நானே சொல்றேன்... நான் கலந்துகிட்ட மிஸ் தமிழ்நாடு 2018லயே என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் இருந்தாங்க. அந்த நிமிஷம், நாம எப்படி யோசிக்கிறோம். கேட்கிற கேள்விக்கு எப்படிப்பட்ட பதில் கொடுக்குறோம் இப்படி பல கட்டங்கள் உண்டு. எல்லா பெண்களுமே அழகுதான். ஆனால் இப்படியான வாய்ப்புகள் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்குமா, கிடைச்சாலும் சரியா பயன்படுத்திக்கிற திறமை இருக்கணும். அழகிப் போட்டி மட்டும் இல்ல  உலகத்துல எல்லாப் போட்டிகளும் வாய்ப்புகளும் நமக்கு ஒரு தடவைதான் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி நம்ம கடின உழைப்பையும் கொடுத்தா எதுவும் சாத்தியமே!”

உங்க பாதையிலயே வருகிற இளைஞர்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?
“மாடலிங், அழகுப் போட்டிகள் மட்டும் இல்லை. பெண்கள் வேலைக்குன்னு போனாலே ஏகப்பட்ட இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதெல்லாம் மீறி நமக்கான அங்கீகாரத்தை அடையணும். ஆனாலும் நம்முடைய ரியாலிட்டிய விடக்கூடாது. அப்படிதான் இந்தப் போட்டிகளை நானும் எதிர்கொண்டேன். ஏன் என்னை விட ரொம்ப அழகான பெண்கள் கூட இருப்பாங்க. ஆனால் என்னைத் தேடி இந்த வாய்ப்பு வந்துச்சு பயன்படுத்திக்கிட்டேன்!”

டயட் சீக்ரெட் ப்ளீஸ்...
“முக்கியமா ஜங்க் ஃபுட்ஸ்,  ஹோட்டல் சாப்பாட்டுக்கு தடா. ஒர்க் அவுட், டயட், இப்படிதான் இருக்கேன். ஆனாலும் சந்தோஷமா இருக்கேன். ரிசல்ட் கிடைக்குதே. அடுத்த டார்கெட் மிஸ் சவுத் இந்தியாதான். அதுக்கு கொஞ்சம் கடினமா முயற்சி செய்திட்டு இருக்கேன். எனக்கு முன்னாள் மிஸ் தென்னிந்தியா வெற்றியாளர்கள் மீரா மிதுன் மற்றும் அம்பிகா பிரசாத் துபே இருவரும் நிறையவே உதவியிருக்காங்க. அவங்களுக்கு என்னுடைய நன்றிகள்!”

- ஷாலினி நியூட்டன்