கருணையின் ஊற்று



பெண் மைய சினிமா

ஒரு மனிதனின் வாழ்க்கையில் சிறந்த பகுதி என்னவென்றால், நினைவில் வைத்துக்கொள்ளாத, சின்னஞ்சிறிய, அனாமதேயமாக அன்பும், கருணையும் நிறைந்த செயல்களை செய்த தருணங்கள்தான்.
- வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

ஒரு சில படங்கள் நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை. அவற்றுள் முக்கியமானது ‘அமிலி’.பிரான்ஸ் ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்த அப்பாவுக்கும். பள்ளிக்கூட ஆசிரியையான அம்மாவுக்கும் மகளாக அமிலி பிறக்கிறாள். தனது காலணிகளை மேசையில் வரிசையாக அடுக்கி வைத்து அழகு பார்த்து அதற்கு பாலீஷ் போடுவது, டூல் பாக்ஸில் இருக்கும் உபகரணங்களைச் சுத்தம் செய்வது, சுவரில் ஒட்டியிருக்கும் பழைய காகிதங்களைப் பிய்த்து எடுத்து புதியவற்றை ஒட்டுவது.. என்று அப்பாவின் அன்றாட நாட்கள் விநோதமாக ஓடுகின்றன.

பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் தனது ஹேண்ட் பேக்கை கழற்றி அதிலிருக்கும் பொருட்களை மேசையில் அடுக்கி சரிபார்த்து சுத்தம் செய்வது, வீட்டின் தரைகளை கண்ணாடிபோல கழுவுவது என அம்மாவின் தினசரி நாட்கள் ஓடுகின்றன. எப்போதுமே ஏதோவொரு பதட்டத்தில் தவிக்கின்ற அம்மாவுக்கும், தேவையற்ற வேலையில் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் அப்பாவுக்கும் இடையில் ஓர் அனாதையைப் போல அமிலி வளர்கிறாள் பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் வேண்டி ஏங்குகிறாள். ஆனால், அவரின் தந்தை அவளை தொட்டுக்கூட பேசுவதில்லை.

மாதத்திற்கு ஒருமுறை மட்டும் அமிலியைப் பக்கத்தில் அழைத்து அவளின் உடல்நிலையைப் பரிசோதிக்கிறார். அப்படி பரிசோதிக்கும்போது அப்பாவின் தொடுதலால் அமிலியின் இதயம் ஆனந்தத்தில் வேகமாகத் துடிக்கிறது. ஆனால், அமிலிக்கு இதயம் சார்ந்து ஏதோ பிரச்சனை இருப்பதால்தான் அவளின் இதயம் வேகமாகத் துடிக்கிறது என்று அவர் தவறாகப் புரிந்துகொள்கிறார். இன்னொரு மருத்துவரிடம் காட்டி செகண்ட் ஒப்பீனியன் கேட்கக்கூட அவர் முயலுவதில்லை.

அமிலியை ஒரு இதய நோயாளியைப் போலவே பெற்றோர்கள் நடத்துகின்றனர். அவளுக்கு ஆறு வயதாகிறது. இதயத்தில் கோளாறு இருப்பதால் அமிலியைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அம்மா பாடம் சொல்லிக்கொடுக்கிறார். ஏதும் அறியாத அப்பாவியான அமிலி விநோதமான கனவிலும், நனவிலும் சஞ்சரிக்கிறாள். அவளின் பார்வையில் மேகக் கூட்டங்கள் விளையாட்டுப் பொம்மைகளாகவும், முயல் குட்டிகளாகவும் பரிணமிக்கின்றன. அதை அம்மா வாங்கிக்கொடுத்த கேமராவில் புகைப்படங்களாக சேமித்து வைக்கிறாள்.

அவள் ஆசையாய் வளர்க்கும் தங்க மீன், தொட்டியில் இருந்து கீழே தவறி விழுந்துவிடுகிறது. தன்னுடைய குடும்பத்தைப் பிடிக்காமல்தான் அது தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக அமிலி நினைக்கிறாள். உடனே அந்த மீனைக் கொண்டுபோய் அருகிலிருக்கும் ஏரியில் விட்டுவிடுகிறாள். கொஞ்ச நாட்களில் அம்மா இறந்துவிடுகிறார். அப்பா அருகிலிருந்தாலும், வெளித் தொடர்பு அதிகம் இல்லாததால் கொடிய தனிமைக்கு
ஆளாகிறாள்.

யாருமற்ற தனிமை சற்றே விசித்திரமான மனப்போக்கு கொண்ட ஒரு பெண்ணாக அவளை உருமாற்றுகிறது. அமிலி வளர்ந்து பெரியவளாகிறாள். நகரத்தில் இருக்கும் ஒரு காபி ஷாப்பில் வெயிட்டராக வேலைக்குச் சேர்கிறாள். வாரம் ஒரு முறை அப்பாவைக் காண வீட்டுக்கு வந்துபோகிறாள். இருபத்திநான்கு வருடங்களாக அமிலியின் வாழ்க்கை ஒரே மாதிரி எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தனிமைத் துயரில் நகர்கிறது.

ஆகஸ்ட் 31, 1997 அன்று அவளின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சம்பவம் நிகழ்கிறது. அமிலி வீட்டில் தன்னந்தனியாக இருக்கிறாள். அப்போது இங்கிலாந்து இளவரசி டயானா விபத்தில் இறந்த செய்தியை பெருத்த சத்தத்துடன் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அந்த நேரத்தில் வாசனைத் திரவியத்தின் பாட்டிலை திறந்துகொண்டிருக்கும் அமிலி அதிர்ச்சியில் பதட்டமடைகிறாள். பாட்டிலின் மூடி கையிலிருந்து நழுவி தரையில் உருண்டுபோய் சுவரில் மோதி, அடிப்புறத்தில் இருக்கும் வழுவற்ற செங்கல்லை பெயர்த்து எடுத்துவிடுகிறது. ஆச்சர்யமடையும் அமிலி அந்த செங்கல்லை எடுத்துப்பார்க்கிறாள்.

ஒரு சிறிய ஓட்டை விழுந்துகிடக்கிறது. அதற்குள் மூடிவைக்கப்பட்ட ஒரு இரும்பு டப்பா கிடக்கிறது. அதைத் திறந்து பார்க்கிறாள். அதற்குள் இருக்கும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும், ஒரு சிறுவனின் புகைப்படமும் அமிலியின் கண்களை பரவசத்தில் தள்ளுகின்றன. அந்த டப்பாவை ஒரு புதையலைப் போல பாதுகாக்கிறாள். நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டில் குடியிருந்த சிறுவன் ஒளித்து வைத்த பொக்கிஷம்தான் அந்த டப்பா என்று அவளுக்குத் தெரிய வருகிறது.

அந்தச் சிறுவனை கண்டுபிடித்து அவனிடம் அதை திருப்பிக்கொடுக்க முடிவு செய்கிறாள். அவனை தேடத் துவங்குகிறாள். அதற்காக பலரைச் சந்திக்கிறாள். அவளின் வீட்டுக்கு அருகில் பல வருடங்களாக குடியிருக்கும் ஓவியர் அந்தச் சிறுவன் இப்போதிருக்கும் முகவரியையும் அமிலியிடம் கொடுக்கிறார். அந்தச் சிறுவன் இப்போது ஐம்பது வயதை நெருங்கும் முதியவர். ஒவ்வொரு புதன்கிழமையும் கோழிக்கறி வாங்க சந்தைக்கு வருவது அவரின் வழக்கம். ஒரு புதன்கிழமை அவர் சந்தைக்கு வரும் வழியில் இருக்கும் ஒரு பொதுத் தொலைபேசி நிலையத்தில் மணி அடிக்கிறது.

சுற்றிலும் யாரும் இல்லை. அதனால் அந்த அழைப்புக்கு பதில் சொல்ல அவர் தொலைபேசி நிலையத்துக்குள் நுழைகிறார். ரிசீவரை எடுத்து காதில் வைக்கும்போது அழைப்பு துண்டிக்கப்படுகிறது. அவருக்கு அழைப்புவிடுத்த அமிலி அவர் என்ன செய்கிறார் என்று ரகசியமாகப் பார்க்கிறாள். தொலைபேசிக்கு அருகிலிருந்த அந்த டப்பா அவரின் கண்ணில் படுகிறது. உடனே அதை எடுத்து திறந்து பார்க்கிறார். அதற்குள் இருப்பதைப் பார்க்கும் அவரின் கண்கள் பரவசத்தில் கலங்குகின்றன. மகிழ்ச்சியில் திளைக்கிறார். அவரின் மகிழ்ச்சி அமிலியை இனம்புரியாத ஓர் உணர்வுக்கு அழைத்துச் செல்கிறது. வானில் மிதப்பதைப் போல உணர்கிறாள்.

அமிலிக்கும் வாழ்க்கையே புதியதாக மாறிவிட்டதாக தோன்றுகிறது. ஒரு பறவையைப்போல பறக்க ஆரம்பிக்கிறாள். தன்னுடைய கவலை, தனிமையை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனாமதேயமாக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி தானும் மகிழ்கின்ற ஒரு அதிசய பெண்ணாக அமிலி பரிணமிக்கிறாள். ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவனைச் சந்திக்கிறாள். அவன் பாஸ்போர்ட் புகைப்பட நிலையத்தில் வேண்டாமென்று வெளியே வீசப்படும் கத்தரிக்கப்பட்ட புகைப்படங்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவன். பல நாட்களாக அப்படி சேகரித்த புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை ஒரு நாள் அவன் தவறவிடுகிறான்.

அந்த ஆல்பம் அமிலியின் கையில் கிடைக்கிறது. அந்த ஆல்பத்தில் இருக்கும் புகைப்படங்கள் அந்த இளைஞனின் மீது அமிலிக்கு காதல் ஈர்ப்பை உண்டாக்குகிறது. அவனை சந்திக்க விரும்புகிறாள். ஆனால், ஏதோவொன்று அவளை தடுக்கிறது. தான் யாரென்று வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அந்த ஆல்பத்தை அவனிடம் கொண்டு சேர்க்கிறாள். அமிலியின் அந்த பண்பு அவனுக்கும் அவள் மீது ஈர்ப்பை உண்டாக்குகிறது. இருவரும் இறுதியில் இணைகிறார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திய அமிலி தன்னுடைய மகிழ்ச்சியை காதலில் கண்டடைவதோடு படம் முடிகிறது.

குழந்தைப்பருவத்துப் பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த முதியவர் மதுவருந்த ஒரு பாருக்கு வருகிறார். அங்கே அமிலியும் இருக்கிறாள். ‘‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட வாழ்க்கையில் ஒரு அற்புதமான விஷயம் நடந்துச்சு. நான்  தொலைச்சிட்டேன்னு நினைச்ச பால்யம் எனக்கு மறுபடியும் கிடைச்சிடுச்சு...’’ என்று நெகிழ்கிறார். அவர் பேசுவதை அமிலி மட்டுமே கவனிக்கிறாள். அவர் அமிலியைப் பார்க்கும்போது அவள் தலையைத்  திரும்பிக்கொள்கிறாள். ‘‘திரும்பிப் பார்க்கறதுக்குள்ள அம்பது வருஷங்கள் ஓடிட்டது.

என் பால்யம் இந்த சின்ன டப்பாவுக்குள் முடிஞ்சு போயிடுச்சே’’ என்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார். நிகழ்காலத்துக்குள் வரும் அவர் அமிலியைப் பார்த்து ‘‘உனக்கு குழந்தைகள் உண்டா?’’ என்று கேட்கிறார். அவள் ‘‘இல்லை’’ என்கிறாள். ‘‘எனக்கு உன்னப்போல ஒரு பொண்ணு இருக்கிறா. ஆனா, அவ எங்கூட பேசறதில்ல. அவளுக்கு ஒரு மகன் இருக்கிறாங்கிறது எனக்குத் தெரியும்’’னு வேதனையடைகிறார். என்னுடைய பால்யத்தை மீட்டுத் தந்தது நிச்சயமாக ஒரு தேவதையாத்தான் இருக்கும் என்று கலங்குகிறார். அந்த முதியவரின் தனிமை, வாழ்வினூடாக பாரீஸ் நகர மக்களின் சமகால வாழ்க்கையை அழகாகப் பிரதிபலிக்கிறது இந்தப் படம்.

Jean-Pierre Jeunet இயக்கத்தில் 2001ல் வெளியான இந்த பிரெஞ்ச் மொழி திரைப்படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அமிலியாக நடித்த Audrey Tautou நடிப்பு அசத்தல். அவரின் ஹேர்ஸ்டைல் பிரெஞ்ச் பெண்கள் மத்தியில் பெரிய புரட்சியையே செய்தது. சாலையில் கண் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் முதியவரின் கையைப்பிடித்து சாலையை கடந்து செல்ல அமிலி உதவுகிறாள்.

இருவரும் சாலையைக் கடக்கும்போது வழியெங்கும் இருக்கும் காட்சிகளை அவரிடம் வர்ணித்துக்கொண்டே செல்கிறாள். சாலையைக் கடந்து அவரை விட்டுட்டு அவள் சென்றதும், கண் தெரியாதவரின் முகம் பிரகாசத்தில் ஒளிவீசுகிறது. இப்படி அவள் சந்திக்கிற எல்லோருக்கும் மகிழ்ச்சியை அள்ளிவீசுகிற ஒரு தேவதையைப்போலவே படம் முழுவதும் வலம் வருகிறாள் அமிலி.

அமிலி ஒரு பிச்சைக்காரனுக்குக் காசு தருவாள். அவன் ‘‘இன்னைக்கு நான் விடுமுறையில் இருக்கிறேன்’’ என்று காசை திருப்பித்தந்துவிடுவான். ஒருபக்கம் நகைச்சுவையாக இருந்தாலும், பிரான்ஸில் பிச்சைக்காரர்கள் கூட விடுமுறை எடுத்துக்கொள்வது ஆச்சர்யமளிக்கிறது. இருபது வருடங்களாக தன்னந்தனியாக  வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் ஓவியர், தன்னைவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்ற கணவனின் துரோகம் காரணமாக நாற்பது வருடங்களாக துயரத்தில் இருக்கும் வயதான பெண், காய்கறிக் கடையில் வேலைக்காரனை அவமதித்துக்கொண்டே இருக்கும் முதலாளி, காபி ஷாப்பில் முன்னாள் காதலிகளை வேவு பார்த்துக்கொண்டே இருக்கும் காதலன், எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்தில் வருந்துகின்ற எழுத்தாளன், தனக்கு ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுகிற பெண், வழிப்போக்கர்கள் என்று தன்னைப்போலவே பாரீஸ் நகரின் நவீன வாழ்க்கைச் சூழலால் தனித்துவிடப்பட்டிருக்கும் பலருக்கு சின்னச் சின்ன விசயங்களால் மகிழ்ச்சியை சுவாசிக்க தருகிறாள்.

அவர்கள் அனைவருக்கும் வேண்டியதை செய்து தந்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள். மட்டுமல்ல, வெளிநாட்டுக்கு சுற்றுலா போக ஆசையிருந்தும் போக முடியாமல் இருக்கும் அப்பாவுக்குக் கூட அனாமதேயமாக  சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்து தருகிறாள். நம்மிடம் இல்லாத ஏதோ ஓர் அற்புதமான குணம் அமிலிக்குள் இருக்கிறது. அதனாலேயே அவள் நமக்கும், அவளைச் சுற்றியிருந்தவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விசித்திரமானவளாக காட்சி தரலாம். ஆனால், இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சி  சின்னச் சின்ன விசயங்களில்தான் ஒளிந்துகிடக்கிறது என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லிச் செல்கிறாள் இந்த அமிலி.

- த.சக்திவேல்