ஆந்திரா ஆவக்காய்Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                             குருவை மிஞ்சிய சீடன்

‘படத்தில் ஏராளமான சிஜி ஓர்க்ஸ் இருக்கிறதா? அப்படியானால் ஒளிப்பதிவுக்கு கூப்பிடுங்கள் செந்தில் குமாரை...’ என்பார்கள். அந்த அளவுக்கு இந்திய திரையுலகின் மோஸ்ட் வாண்டட் ஒளிப்பதிவாளராக இருக்கிறார் செந்தில். ‘அருந்ததி’, ‘மகதீரா’, ‘எமதொங்கா’ ஆகியவை செந்திலின் பெயர் சொல்லும் படங்கள். ‘அய்தே’ படத்தில் கேமராமேனாக அறிமுகமான இவர், இப்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் ‘ஈகா’ (தமிழில் ‘நான் ஈ’) படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவ்வளவு தகவல்களை பட்டியலிட காரணமிருக்கிறது. சல்மான் கான் நடிக்கவிருக்கும் ‘தபங் 2’ படத்துக்கு செந்தில் குமார்தான் கேமராமேன்.

நடிகர் ரவிதேஜாவுக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத்துக்கும் திரையுலகில் நிலையான ஓர் இடத்தை பெற்றுத் தந்த படம், ‘இடியட்’. இதன் 2ம் பாகம் இந்த ஆண்டு தொடங்குவதாக இருந்தது. இப்போது அது தள்ளிப் போயிருக்கிறது. பதிலாக, புதிய கதை ஒன்றில் இந்த ஜோடி இணைகிறது. அந்தப் படத்துக்கு, ‘தேவுடு சேசினா மனுஷலு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்பு என்டிஆரும், கிருஷ்ணாவும் இணைந்து நடித்த வெற்றிப் படத்தின் தலைப்புதான் இந்த ‘தேவுடு சேசினா மனுஷலு’ என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் மணிசர்மாவிடம் கீ போர்ட் ப்ளேயராகவும், உதவியாளராகவும் இருந்தவர்தான் எஸ்.எஸ்.தமன். அது, அந்தக் காலம். இன்று, தமன் முன்னணி இசையமைப்பாளர். அது மட்டுமல்ல... முன்பு மணிசர்மாவை தேடித் தேடி ஒப்பந்தம் செய்தவர்கள் அனைவரும், இப்போது தமனின் கால்ஷீட்டுக்காக மாதக் கணக்கில் காத்திருக்கிறார்களே தவிர, மழைக்கு கூட மணிசர்மாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோ பக்கம் ஒதுங்குவதில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கிறார் மணிசர்மா.

‘மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர், நடிகனாக அறிமுகமாக இருக்கிறார். அவர், அல்லு சிரிஷ். ‘கீதா ஆர்ட்ஸ்’ தயாரிப்பாளார் அல்லு அரவிந்தின் இரண்டாவது மகனும், நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியுமான இவருக்காக ஆக்ஷன் கதையை கேட்டு வருகிறார்கள்.

முன்பு க்ளப் டான்ஸ் ஆடுவதற்காகவே தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தார்கள். பிறகு கதாநாயகிகளே அந்த ரோலையும் ஏற்றார்கள். இப்போது இந்தி நடிகைகளை ஒரு பாடலுக்காக அழைத்து வரும் போக்கு அதிகரித்திருக்கிறது. அந்த வகையில், புது வரவு, ‘ராஸ்கல்ஸ்’ இந்திப் பட புகழ், லிசா ஹேடன். ‘செக்ஸ் பாம்’ என்று பெருமூச்சு விட்டபடியே அழைக்கப்படும் லிசா, ராம் சரண் தேஜா - தமன்னா நடிக்கும் ‘ரச்சா’ படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சிரஞ்சீவியின் 150வது படத்தை வி.வி.விநாயக் இயக்குகிறார்... இல்லை இல்லை எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்யப் போகிறார்... நோ நோ ஏ.ஆர்.முருகதாஸுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது... என்றெல்லாம் மாதம் ஒரு தகவல் கசிகிறது.  லேட்டஸ்ட் ஆக இந்தப் பட்டியலில் ஷங்கரும் இணைந்திருக்கிறார். சுதந்திர போராட்ட வீரரை வைத்து ஷங்கர் உருவாக்கியிருக்கும் லைன், சிரஞ்சீவிக்கு பிடித்திருக்கிறதாம்.
- கே.என்.எஸ்.