ராசி இல்லாத நடிகை ராசியான கதை



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஒரு காட்சியில் நடிப்பதை அல்லது தோன்றுவதை பலரும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், அதையே சற்று சங்கடமாக உணர்கிறார் காஜல் அகர்வால். இத்தனைக்கும் அவர் நடித்த முதல் படம், ஐஸ்வர்யாராயுடன்தான்!

சுமன் அகர்வாலுக்கு மும்பையில் வேலை. எனவே, அவரை திருமணம் செய்த கையோடு மும்பை வாழ்க்கைக்கு பழகிக் கொண்டார், வினய் அகர்வால். இவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக 1985, ஜுன் 19 அன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு காஜல் என்று பெயரிட்டார்கள்.

தூளியில் உறங்கி, பின்னர் தவழ ஆரம்பித்து, அப்படியே தத்தித்தத்தி சுவற்றைப் பிடித்தபடி நடக்கத் தொடங்கிய பருவத்தை காஜல் அடைந்ததும், வினய் அகர்வால், மீண்டும் கருவுற்றார். இம்முறையும் பெண் குழந்தையே பிறந்தது. அதற்காக அவர்கள் வருத்தப்படவில்லை. பதிலாக வாரி அணைத்து கொஞ்சியதுடன், 2வதாக பிறந்த குழந்தைக்கு நிஷா, என பெயரிட்டார்கள்.

தன்னைப் போலவே, ஆனால், சின்னதாக ஓர் உருவம் புதிதாக வீட்டுக்கு வந்த தில் காஜலுக்கு மகிழ்ச்சி. யாரும் சொல்லித் தராமலேயே, ‘அக்கா’ என தன்னை உணர்ந்தார். தங்கையுடன் விளையாடுவதும், தான் அறிந்ததை சொல்லித் தருவதும், அவ்வப்போது சண்டையிடுவதும் காஜலின் அன்றாட நடவடிக்கையானது.

அழகாக பிறந்தது வரம் என்றால், அந்த அழகு, வயது ஏற ஏற மெருகேறுவது கொடுப்பினை. காஜல், கொடுத்து வைத்தவர். அதனால்தான் பள்ளி நாட்களிலேயே அனைவரும் திரும்பிப் பார்க்கும் தோற்றத்துடன் விளங்கினார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆம், 19 வயதில், இந்தி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைத்தது. அந்தப் படம், ‘க்யூன்..! ஹோ கயா நா’. ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில், ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்துச் செல்லும் ரிச் கேர்ள்சில் ஒருவராக வந்து போனார். எனவேதான் சங்கடம் கலந்த புன்னகையுடன், இந்தப் படத்தை தனது முதல் படமாக சொல்ல காஜல் தயங்குகிறார்.

ஆனால், வினய் அகர்வால், இந்த வாய்ப்பையே தனது மகளின் எதிர்காலமாக உணர்ந்தார். எனவே, யோகா, உடற்பயிற்சி, நடனம்... என மகளை பழக்கினார். நல்ல கோ ஆர்டினேட்டரை பிடித்து மாடலிங் செய்ய வைத்தார். அடுத்தடுத்து வந்த சினிமா வாய்ப்புகளை மவுனமாக தவிர்த்து, காஜல் வளர்வதற்காக காத்திருந்தார்.

மாஸ் கம்யூனிகேஷன் ப்ளஸ் ஜர்னலிசத்தில் பட்டம் பெற்றதும், காஜலுக்கு கதாநாயகி சான்ஸ் தேடி வந்தது. அதுவும், தெலுங்கில். என்.டி.ராமாராவின் பேரன் கல்யாண் ராம், ஹீரோவாக நடிக்க, புகழ்பெற்ற இயக்குநர் தேஜா, இயக்கும் படம். எனவே நிச்சயம், தன் மகளுக்கு பெயரும், புகழும் கிடைக்கும் என வினய் அகர்வால் நம்பினார். காஜலுக்கும் ஒளிமயமான எதிர்காலம் கண்முன்னால் விரிந்தது.

ஆனால், ‘லஷ்மி கல்யாணம்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆன அந்தப் படம், வந்த வேகத்தில் சுருண்டது. காஜலின் எதிர்காலமும் கேள்விக்குறியானது. இதற்கிடையில் தமிழ் சினிமாவின் பெயர் பெற்ற இயக்குநரான பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்து முடித்தார் காஜல். ஆனால், வெவ்வேறு காரணங்களுக்காக அந்தப் படம் ரிலீசாவதில் தாமதமானது. இதனால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை காஜலின் மீது விழுந்தது.

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை. அசராமல் முயற்சியை தொடர்ந்தார். கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவான, ‘சந்தமாமா’ தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமானார். சலனமில்லாமல் வெளியான இந்தப் படம், ஆந்திர திரையுலகில் சலனத்தை ஏற்படுத்தியது. வசூலையும் வாரி குவித்தது.

ஆனால், தமிழில் அவர் நடித்த ‘மோதி விளையாடு’ பிலோ ஆவரேஜ் வரிசையில் சேர்ந்தது. பரத்துடன் நடித்த ‘பழனி’, ஆவரேஜ் லிஸ்டில் இணைந்தது.

இதனால் பத்தோடு பதினொன்றாக வலம் வர வேண்டிய நிலை. இதை அடியோடு மாற்றியது ‘மகதீரா’ தெலுங்குப் படம். வசூலில் பல ரிக்கார்ட் சாதனைகளை நிகழ்த்திய இப்படத்தின் வெற்றிக்கு பிறகே, காஜல், தான் கனவு கண்டபடி முன்னணி நடிகையானார்.

தொடர்ந்து அவர் கதாநாயகியாக நடித்த ‘பிருந்தாவனம்’, ‘டார்லிங்’, ‘மிஸ்டர்.பெர்பக்ட்’, ‘பிஸினஸ்மேன்’ தெலுங்குப் படங்களும், ‘நான் மகான் அல்ல’ தமிழ்ப் படமும் வெற்றிப்படங்களாக அமையவே, மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் ஆக மாறியிருக்கிறார் காஜல்.

விளைவு, ராசி இல்லாத நடிகை என்று சொன்னவர்களே, இன்று ராசியான நடிகை என காஜல் அகர்வாலை கொண்டாடுகிறார்கள். அதுதான் சினிமா!
- கே.என்.சிவராமன்