லாரன்சை அவமதிக்கவில்லை... லஷ்மிராய் ஓபன் டாக்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  கிசுகிசுக்களுக்கும், லஷ்மிராய்க்கும் அவ்வளவு நெருக்கம். நெடுநெடுவென்று வளர்ந்த மாதிரியே, இவரைப்பற்றி நித்தம் நித்தம் ஒரு செய்தியும் வளரும். ‘‘இனிமே இதைப்பத்தி நான் கவலைப்படப் போறதில்லை...’’ என்று சிரிக்கிறார்.

நீங்க என்ன ‘சீசன் ஆர்ட்டிஸ்ட்டா?’

யோசிச்சு பார்த்தா, அப்படித்தான்னு தோணுது. தமிழில் ‘கற்க கசடற’ முதல் படம். அதுக்கு பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு எல்லா மொழியிலும் ஒரு ரவுண்டு அடிச்சிட்டேன். இப்ப ‘காஞ்சனா’வின் கன்னட ரீமேக்கான ‘கல்பனா’, மலையாளத்தில் திலீப் கூட ‘மிஸஸ் மாயமோகினி’, தெலுங்கில் பாலகிருஷ்ணா கூட ‘அதிநாயகுடு’ படங்கள் பண்றேன். தமிழில் புதுப்படம் கமிட் பண்ணல. ரெண்டு மூணு படம் பேச்சுவார்த்தையில் இருக்கு. ஸோ, நீங்க சொன்னது சரிதான். ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு சீசனுக்கும் நான் வந்து கலக்கிட்டு, சட்டுனு போயிடுவேன். இதுவும் எனக்கு ஜாலியாத்தான் இருக்கு.

கார்த்தி படத்தில் என்ன பிரச்னை?

ஹலோ... என்னை பார்த்தா, பிரச்னை பண்ற பொண்ணு மாதிரியா தெரியுது? சுராஜ் டைரக்ஷனில் கார்த்தி, அனுஷ்கா நடிக்கிற படத்தோட கதையை சொன்னாங்க. நல்லா இருந்தது. ஆனா, அவங்க கேட்ட தேதியில் நான் வேற ஒரு படத்தில் நடிச்சுகிட்டிருந்தேன். ஸோ, கால்ஷீட் பிரச்னை வந்துடக் கூடாதுன்னு சுமூகமா பேசி விலகிட்டேன். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்ல.

அடிக்கடி மும்பைக்கு போறீங்களே?

அங்கே நான் சொந்தமா வாங்கிய ஒரு பிளாட் இருக்கு. அதனால், அடிக்கடி மும்பைக்கு போறேன். கேரளா, ஐதராபாத், பெங்களூருன்னு எங்கே ஷூட்டிங் நடந்தாலும், மும்பையில் இருந்துதான் பிளைட்டில் வர்றேன். இதனால், சென்னையில் நான் வாங்கியிருந்த ஒரு பிளாட்டை வித்துட்டதா எழுதறாங்க. அது உண்மையில்லை. எப்பவாவது நான் சென்னை வந்தா, அந்த வீட்லதான் தங்கறேன்.

ஊருக்கே போறதில்லையாமே?

நேரம் கிடைச்சாதானே போக முடியும்? போனமுறை என் பிறந்த நாள் வந்தது. அப்ப பெல்காம் போயிருந்தேன். அப்பா, அம்மா, சிஸ்டர் எல்லாரையும் பார்த்து நலம் விசாரிச்சதோட சரி. அதுக்கு பிறகு நேரமே கிடைக்கலை. நான் பெல்காமுக்கு போய் ஒன்பது மாசத்துக்கு மேலாகுது.

இப்ப எந்த கிரிக்கெட் வீரரோட...

காஸிஃப் வருதுன்னு கேட்கறீங்களா? ஊகூம், யார் கூடவும் கிசுகிசு வர்றதில்லை. முன்னாடி டோனி கூட சேர்த்து வந்தது. இப்ப அவருக்கு கல்யாணமாயிடுச்சு. அதோட, அந்த கிசுகிசு எல்லாம் பிசுபிசுத்து போச்சு. அதென்னவோ தெரியலை, யார் என்ன எழுதினாலும் என்மேல் அதிக பாசத்தோட காஸிஃப் எழுதி குவிக்கிறாங்க. நானும், கிசுகிசுவும் அக்கா, தங்கச்சி மாதிரி. சில காஸிஃப்களை நான் ரொம்பவும் ரசிச்சிருக்கேன்.

அதுல ஒண்ணு சொல்லுங்களேன்.

அப்ப நான், ‘கற்க கசடற’ படத்துல நடிச்சுகிட்டிருந்தேன். எனக்கு மாம்பழம்னா ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் மேங்கோவை கட் பண்ணி சாப்பிட்டுகிட்டிருப்பேன். இதை பார்த்த ஒருத்தர், ‘லஷ்மிராய் கர்ப்பமாக இருக்கிறார். அதனால தான் மாங்காயா சாப்பிடுறார்’னு எழுதிட்டாரு. அந்த காஸிஃப்பை என்கிட்ட படிச்சு காட்டினாங்க. பதினாறு வயசுல எனக்கு கல்யாணம் கூட ஆகலை. ஆனா, கர்ப்பமா இருக்கிறேன்னு எழுதினாங்க. ‘இப்படியெல்லாம் எழுதறாங்களே’னு அழுகையா வந்தது. அப்புறம், இப்படித்தான் எழுதுவாங்க. கண்டுக்காம நாம போயிட்டா அதுவே மறைஞ்சுடும்னு புரிஞ்சுது. இப்பல்லாம் கிசுகிசு எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.

லாரன்ஸ் புதுப்படத்தின் கதை சொல்ல வந்தப்ப, வீட்டு வாசல்லயே நிறுத்திட்டீங்களாமே?

பொய்யை எழுதறதுக்கும் ஒரு அளவு வேணாமா? அவர் டைரக்ஷனில், ‘காஞ்சனா’வில் அவருக்கு ஜோடியா நடிச்சேன். படம் பெரிய ஹிட். உடனே எங்களை இணைச்சு கிசுகிசு வந்தது. அதை நான் பெருசா எடுத்துக்கலை. அதுக்காக இப்படியெல்லாமா கட்டுக்கதை எழுதுவாங்க?

மேரேஜ்?

அதுக்கு இன்னும் மூணு வருஷங்களாவது ஆகணும். அதுவரை நடிச்சுகிட்டிருப்பேன். இந்த வருஷம் இந்தியில் ஒரு மெகா பட்ஜெட் படம் பண்றேன். அதுக்கான அறிவிப்பு பாலிவுட்டில் இருந்து வரும். மூணு வருஷத்துக்கு பிறகு என் கல்யாணம் நடக்கும். கண்டிப்பா அது காதல் கல்யாணம்தான்.
- தேவராஜ்