மீண்டும் வில்லன் ஆனார் மோகன்லால்



‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' என்ற படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால். பிறகு தனது தேர்ந்த நடிப்பால் ஹீரோவானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் வில்லனாக நடிக்கிறார் 'கூதாரா' படத்தில்.

இதில் அவரது லுக் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க லட்சத்தீவில் படமாகும் இதில், நம் ஹீரோ பரத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜனனி ஐயர், டோவினோ தாமஸ், கவுதமி நாயர் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் மீண்டும் வில்லனாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

பாலியுடன் ஜனனி

 தமிழை விட ஜனனி ஐயருக்கு மலையாளத்தில் இப்போது வரவேற்பு அதிகம். '3 டாட்ஸ்' படத்தில் அறிமுகமான ஜனனி, தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில், 'எடிசன் போட்டோஸ்' என்ற படத்தில் நிவின் பாலியுடன் நடிக்கிறார். நிவின் பாலி 'நேரம்' பட ஹீரோ. மல்லுவுட்டில் டாக்கில் உள்ள இளம் ஹீரோக்களில் நிவின் பாலியும் ஒருவர்.

'எடிசன் போட்டோஸ்' படத்தில் துளு பிராமணப் பெண்ணாக நடிக்கிறார் ஜனனி. 'நிவினோட நடிப்பது சந்தோஷமா இருக்கு. இதுல எனக்கு வழக்கமான கேரக்டர் இல்லை. அது இன்னும் சந்தோஷத்தை தர்ற விஷயம். இதுல நிவின் போட்டோகிராபரா நடிக்கிறார். வழக்கம் போல இதுவும், வித்தியாசமான படம்தான்' என்கிறார் ஜனனி.

வெளியேறினார் அஜ்மல்

‘செவன்த் டே' என்ற படத்தில் பிருத்விராஜுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் அஜ்மல். இப்போது திடீரென்று அதில் இருந்து விலகி இருக்கிறார்.  விசாரித்தால், 'படத்தில் 7 கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் இருக்கு. அந்த ஏழுலதான் பிருத்வி ராஜும் அஜ்மலும் இருக்காங்க. சில ஷாட் எடுத்துப் பார்த்தோம். சில காட்சிகளுக்கு அஜ்மல் செட்டாகலை. அதனால அவரை நீக்கிட்டோம்' என்கிறார் இயக்குனர் ஷாய்ம்தார்.

ஆனால்,  'அஜ்மலிடம் கால்ஷீட் கேட்டபோது பிருத்விக்கு சமமான கேரக்டர் என்றுதான் சொன்னார்கள். ஆனால் ஷூட்டிங் வந்தபோது, சண்டைக் காட்சி உட்பட நிறைய காட்சி களை அஜ்மலுக்குக் குறைத்தார்கள். அது பிடிக்காமல்தான் அஜ்மல் வெளியேறி னார்' என்கிறது அஜ்மல் தரப்பு.

பஹத்தின் லிஸ்ட்

நஸ்ரியா நாசிமை மணக்கப் போகும் பஹத் பாசில்தான் மலையாள சினிமாவின் இப்போதைய பிசி ஹீரோ. இவர் நடிப்பில் இந்த வருடம் வர இருக்கும் படங்களின் லிஸ்ட் இது: ஒன் பை டூ, பெங்களூர் டேஸ், மணியாராயில் ஜின், வம்பாதி, கார்ட்டூன், மணிரத்னம், கப்பா பப்படம், சிவகனங்க சினிமா பேக்டரி. இவை மட்டுமின்றி இன்னும் லைனில் நிற் கிறார்கள் இயக்குனர்கள்.  'எனக்கு வர்ற கதைகள் எல்லாமே நல்ல கதைகள்தான். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வகையா இருக்கு. வெரைட்டியா நடிக்கிறது புது தெம்பை தருது' என்கிறார் பஹத்.