வன்முறையில்லா உலகமா? சான்சே இல்லை என்கிறார் அர்னால்டு



கமாண்டோ, டெர்மினேட்டர் படங்களில் ஆக்ஷன் ஹீரோவுக்கு புது இலக்கணம் படைத்த அர்னால்டு ஷ்வார்ஸ்னீகரின் அடுத்த படம் 'சபோடேஜ்’ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாக சொல்லும் தகவல் உண்மை என்கிறார் அர்னால்டு. ‘என் படத்துல வன்முறை இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். சினிமாவுல வன்முறை இல்லாவிட்டால் உலகம் அமைதியா இருக்கும் என்பதை என்னால் ஏற்க முடியாது.

 படங்களை விடவும் குழந்தைகள் விளையாடுற கம்ப்யூட்டர் கேம்ஸ்ல வன்முறை அதிகம். இந்த படத்துக்காக ஆயுதப் பயிற்சி எடுக்க வேண்டும் என்று இயக்குனர் நச்சரித்தார். சினிமா வரலாற்றிலேயே அதிகமான வில்லன்களை அசால்ட்டாகப் போட்டுத் தள்ளிய எனக்கே டிரெய்னிங்கா என்று அலட்சியமாக நினைத்தேன். ஆனால், ஷூட்டிங் போன பிறகு தான் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை உணர முடிந்தது’ என்கிறார் இந்த 66 வயசு இளைஞர்.

மடோனா இயக்கத்தில்  ஒரு காதல் கதை பாடகி, கவிஞர், நடனக் கலைஞர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், மனிதநேயர், எழுத்தாளர் (குழந்தைகளுக்கான புத்தகங்கள்), ஆடை வடிவமைப்பாளர் என ஹாலிவுட் அஷ்டாவதானியாக விளங்கும் மடோனா, ஃபில்த் அண்ட் விஸ்டம்’, டபுள்யு.இ படங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார்.

ரெபக்கா வாக்கரின் அறிமுக நாவல் ‘எடி: எ லவ் ஸ்டோரி’க்கு திரை வடிவம் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறாராம். ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் இரண்டு அமெரிக்க மாணவிகளுள் ஒருவர், கென்யாவைச் சேர்ந்த கறுப்பின வாலிபரை நேசிப்பதும், திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது இனம், மொழி, அரசியல், போர் சூழலால் அலைக்கழிக்கப்படுவதும் இந்த நாவலை படித்தவர்களை உலுக்கி எடுத்திருப்பதால், படமாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறார் மடோனா.

ரெபக்கா வாக்கரின் சொந்த அனுபவங்களே ‘எ லவ் ஸ்டோரி’ என்பது கூடுதல் தகவல். இந்திக்கு வரும் ஹாலிவுட் வாரியர் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து 2011ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘வாரியர்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள். நேரெதிர் துருவங்களாக இருக்கும் இரு சகோதரர்கள், இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தந்தை,

 பந்தயக் களத்தில் மரணப் போராட்டம் என்று இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய இருப்பதால் வாரியரின் இந்தி வடிவம் இந்தியாவில் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்புகிறது தயாரிப்பு தரப்பு (அட... நம்ம அக்னி நட்சத்திரம்!). டிசம்பரில் ஷூட்டிங் என்று பிள்ளையார் சுழி போட்டுவிட்டு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் பிசியாக இருக்கிறார்கள்.

பா.சங்கர்