ஹேக் ஷாக்



இணைய அக்கவுன்டை லபக் பண்ணும் ஹேக்கர்ஸ் அட்ராசிட்டி அதிகரித்து வருகிறது இப்போது. பொதுவாக ஹீரோ, ஹீரோயின்களின் அக்கவுன்ட்களை மட்டுமே குறி வைக்கும் இந்த ஹேக்கர்ஸ், அவர்களின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்கள் நட்சத்திரங்களுக்கு. இதில் யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்கிற சின்ன லிஸ்ட் இது. இன்னும் கூட இருக்கலாம். அதனால உஷாரா இருங்க மக்களே.

ஹன்சிகா: சிம்புவுடன் காதல் கனிந்துருகிய நேரம் டொப்பென்று போனது ஹன்சிகாவின் டிவிட்டர் பக்கம். இமேஜை கெடுப்பது மாதிரி ஏதாவது மெசேஜ் போட்டுவிட்டால் என்ன செய்வது என்று தவித்தார் ஹன்ஸ். பிறகு ஒரு வழியாக சரியானது பிரச்னை. 'ஒரு தடவையா ரெண்டு தடவையா 5 தடவை ஹேக் பண்ணியிருக்காங்க. அடுத்தவங்க பாஸ்வேர்டை ஹேக் பண்றதுல அப்படி என்னதான் கிடைக்குதோ அவங்களுக்கு' என்று நொந்து போகிறார் ஹன்ஸ்.

ஸ்ருதிஹாசன்: வழக்கம்போல் காலையில் எழுந்து டிவிட்டர் பக்கம் போனால் பாஸ்வேர்ட் வேலைசெய்யவில்லை, டென்ஷன். ஒரு வேலையும் ஓடவில்லை. சில மணி நேரத்துக்குப் பிறகு கிடைத்திருக்கிறது பாஸ்வேர்ட். இது பற்றி ஸ்ருதி ட்வீட் பண்ணும்போது, 'யாரோ என் அக்கவுன்டை ஹேக் செய்துவிட்டார்கள். இதில் வந்திருந்த தேவையில்லாத ட்வீட்டையும் கோரிக்கைகளையும் கண்டுகொள்ளா தீர்கள்' என்றார். இதேபோல இவரது பேஸ்புக் அக்கவுன்டும், ஜிமெயில் கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது இதற்கு முன்னால்.

த்ரிஷா: இவரது ட்வீட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டதாக சைபர் கிரைமில் புகார் செய்தார் த்ரிஷா. பிறகு வேறொரு அக்கவுன்டை உருவாக்கினார். ஷாயாலி பகத்: ஷாயாலியின் அக்கவுன்டில் இருந்து வந்த தகவல்தான் கொடுமை. ஹேக் செய்த புண்ணியவான், 'நடிகைகளிடம் அமிதாப்பச்சன் இப்படியா மோசமாக நடந்துகொள்வார்' என்கிற ரீதியில் அவரைப் போட்டுத் தாக்கும் அளவுக்கு மெசேஜை அனுப்ப, மொத்த பாலிவுட்டும் ஆடிவிட்டது. பிறகு ஷாயாலி, 'அதை தான் அனுப்பவே இல்லை. யாரோ ஹேக் பண்ணி அனுப்பியிருக்கிறாங்க' என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார். போலீசில் புகார் செய்ததோடு முடிந்தது பிரச்னை.

மேக்னா நாயுடு: இவரது மெயில் ஐடியை சுட்ட முகம் தெரியா பார்ட்டி செய்த வேலைதான் எசகுபிசகு ஆகிவிட்டது மேக்னாவுக்கு. 'நான் கர்ப்பமாக இருக்கிறேன். இதற்கு அந்த மூன்று நடிகர்கள்தான் காரணம்' என்கிற மாதிரி மேக்னாவின் தோழிகளிடம் சாட்டில் சொல்ல, வெலவெலத்து விட்டார்கள் தோழிகள். பிறகு போன் பண்ணி, 'என்னடி இப்படி சொல்லியிருக்க?' என்று அவர்கள் கேட்டபிறகுதான் விஷயமே தெரியவந்தது மேக்னாவுக்கு. சைபர் கிரைமில் புகார் செய்தார்.

மகேஷ்பாபு: 'நான் நடித்த படங்களிலேயே 'பிசினஸ்மேனை' சிறந்ததாக நினைக்கிறேன். ஆனால் சிறந்த நடிகர் விருதில் என் பெயர் இல்லை. இரண்டு மாதம் வெளிநாடு செல்ல இருக்கிறேன். அவர்கள் அட்டன்டென்ஸ் முக்கியம் என்று கருதி எனக்கு விருது கொடுக்கவில்லையோ என்னவோ?' இப்படி மகேஷ்பாபு ட்வீட் பண்ணியதாக வந்த தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது டோலிவுட்டில். பிறகு மகேஷ்பாபு, எனக்கும் அந்த ட்வீட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னார்.

மதுஷாலினி: இவரது கணக்கையும் களவாண்ட ஹேக்கர்ஸ், அதில் எந்த தில்லுமுல்லையும் செய்யவில்லை. அதற்குள் மீண்டும் கிடைத்துவிட்டது பாஸ்வேர்ட். ட்வீட் பண்ணி தகவல் தெரிவித்திருந்தார் மதுஷாலினி.