நான் சொன்னேன் ரஜினி கேட்டார் அமிதாப் உற்சாகம்



‘கோச்சடையான்' படத்தின் இந்தி பாடல்கள் மற்றும் டிரைலரை மும்பையில் வெளியிட்டார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் ஆஜராகி இருந்த விழாவில் பேசிய ரஜினியின் இளைய மகளும் படத்தின் இயக்குனருமான சவுந்தர்யா, 'இது கார்ட்டூன் படம் இல்லை. அனிமேஷன். இதை சரியாக இங்கு புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இந்தப் படம் இந்தியாவில் டெக்னிக்கலாக புதிய வாயிலைத் திறக்கும்' என்றார்.

ரஜினி பேசும்போது, 'எனக்கு தொழில்நுட்பம்லாம் தெரியாது. இந்த மாதிரி படங்கள்ல நடிக்கணும்னு ஆண்டவன் திட்டமிட்டிருக்கான். இந்தப் படத்துல நான் திணிக்கப்பட்டு இருக்கேன். சவாலான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்துச்சு' என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையே.

அமிதாப் பச்சன் பேசும்போது, ' சவுந்தர்யா இந்தப் படம் மூலமா ஒரு படி முன்னேறியிருக்கிறார். அவரோட திறமையைப் பாராட்டுகிறேன். ஒரு மகளாக அப்பாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். நானும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கிறோம். அதைத் தாண்டி திரைக்குப் பின்னால் குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். 'எந்திரன்' ஷூட்டிங் முடிந்ததும் வாழ்க்கை போரடிப்பதாகச் சொன்னார். நடிப்பை விடப் போவதாகச் சொன்னார்.

ஆனால் நான் அதை ஏற்கவில்லை. 'தயவு செய்து நடிப்பை விட்டு விடாதீர்கள்' என்று சொன்னேன். இப்போது இந்தப் படம் மூலம் வேறொரு வடிவத்தில் வந்திருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றை எழுதுபவர்கள் கோச்சடையானுக்கு முன், பின் என்றுதான் தொடங்கவேண்டும்' என்றதும், புல்லரித்துப் போனார் ரஜினி.