சிவாஜியை அதிரவைத்த சீர்காழி!



பாட்டுச்சாலை

தன்னிடம் இப்படியொருவர் கேட்பார் என்று சிவாஜிகணேசன் எதிர்பார்க்கவில்லை. 'குங்குமம்' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடி, பதிவு செய்யப்பட்டுவிட்டது. 'எனக்கு சௌந்தரராஜன்தான் பாடவேண்டும்' என்று அடம்பிடித் தார் சிவாஜி.

பிறகு அப்படியே ஆனது. 'மத்தவங்களுக்கு சாப்பாடு போடுங்கண்ணே! ஆனா எச்சில் இலையில போடாதீங்க' என்று சீர்காழி சொன்னதும் ஆடிப்போய்விட்டாராம் சிவாஜி. - இது சீர்காழி யின் தன்மானத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வு.

விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் 'காத்திருந்த கண்கள்' படத்துக்கான பாடல் ஒலிப்பதிவு நேரம். வேறொரு பாடல் பதிவாகிக் கொண்டிருந்ததால், காத்திருக்கிறார் சீர்காழி. ஒலிப்பதிவு முடிந்ததும், வாத்தியக் கலைஞர்கள் அனைவரும் புறப்பட தயாராக இருக்கிறார்கள். 'அண்ணே! என்னோட பாட்டுக்கு ஆர்கெஸ்ட்ராவே இல்லையா?' என்று ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார் சீர்காழி. 'உங்களோட ஆர்க்கெஸ்ட்ரா இங்கே இருக்கு' என்றபடி சீர்காழியின் தொண்டையைத் தடவிக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன். - இது சீர்காழியின் குரல்வளத்துக்கு கிடைத்த நற்சான்று.

தந்தை சிவசிதம்பரம் செட்டியார் வருடந்தோறும் தோணியப்பர் கோயிலில் நடத்திய ராமாயண இசை நாடகம் கோவிந்தராஜனுக்கு கலையார்வத்தைத் தூண்டியது. சித்தப்பா வீட்டு கிராமபோன் பெட்டியில் கேட்ட கிட்டப்பாவின் பாட்டு, அந்த ஆர்வத்தீயில் நெய்யை அள்ளிக் கொட்டியது. தாய்மாமா எஸ்.பி.கிருஷ்ணன் ஏற்பாட்டில் எட்டுவயதில் தேவி நாடகசபாவில் சேர்ந்தார் கோவிந்தராஜன்.

அங்கே அனுபவம் கிடைத்தாலும் உணவு ஒத்துக்கொள்ளாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் பயிற்சியைத் தொடரமுடியவில்லை. 'நாடகத்தைவிட சினிமாதான் பிரகாசமாக இருக்கும். பையனை அதற்கு தயார்படுத்துவோம்' என்று அப்பாவிடம் சொன்னார் சீர்காழியின் சித்தப்பா பண்டிதர் பி.எஸ்.செட்டியார். அவர்தான் 'சினிமா உலகம்' என்ற முதல் சினிமா பத்திரிகையை நடத்தியவர். அவரது பரிந்துரையால் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக சேர்ந்தார் சீர்காழி. ஆண்டு 1946, மாத சம்பளம் ஏழரை ரூபாய்.

ஸ்டுடியோவில் சீர்காழி பாடிக் கொண்டே இருப்பார். ஒருமுறை அந்தப்பாடல் இசைமேதை ஜி.ராமநாதன் காதில் விழுந்தது. அழைப்பு விடுத்தார் அவர். சித்தப்பா பி.எஸ்.செட்டியாருடன் சென்று வணங்கினார் சீர்காழி. 'பையனுக்கு சாரீரம் நல்லா இருக்கு. மெட்ராஸுக்கு கூட்டிட்டுப்போய் நல்ல வித்வான்கிட்ட சங்கீத சிட்சை கொடுத்தீங்கன்னா, இவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்றார் ஜி.ராமநாதன். மெட்ராஸுக்கு வந்த சீர்காழி, தமிழ் இசைக் கல்லூரியில் 'இசைமணி' பட்டம் பெற்றார்.

கோபால கிருஷ்ண பாரதியார் பாடல் போட்டியில் முதல்பரிசாக தம்பூராவை வென்றார். சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் 'சங்கீத வித்வான்' பட்டம் பெற்றார். திருப்பாம்பரம் சுவாமி நாதப்பிள்ளையிடம் மூன்றாண்டுகள் பெற்ற குருகுல வாசம் மணம் வீசத் தொடங்கியது.  1952ல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று, பண்டிதர்களை வியக்கவைத்தார்.

சித்தப்பா பி.எஸ். செட்டியாரின் உதவியால் 1953ல் 'பொன்வயல்' படத்தில் 'சிரிப்புதான் வருகுதய்யா...' என்ற முதல் பாடலைப்பாடி, சினிமா பின்னணிப்பாடகராக அறிமுகமானார் சீர்காழி. சுத்தானந்த பாரதியார் எழுதிய அந்தப்பாடலுக்கு துறையூர் ராஜகோபாலசர்மா இசை யமைத்திருந்தார். சீர்காழியின் சிம்மக்குரலுக்கு சினிமாவுலகம் செவிகொடுக்க தயாரானது.

 டி.ஆர்.பாப்பா இசையில் 'ரம்பையின் காதல்' படத்தில் 'சமரசம் உலாவும் இடமே...', கே.வி.மகாதேவன் இசையில் 'தை பிறந்தால் வழிபிறக்கும்' படத்தில் சுரதா வரிகளில் 'அமுதும் தேனும் எதற்கு...', 'வண்ணக்கிளி' படத்தில் 'மாட்டுக்கார வேலா...', 'ஆத்துல தண்ணிவர...', 'வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் 'ஜக்கம்மா...' என சீர்காழியின் குரல் செவியுள்ள அனைவரையும் சிலிர்க்க வைத்தது.  

'ராஜராஜன்' படத்தில் 'நிலவோடு வான்முகில்...', 'நாடோடி மன்னன்' படத்தில் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா...', 'நல்லவன் வாழ்வான்' படத்தில் 'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...' உள்ளிட்ட பாடல்கள் எம்.ஜி.ஆர்- சீர்காழி கூட்டணியில் பெரிய வெற்றி பெற்றன. 'பணம் பந்தியிலே...', 'ஓடம் நதியினிலே', ஆகிய 'காத்திருந்த கண்கள்' படப்பாடல்கள், 'படிக்காத மேதையில் 'எங்கிருந்தோ வந்தான், 'போலீஸ்காரன் மகள்’ படத்தில் 'கண்ணிலே நீர் எதற்கு...'  'கந்தன் கருணை'யில் 'அறுபடை வீடுகொண்ட திருமுருகா...', 'கலங்கரை விளக்கம்' படத்தில் 'சங்கே முழங்கு...' 'மூன்று தெய்வங்கள்' படத்தில் 'திருப்பதி சென்று திரும்பிவந்தால்...'

'கர்ணன்' படத்தில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...', 'குமுதம்' படத்தில் 'கல்லிலே கலைவண்ணம் கண்டான்...', 'நீர்க்குமிழி'யில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா...', 'உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 'வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...' என குரலால் பெருமை சேர்த்தார் சீர்காழி. சங்கர் - கணேஷ் இசையில் 'கை கொடுப்பாள் கற்பகாம்பாள்' படத்தில் இடம்பெற்ற 'கற்பனைக் கெட்டாத அற்புதமே' அவர் பாடிய கடைசிப்பாடல்.

நக்கீரர், அகத்தியர் கதாபாத்திரங்களில் 'கந்தன் கருணை', 'அகத்தியர்' உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார் சீர்காழி. பத்மஸ்ரீ மற்றும் கவுரவ டாக்டர் பட்டங்கள் வாங்கிய சீர்காழியின் சொந்தப்படத் தயாரிப்பு நிறுவன கனவு நிறைவேறாமலே போனது. 'முருகா... முருகா...'  என்று பேச்சுக்கிடையே உருகும் சீர்காழி, அதே பெயரை உச்சரித்தபடி மரணமடைந்தார்.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்...
பி. சுசீலா!