மனோவசியம் செய்யும் பாட்டுக்காரர்!



ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூர் மாவட்டம் சேட்டனப்பள்ளியில் 1963ல் பிறந்தார் நாகூர் பாபு. அப்பா ரசூல் ஹைதராபாத் வானொலி நிலைய இசைக்கலைஞராக இருந்தார். அம்மா ஷகீதா மேடை நாடகக்கலைஞராக புகழுடன் இருந்தார். பாபுவுக்கு படிப்பைவிட நடிப்பிலும் பாட்டிலுமே நாட்டம் ஏற்பட்டது.

அம்மாவுடன் போகும்போது நாடக இடைவேளையில் பாடிய பாட்டுக்குக் கிடைத்த அன்பளிப்புப்பணம், பாட்டாசையை பேராசையாக்கியது. விஜயவாடா வில் உள்ள கண்டசாலா கல்லூரி யில் கர்நாடக சங்கீதம் கற்றார்.

ஒரு தெலுங்குப்பட பாடல் ஒலிப்பதிவில் இவரது கஜல் பாடல்களைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன் சென்னைக்கு அழைத்து தனது உதவியாளராக வைத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து தெலுங்குப்பட இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் உதவியாளராகச் சேரும் வாய்ப்புக் கிடைத்தது.

அங்கே இருந்தபோதுதான் பல வாத்தியக்கருவி களை வாசித்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எஸ்.பி.பியும் சுசீலாவும் பாடிய ஒரு பாட்டுக்கு மூன்றாவது குரல் தேவைப்பட்டபோது இவரைப் பாடவைத்தார் சக்கரவர்த்தி. படம் 'கற்பூர தீபம்', ஆண்டு 1984.

சிரஞ்சீவிக்கு 'லங்கேஸ்வரலு' படத்தில் 'ஐயாம் மேட்...' என்கிற உணர்ச்சிகரமான பாடலைப் பாடி முடித்தபின்னும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதிருக்கிறார் பாபு. அது 1986 ஆம் ஆண்டு.

 'பூவிழி வாசலிலே' படத்தில்  இளையராஜா இசையில் 'அண்ணே அண்ணே...' பாடல்மூலம் தமிழ்ப் பாட்டுச்சாலையில் பயணத்தைத் துவக்கிய நாகூர் பாபுவின் பெயரை மனோ என்று மாற்றினார் இளையராஜா. அதற்குப்பின் மனோ, மனங்களை வசீகரிக்கும் பாடகராக வலம்வர ஆரம்பித்துவிட்டார்.

'செண்பகமே செண்பகமே...', 'மதுர மரிக்கொழுந்து வாசம்...' என  'எங்க ஊரு பாட்டுக்காரன்' , படத்தில் மனோவின் குரல் ஒலித்தபோது, 'இதோ இன்னொரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் வந்துவிட்டார்' என்று திரைப்பாட்டு ரசிகர்கள் திருப்தியடைந்தார்கள். ரஜினியின் 'வேலைக்காரன்' படத்தில் 'வேலையில்லாதவன்தான் வேலை தெரிஞ்சவன்தான்...' என்று வெளுத்துவாங்கிய மனோ,  'வா வா வா கண்ணா வா...' என்று காதலிலும் கசிந்துருகினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'காதலன்' படத்துக்காக 'முக்காலா முக்காபுலா...' பாட்டு ஒலிப்பதிவாகும்போது அதிகாலை 2 மணி. ஆர்.டி.பர்மன் குரலில் 20 நிமிடங்களில் பாடி முடித்தார் மனோ. அந்தப்பாட்டு இந்திய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது.

'உள்ளத்தை அள்ளித்தா' படத்துக்காக லெபனான் பாடகர் கலீத் ஸ்டைலில் அரபிக் ஃபீல் வரவேண்டும் என்று இசையமைப்பாளர் சிற்பி சொல்ல, கடுமையான பயிற்சி எடுத்துப் பாடியிருக்கிறார். 'அழகிய லைலா...', 'ஐ லவ் யூ லவ் யூ...' உள்ளிட்ட  பாடல்கள் அமர்க்கள மான வரவேற்பைப் பெற்றன.

'என்னமோ நடக்குது' படத்தில் பிரேம்ஜி இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து 'வா இது நெத்தியடி...' என்ற பாடலைப் பாடி பாராட்டுப்பெற்றிருக்கிறார்.'முத்து' படத்தில் 'தில்லானா தில்லானா...' என இவர் சுஜாதாவுடன் கொடுத்த குரல், வானொலி யிலும் தொலைக்காட்சியிலும் அதிகமுறை ஆட்டம் போட்டிருக்கின்றது.அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் வாலியின் 'மச்சி ஓபன் த பாட்டில்...' பாடலில் இளம் பாடகர்களுடன் சேர்ந்து இவரும் குரல் கொடுத்திருக்கிறார்.

 'அட்டகாசம்' படத்தில், 'தெற்கு சீமையில என்னப் பத்திக் கேளு...' பாடல், அஜித் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிக்கொடுத்தது. 'உள்ளம் கொள்ளை போகுதே' படத்தில் கார்த்திக்ராஜா இசையில் யுவன்சங்கர் ராஜாவுடன் இணந்து 'கிங்குடா...' பாடலில் கலக்கினார்.தேவா இசையில் 'ஏழையின் சிரிப்பு' படத்தில் கிருஷ்ணராஜ்- விவேக்குடன் இணைந்து 'எப்பா எப்பா ஐயப்பா...' என்ற பிரபல பாட்டுக்கு பின்னணியாய் இருந்தார்.

 'ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே...' என்ற 'படையப்பா' படப்பாடல்  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் , இவரது குரலில் எல்லோரையும் கவர்ந்தது. தேவா இசையில் 'அருணாசலம்' படத்தில் 'அல்லி அல்லி அனார்கலி...' என்று ஸ்வர்ணலதாவுடன் இணைந்த இவரது குரல் வரவேற்பைப் பெற்றது. மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் 'ஆயிரத்தில் நான் ஒருவன்...' பாடலை டி.எம்.எஸ்.குரலில் பாடி, ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டைப் பெற்றார்.

'நாட்டாமை' படத்தில் சிற்பி இசையில் 'மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு...' பாடல் இவரது குரலில் சிட்டி முதல் பட்டிவரை முணுமுணுக்கப்பட்டது. 'திருடா திருடா' வில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...', 

'சின்ன மாப்பிள்ளை'யில் 'காதோரம் லோலாக்கு...', 'அரண்மனைக்கிளி' யில் 'அடி பூங்குயிலே பூங்குயிலே...', 'வால்டர் வெற்றிவேல்' படத்தில் 'சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது...', 'தேவர் மகன்' படத்தில் இளையராஜா- ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாடிய 'போற்றிப் பாடடி பெண்ணே...', 'நாயகன்' படத்தில் 'நீயொரு காதல் சங்கீதம்...', தேவா இசையில் 'சூரியன்' படத்தில் 'லாலாக்கு டோல் டப்பிமா...',

 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில்  'சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது...',  'ராஜாதிராஜா' படத்தில் 'மீனம்மா மீனம்மா...',  'இதயத்தை திருடாதே' படத்தில் 'ஓ பிரியா பிரியா...' மற்றும்  'ஓ பாப்பா லாலி...', 'கரகாட்டக்காரன்' படத்தில்  'குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேக்குதா...' மற்றும் 'முந்தி முந்தி விநாயகனே...', 'பாட்டுக்கொரு தலைவன்' படத்தில் ஜிக்கியுடன் பாடிய 'நினைத்தது யாரோ நீதானே...',  'ராசாவே உன்னெ நம்பி' படத்தில் பி.சுசீலாவுடன் பாடிய 'ராசாத்தி மனசுல இந்த ராசாவின் நெனப்புதான்...' என ரசிகர்களின் மனதை மனோவசியம் செய்யும் மனோவின் வெற்றிப் பாடல்களின் வரிசை நீளமானது.

'சின்னத்தம்பி' படத்தில் பாடிய 'தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...' பாடலுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற இவர், ஆந்திர அரசின் நந்தி விருதும் வாங்கியிருக்கிறார்.

குலாம் அலியின் கஜல் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்று, அவரிடம் ஆசி பெற்று, அவரது ஆர்மோனியப் பெட்டியைக் கேட்டு வாங்கி வந்து, பூஜை அறையில் வைத்து பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் இவருக்கு பின்னணி பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ர மணியம். கமல்ஹாசனின் 'சிங்காரவேலன்' படத்தில் நடித்தார். 'மதுரை திமிரு', 'குமரன் ரஜினி ரசிகன்' ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இப்போது 'வெற்றிச்செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.ரஜினியின் 'லிங்கா' படத்தில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மோனா கசோலினா...' என்று பாடி, வசீகரித்து, இளையதலைமுறைப் பாடகர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் மனோ.

நெல்லைபாரதி