அஜித் ஸ்பெஷல் தகவல்கள்



உலகமே கொண்டாடும் உழைப்பாளர் தினமான மே 1ல் பிறந்தவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவரது உழைப்பை உலகமே கொண்டாடுகிறது. இவரைப்பற்றிய சுவைமிகு தகவல்கள்:

அப்பா சுப்ரமண்யம் மலையாளி, அம்மா மோகினி சிந்தி மொழிக்காரர் என்றாலும் தமிழின்மீது பற்றுக்கொண்டவர்.பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தவர்.பைக் ரேஸில் கலந்துகொள்ள பணம் சேர்ப்பதற்காக சின்னச்சின்ன விளம்பரங்களில் நடித்தார்.

திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழிற்சாலையை சொந்தமாகத் தொடங்கினார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நடிப்பு வாய்ப்புத்தேடி தீவிரமாக இறங்கினார்.
1990ல் ‘என் வீடு என் கணவர்’ படத்தில், மாணவனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
1992 ஆம் ஆண்டு, 21 ஆம் வயதில் ‘பிரேம புஸ்தகம்’ தெலுங்குப்படத்தில் நாயகனாக  நடித்தார்.

‘பிரேம புஸ்தகம்’ படப்பிடிப்பில் இவரது நடிப்பைப் பார்த்த இயக்குனர் செல்வா ‘அமராவதி’ படத்தின்மூலம் இவரை தமிழில் அறிமுகப்படுத்தினார்.
‘அமராவதி’ படத்தில் இவருக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் விக்ரம்.
‘அமராவதி’ படப்பிடிப்பு நேரத்தில் பைக் விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.
ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தவருக்கு உடனடியாக அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இயக்குனர் கே.சுபாஷ், ‘பவித்ரா’ படத்தில் நடிக்க வைத்தார். பைக் விபத்தில் அஜித் பாதிக்கப்படுவதுபோல அந்தப்படத்தில் காட்சி இடம்பெற்றது.
வஸந்த் இயக்கத்தில்  நடித்த ‘ஆசை’ இவருக்கு கோடம்பாக்கத்தில் ஒரு சீட் பிடித்துக் கொடுத்தது.
‘ஆசை’ படத்தில் இவருக்கு டப்பிங் குரல் கொடுத்தவர், நதியாவுடன் சில படங்களில் நாயகனாக நடித்த சுரேஷ்.

‘ஆசை’ படத்தின் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா...’ பாடல் காட்சிகளுக்காக தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவு பகலாக நடித்துக் கொடுத்தார்.
ரொம்ப குண்டாகிவிட்டார் என்ற கமெண்ட் வந்தபோது, ‘ரெட்’ படத்துக்குப்பிறகு 23 கிலோ உடல் எடையைக் குறைத்தார்.
‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

‘நேருக்கு நேர்’ படத்துக்காக 11 நாட்கள் நடித்தபிறகு விலகிக்கொண்டார். இவரது கேரக்டரில் சூர்யா நடித்தார்.
‘வரலாறு’ படத்தில் நடித்த பெண்மை கலந்த கதாபாத்திரத்துக்கு, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் ‘தல’ என்று அழைக்கப்பட்டார். அதற்குப்பிறகு அதுவே அவரைப் பெருமைப்படுத்தும் பெயராக அமைந்துவிட்டது.
‘ரெட்’ படத்தில் பேசிய ‘அது’ என்கிற ஒற்றை வார்த்தை, இவரது ரசிகர்களின் மந்திரச்சொல் ஆனது.

இவர் இந்து, மனைவி ஷாலினி கிறிஸ்தவர் என்றாலும், இந்து- முஸ்லீம்- கிறிஸ்தவ சின்னம் அடங்கிய படத்தை வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறார்.
‘அமர்க்களம்’ படத்தின்போது ஷாலினியைச் சந்தித்தது 1999 மார்ச் 17, காலை 10.30 மணி என்பதை மறக்காமல் நினைவு கூர்கிறார்.
புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்பவர், ரஜினி கொடுத்த ‘லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தைப் படித்தபின் டென்ஷனைக் குறைத்துக்கொண்டதாகச் சொல்கிறார்.

முக்கியமான உதவி தேவைப்பட்டாலும்கூட, பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை இரவு ஏழு மணிக்குமேல் அழைக்க மாட்டார்.
பணியாளர்கள், உதவியாளர்கள் அத்தனை பேருக்கும் இடம் வாங்க்ிக் கொடுத்து, சொந்த செலவில் வீடுகளும் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

-நெல்பா