பாலமுரளிகிருஷ்ணா கொடுத்த பாட்டுப்பதக்கம்!



பாட்டுச்சாலை 53

இளம் வயதிலேயே அகில இந்திய வானொலியின் ‘கிரேடு-ஏ’ கலைஞராக பங்கேற்றுப்பாடி, பாராட்டுக்களைக் குவித்து வருபவர் பத்மலதா. கிளாசிக், கஸல், ஃப்யூஷன் என்று எல்லாத்தளத்திலும் இவரது குரல் தாளம் மீறாத லயக்கட்டோடு உலாவந்துகொண்டிருக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா கரங்களால் தங்கப்பதக்கம் வாங்கியது இவரது குரல்வளத்துக்குக் கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரம்.

அகில இந்திய வானொலிக்கு வந்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம்  ‘நாளை இந்த வேளை பார்த்து...’ பாடலைப் பாடிக்காட்டி பாராட்டையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கிறார் பத்மலதா. தொலைக்காட்சியில் இவர் நடத்திய ‘புதுப்புனல்’ மற்றும் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

சாகித்யா இசையில் ‘குருவம்மா’ படத்தில் முதல் பாடலைப்பாடி, பாட்டுச்சாலையில் தனது பயணத்தைத் துவக்கினார். அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரைப்பாடல்களைப் பாடியிருந்தாலும் சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ திரைப்படத்தில் பாடிய ‘அருவாக்காரன்...’ பாடல்தான் இவரை கிராமத்து ரசிகர்களுக்கும் அடையாளம் காட்டியது.

‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசன் எழுதி, ஜிப்ரான் இசையில் இவர் பாடிய ‘காதலாம் கடவுள் முன்...’ பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பை அள்ளிக்கொடுத்திருக்கிறது. அதே படத்தில் கமல்ஹாசன் எழுதி, குழுவுடன் இவர் பாடிய ‘முத்தரசன் கதை...’ பாடலும் பரவலான கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடிவரும் பத்மலதா ‘ரிக்‌ஷா டிரைவர்’ என்கிற துளு மொழிப்படத்தில் உதித் நாராயணனுடன் பாடி, பாராட்டுப் பெற்றிருக்கிறார். ‘கனவுக்காதலன்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்  பாட, அவரிடமும் பாராட்டுப்பெற்றிருக்கிறார்.

‘திருமணம் எனும் நிக்கா’, ‘அமர காவியம்’, ‘விஞ்ஞானி’, ‘அழகிய பாண்டிபுரம்’, ‘துணை முதல்வர்’, ‘இன்று நேற்று நாளை’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘அண்டாவ காணோம்’, ‘சந்திரா’, ‘வெண் நிலா வீடு’, ‘யாவும் வசப்படும்’, ‘உயிருக்கு உயிராக’, ‘தொட்டால் தொடரும்’, ‘மதுரக்காரங்கே’, ‘அது வேற இது வேற’, ‘நய்யாண்டி’, ‘ஆப்பிள் பெண்ணே’, ‘நல்லா இருந்த ஊரும் நாலு போலீசும்’,‘கோலிசோடா’, ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ என பத்மலதாவின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்கிறது.

அடுத்த இதழில் பாடலாசிரியர் தமிழமுதன்

நெல்லைபாரதி