ஓ காதல் கண்மணிகாதலுக்குக் காரணங்கள் தேவையில்லை. முதன் முறையாக நித்யா மேனனை சந்திக்கும்போது மெலிதாக சிரித்து வைக்கிறார் துல்கர் சல்மான். அந்த சிரிப்பால் கவரப்படும் நித்யாமேனன், அந்த நிமிடமே துல்கரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கல்யாணம் மட்டும் வேண்டாம் என்ற லிவிங் டுகெதர் கல்ச்சர்படி ஒரே அறையில் இருவரும் தங்குகிறார்கள். இதற்கிடையே துல்கருக்கு அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்ற லட்சியமும் நித்யா மேனனுக்கு பாரீஸில் படிக்க வேண்டும் என்ற லட்சியமும் இருக்கிறது. இறுதி வெற்றி காதலுக்கா, லட்சியத்துக்கா என்பது க்ளைமாக்ஸ். 

துல்கர் ஏற்கெனவே வாய் மூடி பேசியிருந்தாலும் இதுதான் அவருக்கு சரியான (அறிமுகப்) படம். டயலாக் டெலிவரி, ஹீரோயின் ரேஞ்சுக்கு வசீகர புன்னகை என தூள் கிளப்புகிறார் துல்கர். ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருப்பதால் அதை மிகச்சரியாக யூஸ் பண்ணியிருக்கிறார் நித்யா மேனன்.

அழகுக்கு அழகு, கிளாமருக்கு கிளாமர் என்று வாரி வழங்கியிருக்கிறார். கனமான கணபதி ஐயர் கேரக்டருக்கு பிரகாஷ்ராஜை விட வேறு யார் சிறப்பு செய்ய முடியும்? அவ்வளவு அருமை! மறதி நோயால் அவஸ்தைப்படுகிறவராக வருகிறார் லீலா சாம்சன். ரசிகர்கள் மறக்க முடியாதளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார்.

நெரிசல் மிகுந்த மும்பை தெருக்கள், மழைக் காட்சிகள், அகமதாபாத் கட்டடம் என அனைத்தும் பி.சி.ராமின் கை வண்ணத்தில் கவிதை பாடுகின்றன.மொத்தப் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் உச்சத்தில் இருக்கிறார். துணைக்கு வைரமுத்து இருப்பதால் அனைத்துப் பாடல்களும் உச்சத்துக்கும் மேல! இளமை பொங்க மீண்டும் ஒரு காதல் காவியம் படைத்திருக்கும் மணிரத்னம், ‘நான் எப்பவுமே ஃபார்முலதான் இருக்கிறேன் கண்மணிகளா!’ என்கிறார்.