காஞ்சனா 2இரண்டு தொலைக்காட்சிச் சேனல்களுக்கு இடையே நடக்கும் போட்டிதான் கதை. அதற்குள்ளே பேயை நுழைத்து, ராட்சஷ ஆட்டம் போடுகிறார் ராகவா லாரன்ஸ். பக்தி நிகழ்ச்சியால் முன்னிலையில் இருக்கும் சேனலை முறியடிக்க, டாப்சி தலைமையேற்கும் படக்குழு பேய் பங்களாவுக்குப் பயணப்படுகிறது. பாத்ரூம் போவதற்குக்கூட வாட்ச்மேன் வைத்திருக்கும் பயந்தாங்கொள்ளியான லாரன்ஸ்தான் கேமராமேன். டாப்சியைக் காதலிப்பதற்காகவே பயத்தை மறைத்து, பயணத்தில் பங்கேற்கிறார்.

செட்-அப் பேயைக்காட்டி, சேனல் பார்வையாளர்களைக் கவரும் திட்டத்துடன் போனவர்களை, அங்குள்ள நிஜப் பேய்கள் பயமுறுத்தும் காட்சிகள் பயங்கரமானவை. லாரன்ஸ் மற்றும் டாப்சியின் உடம்புக்குள் ஆவி புகுந்து, எதிரிகளைப் பழிவாங்குவது மிரட்சியிலும் மிரட்சி.பயந்தாங்கொள்ளியாக அம்மாவின் இடுப்பில் ஏறிக்கொள்ளும் லாரன்ஸ், பேயாக மாறியபின் ஆடும் ஆட்டம் ரணகளமாக ரசிக்கவைக்கிறது.

குழந்தை, இளம்பெண், பாட்டி என உருமாறி, அவர் அடிக்கும் பேய் லூட்டிகள், பிசாசுத்தனமாக பிரமாதப்படுகின்றன. அகோரப் பேயாக அதிரடி ஆட்டம் போடும் அதே வேளையில், டாப்சியுடன் டூயட்டிலும் நடன உச்சம் தொடுகிறார் லாரன்ஸ்.

அழகு தேவதையான டாப்சியை பேயாகக் காட்டினாலும், ரசிக்க முடிகிறது.நித்யா மேனனுக்கு பேர் சொல்லும்படியான கேரக்டர். அனுதாபத்தை அள்ளி, ஆரவார வரவேற்பைப் பெறுகிறார்.பேயைப் படம்பிடிக்கச் செல்லும் குழுவில் உள்ள மனோபாலா, மயில்சாமி, சாம்ஸ், டாக்டர் ஸ்ரீமன், மதுமிதா ஆகியோர் காட்சிக்கு காட்சி கலவரத்தையும் கலகலப்பையும் உண்டாக்குகிறார்கள். கோவை சரளா பழைய ‘காஞ்சனா’வில் பயந்து நடுங்கியதைப்போல பலமடங்கு நடுங்குகிறார்.

அந்த நடுக்கம் ரசிகர்களுக்கு உத்தரவாதமான சிரிப்பை வரவழைக்கிறது. இவரும் ரேணுகாவும் போட்டிபோட்டபடி பேயிடம் அடிவாங்குவது ரகளையிலும் ரகளை.ராஜவேல் ஒளிவீரன் மற்றும் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் திகில் தேரோட்டம் நடக்கிறது. எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா என நான்கு இசையமைப்பாளர்கள் பங்குபெற்று பேயோட்டுகிறார்கள்.பூச்சாண்டி என்று சொன்னாலே பயந்து அழும் குழந்தைகள்கூட ரசித்துப் பார்த்துக் கொண்டாடும் வகையில் எழுதி, இயக்கி, நடித்து வெற்றிபெற்றிருக்கிறார் லாரன்ஸ்.