சம்மருக்கு ஏற்ற காமெடி!“மனித வாழ்க்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடிப்போகிற இடமாக காவல் நிலையம் இருக்கிறது. பொதுவாக காவல் நிலையம் என்றால் எரிச்சலும், கோபமும் வரும். ஆனால் என்னுடைய கதையில் வரும் காவல் நிலையம் உங்களை சிரிக்க வைக்கும்.

அதுதான் அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் தயாரிக்கும் ‘விந்தை’ என்கிறார் இயக்குனர் லாரா. மறைந்த ராசு.மதுரவனின் சிஷ்யரான இவர் ‘வர்மம்’ படத்தை இயக்கியவர்.
மகேந்திரன்-மனீஷா ஜோடி எப்படி?

காதலை வாழ வைக்கும் நோக்கத்தில் ஊரிலிருந்து எஸ்கேப் ஆகும் மகேந்திரன்- மனீஷா ஜோடி ஒரு காவல் நிலையத்தில் தஞ்சமடைகிறார்கள். அந்த சமயத்தில் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடக்கும் அந்த அனுபவத்தைத்தான் காமெடியாக சொல்லியிருக்கிறேன்.

மகேந்திரன் குழந்தையிலிருந்து நடிகர் என்பதால் எளிதாக வேலை வாங்க முடிந்தது. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் தராமல் கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.

அந்த வகையில் இதில் மகேந்திரனின் காமெடி பேசப்படும். சின்ன தேவயானி போல் இருக்கும் மனீஷா ஜித்தின் நடிப்பு ரொம்பவும் மெச்சூரிட்டியாக இருக்கும். மகுடிக்காரனாக வரும் மனோபாலா, தமிழ் பண்டிட்டாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வந்து போகும் இடங்கள் மாஸ்டர்பீஸாக இருக்கும்.

முழுப்படமும் போலீஸ் ஸ்டேஷனில் நடப்பதால் பிரம்மாண்டமாக போலீஸ் ஸ்டேஷன் செட் போட்டு படமாக்கினோம். இந்தப்படம் இந்த சம்மருக்கு ஏற்ற முழுமையான காமெடிப் படமாக இருக்கும்’’ என்கிறார் லாரா.

-எஸ்