கடத்தல் காமெடி



குறும்படங்களை இயக்கியவர்களை கோடம்பாக்கம் கெளரவமாகப் பார்க்கும் காலம் இது. அந்த வரிசையில் ஏராளமான குறும்படங்களை இயக்கியவர் விஜய்பரமசிவம். இவர் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான பரமகுருவின் மகன். ராஜேஷ், சரிதா நடித்த ‘கொலுசு’ படத்தை விஜய்யின் அப்பாதான் தயாரித்தாராம்.‘‘தமிழ் சினிமால இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஹாரர், காமெடிப் படங்கள்தான் தயாரிப்பில் இருக்கின்றன.

அந்த வகையில் என்னுடய ‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’ படமும் காமெடிதான். இந்தப் படத்தை ப்ளாக் காமெடி பட லிஸ்ட்டில் சேர்க்கலாம்.  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கடத்துவதற்கு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என மூன்று டீம் தனித்தனியாக முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய அந்த முயற்சியை சீரியஸாக சொல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.

குறும்படங்களில் நடித்த சரண் சக்ரவர்த்தியை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறேன். உத்தரப்பிரதேசத்தில் பிறந்து தெலுங்கு சினிமால செட்டிலான அகன்ஷா மோகன் நாயகியாக நடிக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்துல வர்றார்.  என்.கே.பதி, கெளதம் சேதுராம் என படத்துக்கு இரண்டு கேமராமேன்கள் வேலை செய்திருக்கிறார்கள். இசை மரியா ஜெரால்டு. இது காமெடிப் படமாக இருந்தாலும் யாரையும் புண்படுத்தாமல் கதை சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் ஃபீல் குட் மூவியாக இருக்கும்’’ என்கிறார் விஜய்பரமசிவம்.

-எஸ்