குடும்பங்கள் விரும்பும் திருட்டுக் கல்யாணம்!



“எப்படி வாழலாம் என்று சொல்லுமளவுக்கு ஒரு ஜோடி, எப்படி வாழக்கூடாது என்று சொல்லுமளவுக்கு ஒரு ஜோடி. இந்த இரண்டு ஜோடிகளின் மாறுபட்ட வாழ்க்கைதான்  செந்தூர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘திருட்டுக் கல்யாணம்’ படம்’’ - நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் இயக்குனர் ஷக்திவேலன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சசி, மூர்த்தி ஆகிேயாரிடம்  பணிபுரிந்தவர்.

‘‘இது காதல், ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த கதை. ஒரு இளம் ஜோடியின் காதல் நிராகரிக்கப்படும் போது என்ன நடக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன். இவ்வளவுக்கும் இந்த காதலர்களுக்கு அந்தஸ்து, ஜாதி பேதம் என எதுவும் தடையாக இல்லை. ஆனால் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. அந்த சமயத்தில் பெற்றோரை எதிர்த்து காதலர்களால் தனியாக வாழ முடியுமா? அப்படி வாழ்ந்தால் அது சரியா? தவறா? என்பதை உண்மைக்கு அருகில் சென்று பதிவு பண்ணியிருக்கிறேன்.

ரங்காயாழி, தேஜஸ்வீன்னு இரண்டு புதுமுகங்கள். ஆனால் படம் பார்க்கும்போது அவர்களை புதுமுகங்கள் என்று சொல்ல முடியாது. ரங்காயாழி அடிப்படையில் குறும்பட இயக்குனர் என்பதால் அவரிடம் இயல்பான நடிப்பை பார்க்க முடிந்தது. தேஜஸ்வீ நல்ல டான்ஸர். ஒரு மேடை நிகழ்ச்சியில் பிரபுதேவாவிடமிருந்து நேரடியாக பாராட்டுப் பெற்றவர்.

செக்யூரிட்டி கேரக்டரில் நடிக்கும் தம்பி ராமையா, அப்பா கேரக்டரில் நடிக்கும் ஆடுகளம் நரேனுக்கும் இந்தப் படம் வேறு அடையாளத்தைத் தரும். கடைசி ஒரு சீனில் வந்தாலும் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி ஒரு பிரமாதமான ரோலில் ஏ.வெங்கடேஷ் வர்றார். இசை மணிஷர்மா உதவியாளர் வைத்தி. சிம்பு பாடியுள்ள ‘ஆச மேல ஆச’ பாடலுக்கும் ஆண்ட்ரியா பாடியுள்ள ‘சொர்க்கத்த’ பாடலுக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது ஃபேமிலியுடன் பார்க்கக்கூடிய மென்மையான படம்’’ என்கிறார் ஷக்திவேலன்.

-எஸ்