அபூர்வ ஸ்லோகம்



குற்றமில்லா வாழ்வருளும் ஸ்ரீகும்பேஸ்வர ஸ்தோத்திரம்

பிரம்ம தேவர் மஹாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஸ்ரீகும்பேஸ்வரரை துதித்து ஸ்ரீகும்பேஸ்வரர் ஸ்தோத்திரத்தை இயற்றினார். இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் குடும்பத்திலுள்ள சிவ அபசாரம் நீங்கி மரண பயமும் விலகும். ஜாதகத்தில் குரு, சூரியன் கிரகங்கள் தோஷமுள்ளவையாக இருந்தால் அவையும் நீங்கி புத்ர லாபமும் ஆரோக்யமும் கூடும். பவிஷ்யோத்தர புராணத்தில் காணப்படுகிறது இந்த  ஸ்லோகத் தொகுப்பு.

நமோ நமஹ காரண காரணாய
ஸ்ரீமத்ஸூகும்பக விக்ரஹாய
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

பொதுப்பொருள்: அனைத்திற்கும் காரணமாக இருப்பவரும், அம்ருத கலசத்தையே தனது சொரூபமாகக் கொண்டவரும், அனைத்து கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமானவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

பீமாய பீமாதிஹராய ஸம்பவே
நாகாய ஸாந்தாய மனோஹராய
மஹாஜடாஜூடதாராய பூதயே
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

சத்ருக்களுக்கு பயத்தை அளிப்பவரும், பயங்கரமான மனோவியாதியை போக்குகின்றவரும்,சுகத்துக்கு இருப்பிடமானவரும், சர்ப்பங்களை  ஆபரணமாக தரித்தவரும்,சாந்த சொரூபியும், பக்தர்களின் மனதைக் கவருகின்றவரும், பெரிய ஜடாபாரத்தை உடையவரும், விபூதியின் சொரூபமாக இருப்பவருவமான ஸ்ரீகும்பலிங்கேஸ்வரருக்கு நமஸ்காரம்.

ஸர்வாகமாம்நாய ஸரீரதாரிணே
ஸோமார்க்க நேத்ராய மஹேஸ்வராய
யக்ஞாய யக்ஞேஸ்வர பூஜிதாய
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

நான்கு வேதங்களையும் தனது சரீரமாகக் கொண்டவரும், சந்திர சூரியர்களை கண்களாக உடையவரும், யக்ஞ சொரூபமாக இருப்பவரும்,  மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீமஹாலிங்கத்துக்கு நமஸ்காரம்.

காத்யாயனீ காமித தாயகாய
துர்கார்த்த தேஹாய க்ருதாகமாய
காலாய காலேஸ்வர பூஜிதாய
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

காத்யாயனிதேவிக்கு கோரிய பொருளை அளிப்பவரும், ஸ்ரீதுர்காதேவியை பாதி சரீரமாகக் கொண்டவரும், ஆகம சாஸ்திரங்களைச்  செய்தவரும், காலரூபியாக இருப்பவரும், சூரியனால் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

விபூதிதாநேக ஸரீரதாரிணே
கல்பாய கல்பாந்தகராய ஸம்பவே
விஸ்வாய வைஸ்வாநரலோசனாய
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

உலகத்திற்கு பலவித ஐஸ்வர்யங்களை அளிப்பவரும்,பிரளயத்தை உருவாக்கு பவரும், சுகத்துக்கு இருப்பிடமானவரும், உலகத்தின் உருவாக  இருப்பவரும், அக்னியை நெற்றிக் கண்ணாக உடையவரும், ஸ்ரீகும்பரூபியுமான ஸ்ரீமஹாலிங்கத்துக்கு நமஸ்காரம்.

மாயாப்ரபஞ்சாய மனோஹராய
மாயாகடே சாய மஹாதிஹாரிணே
மாயாபிரபஞ்சைக நிதானமூர்த்தயே
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

உலகத்தை மாயையால் உருவாக்கிய வரும், மனதைக் கவரும் உருவை உடையவரும், மாயையால் செய்த கும்பரூபியாக இருப்பவரும், பெரும் மனக்குறைகளை நீக்குகிறவரும், மாயையினால் செய்த உலகிற்கு காரணமாக இருப்பவருமான கும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

போகீந்த்ர ஸம்பூஜித விக்ரஹாய
போகீந்த்ர பூஷாய பவாந்தகாய
ஸ்ரீபாரதீ ஸங்கர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டவரும், ஸர்ப்பங்களை ஆபரணமாகக் கொண்டவரும், ஸம்ஸார பயத்தைப் போக்குகின்றவரும், விஷ்ணு, பிரம்மா இவர்களால் பூஜிக்கப்பட்டவரான ஸ்ரீகும்பலிங்கத்துக்கு நமஸ்காரம்.

தாம்ராய சாமீகர பூஷிதாய
ஸ்ரீ ஸோமகோடீர விபூஷிதாய
ஸமஸ்த ஸத்க்ஷேத்ர கலாவராய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

சிவப்பு நிறமுள்ளவரும், தங்க நகைகளை அணிந்தவரும், சந்திரனை தலையில் சூடியவரும், எல்லா புண்ணிய க்ஷேத்ரங்களுக்கும் மேற்பட்ட கலையை தரிக்கின்றவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

ஸ்ருஷ்டி ஸ்திதி த்வம்ஸன காரணாய
ஸ்ரீ ஸ்ருஷ்டி பீஜாங்க மனோஹராய
ஸச்சாஸ்த்ர வேதாந்த களேபராய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றைச் செய்கின்றவரும், அம்ருத கலசத்தில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜத்தை மனோஹரமான அங்கமாகக் கொண்டவரும், வேதங்கள், வேதாந்தங்களையே சரீரமாக உடையவருமான கும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

ஷட்வர்க ஸம்பேதன தீக்ஷிதாய
ஷடானனாதித்ய பலப்ரதாய
ஸமஸ்த மந்த்ரர்த்த நிதான ரூபிணே
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

காமம், குரோதம் முதலிய ஆறுவகையான சத்ரு கூட்டங்களை அழிப்பதில் தீக்ஷை கொண்டவரும், முருகன், சூரியன் இவர்களுக்கு நற்பயனை அளித்தவரும், சகல மந்திரங்களின் பயனை அளிப்பதற்கு மூலகாரணமாக இருப்பவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

கும்போத்பவ ப்ரமுகபூஜித விக்ரஹாய
வீராய வீந்தகராய மாயினே
பக்தேஷ்டதான நிபுணாய பவாப்தி போத்ரே
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

அகஸ்தியர் முதலான முனிவர்களால் பூஜிக்கப்பட்ட சரீரத்தை உடையவரும், யுத்த வீரனாக விளங்குகின்றவரும். சத்ருக்களை அழிப்பவரும், மாயையைத் தன் வசமாக்கிக் கொண்டவரும், பக்தர்கள் கோரியதை அளிப்பதில் திறமை வாய்ந்தவரும், சம்ஸார சமுத்திரத்துக்கு படகாக இருப்பவருமான ஸ்ரீகும்பேஸ்வரனுக்கு நமஸ்காரம்.

மூலாய மூலாகம பூஜிதாய
பதாள மூலாய நிதீஸ்வராய
நித்யாய ஸித்தேஸ்வர பூஜிதாய
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

ஆதிமூலமாக இருப்பவரும், மூலாகமத்தால் பூஜிக்கப்பட்டவரும், பாதாளத்தில் ஒரு சிரஸை உடையவரும், சங்கம் முதலிய ஒன்பது நிதிகளுக்கு அதிபராக இருப்பவரும், எக்காலத்திலும் இருப்பவரும், சித்தர்களின் தலைவர்களால் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு  நமஸ்காரம்.

ஸமஸ்த கல்யாண வரப்ரதாய
ஸமஸ்த கல்யாண நிதானமூர்த்தயே
ஸ்ரீ மங்களாம்பார்ச்சித பாதபத்மிநே
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

கல்யாணங்கள் என்றழைக்கப்படும் மங்களங்கள் யாவற்றுக்கும் மூலகாரணமாக இருப்பவரும், ஸ்ரீமங்களாம்பிகையால் அர்ச்சிக்கப்பட்ட சரண கமலங்களை உடையவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

லக்னாதிபேஸாய க்ரஹார்ச்சிதாய
ஸ்ரீ காமதேனு ஸுரஸங்க ஸுபூஜிதாய
பஞ்சானநாய பரமார்த்த நிதர்ஸகாய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

லக்னங்களுக்கு அதிபதிகளான நவகிரஹங்களுக்கும் தலைவராக இருப்பவரும், நவகிரஹங்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீகாமதேனு மற்றும் தேவர்களின் கூட்டத்தால் பூஜிக்கப்பட்டவரும், ஐந்து முகங்களை உடையவரும், புருஷார்த்தத்தை காண்பித்துக் கொடுப்பவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு  நமஸ்காரம்.

தீர்த்தாதிநாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே
ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வல்லபாய
ஸ்ரீ கும்பலிங்காய நமஸ்ஸிவாய

கும்பகோணத்திலுள்ள தீர்த்தங்களுக்கு அதிபராக இருப்பவரும், தீர்த்த ஸ்நானத்தின் பயனை அளிப்பவரும், கோரிய பயனை அளிப்பவரும்,  ஸ்ரீமந்த்ர பீடேஸ்வரியான ஸ்ரீமங்களாம்பிகையின் கணவருமான ஸ்ரீகும்பேஸ்வரருக்கு நமஸ்காரம்.

காருண்யநிதயே துப்யம் கல்யாணகுண
ஸிந்தவே
ஸூலிநே மாலிநே துப்யம் நமஸ்தே விஸ்வ
மூர்த்தயே

கருணைக்கு இருப்பிடமானவரும், கல்யாண குணங்களுக்கு கடலாக இருப்பவரும், சூலத்தை தரித்தவரும், புஷ்ப மாலைகளை அணிந்தவரும், உலகத்தின் உருவாக இருப்பவரும், ஹகும்பேஸ்வரரான ஸ்ரீமஹாலிங்கத்துக்கு நமஸ்காரம்.

அகோராய நமஸ்துப்யம் வாமதேவயாய தே
நமஹ
ஸத்யோஜாதாய நீலாய லோஹிதாக்ஷாய தே
நமஹ

அகோர மூர்த்தியான தங்களுக்கு நமஸ்காரம். வாமதேவ மூர்த்தியான தங்களுக்கு நமஸ்காரம். ஸத்யோஜாத மூர்த்தியும், நீல வர்ணமாக இருப்பவரும், சிவந்த கண்களை உடையவருமான தங்களுக்கு நமஸ்காரம்.

சந்த்ரகண்டாய ஸாந்தாய காலகாலாந்தகாய ச
ருத்ராய நீலகண்டாய நமோ ம்ருத்யுஞ்ஜயாய ச

சந்திரனை தரித்தவரும், சாந்தியோடு திகழ்பவரும், காலரூபியாகவும், காலனுக்கும் அந்தக ரூபியாக இருப்பவரும், ருத்ரனாயும் கழுத்தில் நீல வர்ணமுள்ளவரும் மிருத்யுவை ஜயித்தவருமான தங்களுக்கு நமஸ்காரம்.

ஸிபிவிஷ்டாய காலாய காலதண்டாய தே நமஹ
ஸ்ரீமதே வேதநிதயே வேதவேத்யாய தே நமஹ

பிரஜைகளின் ஹ்ருதய கமலத்தில் அமர்ந்திருப்பவரும், காலரூபியாக இருப்பவரும், துஷ்டர்களை தண்டிக்கும் காலதண்டமாக விளங்குகின்றவரும், வேதங்களுக்கு இருப்பிடமானவரும், வேதங்களால் அறியத்தக்கவருமான தங்களுக்கு நமஸ்காரம்

வைத்யாய வஸுநாதாய வரிஷ்டாய நமோ
நமஹ
ஸர்வாய ஸாகினே துப்யம் மதனாங்கவிபேதிநே
சந்த்ரசூடாய சண்டாய நமஸ்தே கடண்டிதாரயே
ஹரிகேஸாய தேவாய புஷ்டானாம்பதயே நமஹ

நோய்களைப் போக்கும் மருந்தளிக்கும் வைத்தியராக இருப்பவரும், சொர்ணம் முதலிய பொருட்களுக்கு அதிபராக இருப்பவரும், உலகிற்கெல்லாம் சிறந்து விளங்குகிறவருமான தங்களுக்கு நமஸ்காரம்.

உலகத்தின் தாபத்தைப் போக்குவதில் கிளைகள் நிரம்பிய மரம்போல் இருப்பவரும், மன்மதனின் சரீரத்தைப் பிளந்தவரும், சந்திரனை  தலையில் ஆபரணமாகக் கொண்டவரும், துஷ்டர்களிடத்தில் மிகுந்த கோபம் கொண்டவரும், சத்ருக்களை வதம் செய்கிறவருமான தங்களுக்கு நமஸ்காரம். மலர்ச்சியான முகமுள்ளவராகவும், பாதுகாக்கின்றவர்களுள் தலைவனாகவும் இருக்கும் தங்களுக்கு நமஸ்காரம்.

பஸுநாம்பதயே துப்யம் வ்ருஷபாக்க்ஷேய
தே நமஹ
வ்ருஷவாஹாய விஷவே புண்யகாலாய
தே நமஹ

பசுக்களுக்கு பதியாக இருப்பவரும், ருத்ராக்ஷ மாலையை தரித்தவரும், தர்மத்தின் ரூபமான ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவருமான தங்களுக்கு நமஸ்காரம். விஷுவங்களான சித்திரை, ஐப்பசி, மாதப் பிறப்பு புண்ய காலங்களாகவும் இருக்கும் தங்களுக்கு நமஸ்காரம்.
 
கார்யகாரணரூபாய பேதபேத்யாய தே நமஹ
புரதஹ ப்ருஷ்டதஸ்சைவ பார்ஸ்வதஸ்தே
நமோ நமஹ
பூயோ பூயோ நமஸ்துப்யம் பூயோ பூயோ நமோ
நமஹ

காரியம் காரணம் இவையாக இருப்பவரும், அபிப்ராய பேதங்களையெல்லாம் போக்குகிறவருமான தங்களுக்கு நமஸ்காரம். முன்பும் பின்பும் பக்கத்திலும் தங்களுக்கு நமஸ்காரம். மீண்டும், மீண்டும் பேரருளே தங்களை விடாது நமஸ்கரிக்கிறேன்.
- கேசவராஜ்