தீர்த்தங்களின் கல்வெட்டு ஆதாரம்



குடந்தை மகாமக குளத்தில் எத்தனை தீர்த்தங்கள் (ஊற்றுகள்) உள்ளன என்பதைப் பழங்கால கல்வெட்டு ஒன்று சான்றாக நின்று நமக்குத் தெரிவிக்கிறது.மகாமகத் திருவிழாவின்போது குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கிணறு போன்ற ஊற்று அமைப்பிலுள்ள நீரை மக்கள் மீது  தெளித்து புனித நீராட்டும் நிகழ்வு நடக்கிறது.அந்த கிணறுகளின் அருகே அந்தந்த தீர்த்தத்தின் பெயர்கள் குறிக்கப்பட்ட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாமகம் குறித்து பண்டைய நூல்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் தற்போது குறிப்பிடப்படும் தீர்த்தக் கிணறுகளில்  உள்ள பெயர்களுக்கும் வித்தியாசம் தெரிகின்றன.

மன்னர்கள் காலத்தில் போற்றப்பட்ட இங்குள்ள 20 தீர்த்தங்கள் எவை என்பது பற்றி குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு கல்வெட்டுப் பலகையில் குளத்தின் வரைபடத்தை காட்டி16 சிவாலயங்களையும் குறிப்பிட்டு அவை அருகே உள்ள ஒவ்வொரு படித்துறையும்  ஒரு தீர்த்தம் எனக் காட்ட அங்குள்ள சமஸ்கிருத எண்களைக் கல்வெட்டாக எழுதி அவற்றின் பெயர்களையும் குறித்துள்ளனர். கல்வெட்டில் காணப்படும் இந்த குளத்தின் வரைபடத்திற்கு மேலாக ‘மகாமக தடாகஸ்த தீர்த்தானி’ என்ற தலைப்பு எழுதப்பெற்று அதற்குக் கீழாக 20 என்ற  எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குக் கீழாக 1. நவகன்யா தீர்த்தம், 2. இந்திர தீர்த்தம், 3. அக்னி தீர்த்தம், 4. யம தீர்த்தம், 5. நிருதி தீர்த்தம், 6. வரு ணதேவ தீர்த்தம், 7. வாயு தீர்த்தம், 8. பிரம்ம தீர்த்தம், 9. குபேர தீர்த்தம், 10. ஈசான தீர்த்தம், 11. மத்யே 66 கோடி தீர்த்தம், 12. கங்கா தீர்த்தம், 13. யமுனா  தீர்த்தம், 14. நர்மதா தீர்த்தம், 15. ஸரஸ்வதீ தீர்த்தம், 16.கோதாவரி தீர்த்தம், 17. காவேரி தீர்த்தம், 18.கன்யா தீர்த்தம், 19. க்ஷீரநதி தீர்த்தம், 20.ஸரயூ நதி தீர்த்தம் என்று வரைபடத்திலுள்ள எண்களுக்குரிய தீர்த்தங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. வரைபடத்தையும்,  குறிப்புகளையும் கல்லில் பொறிக்கச் செய்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த குரு ராஜாச்சார்யார் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது.

தகவல்: தமிழ் முரசு