அர்த்தமுள்ள இந்துமதம்



பாவமாம்,புண்ணியமாம்!

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். படஅதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ,  பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாணயத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை பார்த்தார். அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும். அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு  ரூபாய் வரை கடனாகி விட்டது. கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார். அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப்போய் ‘முருகா! முருகா!’ என்று அழுவார். அந்தக் கோயிலோ ஜனநடமாட்டமில்லாத கோயில். கடைக்காரன் கோபித்துக்கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோயிலில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதார். ‘‘முருகா! காப்பாற்று!’’ என்று வேண்டிக்கொண்டார். நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த  மலையை விட்டு இறங்கினார்.

வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதைக் காலால் உதைத்துக்கொண்டு நகர்ந்தார். கொஞ்ச தூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ? அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன. அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்? ‘‘நல்லவனாக வாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை’’ என்றுதானே  எண்ணியிருக்கும்!

அந்த முருகன் அவரை வாழ வைத்தான். ஒவ்வொரு நாளும், ‘முருகா! முருகா!’ என்று உருகுகிறார். ‘‘தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது’’ என்று தொழில் புரிகிறார். அதனால், அவர் நாளுக்கு நாள் செழித்தோங்குகிறார். நீயும் நல்லவனாக இரு. தெய்வத்தை நம்பு. உனக்கு வருகிற துன்பமெல்லாம், பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மதத்தையே நம்ப வேண்டாம். ‘‘பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?’’

‘‘சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?’’
‘‘பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே!’’
- இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன்மொழிகள்.

பாவம் - புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு அவை கேலியாகத் தெரிகின்றன. ‘நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை’ என்று அவன் நினைக்கிறான். நல்லதையே செய்தால்  சொர்க்கத்துக்குப் போவாய் என்றும் அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்குக் காத்திருக்குமென்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாயென்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.

ஆனால், இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள். அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக் கதைகளைச் சொல்லி வைத்தார்கள். இந்தக் கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள்கூட, எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான். பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்கு  உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம். ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில்,  உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.

அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.

‘எப்படித் தீர்க்க நினைத்தீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்’ என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.
‘செய்தவினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்’ என்று முதன் முதலில் போதித்தது இந்துமதம்தான்.
‘‘பாவம் என்பது நீ செய்யும் தீமை.’’
‘‘புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.’’
‘‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.’’
‘‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.’’
‘‘விநாச காலே விபரீத புத்தி.’’

- இவையெல்லாம்் இந்துக்களின் பழமொழிகள். ஊரைக் கொள்ளையடித்து உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா? பிறர் சொத்தைத் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச் செத்தவன் எவனாவது உண்டா? அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா? எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ‘ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்நதி  சாப்பிட்டதில்லை.

கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை. ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்துவிட்டுத்தான் விலகியிருக்கிறது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்கிறது கிறிஸ்தவ வேதம். இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில் திரும்ப  வரும் சிறுசேமிப்பு நிதி; சரியான நேரத்தில் அவனுக்குக் கிடைக்கும் போனஸ்! சாவுக்குப்பின் நடப்பது இரண்டாவது விசாரணை!

முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது. எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. 1953ம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில் தர்மலிங்கமும் மற்றும்  இருபது பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள். அவர்களைத் தனித்தனியாகச் சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள். அவர்களிலே, ‘மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.

செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு.சோமசுந்தரம். பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது வழக்கம். காரணம்,  பன்னிரெண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப் போகும் குற்றவாளி நல்லவனாகத் திரும்பி வந்து அமைதியாக வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே! அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார். செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம்  செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.

மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார். அவரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்தது. ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார். காரணம், நடந்த நிகழ்ச்சி  அவ்வளவு பயங்கரமானது.மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார், விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார். சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைககளை அவர் வைத்திருந்தார். சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே  துணையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார். அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள். ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத் திணறி இறந்து போனார்.

இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான். ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று. நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன! கொலைகாரர்கள் ஓடிவிட்டார்கள். பிடிபட்டவர்கள் ஏழு பேர். சிறைச்சாலையில் அந்த ஏழு பேரில் ஆறுபேர் ‘‘நாளை  தூக்குக்குப் போகப்  போகிறோமே!’’ என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘முருகா முருகா’’ என்று ஜபித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான். சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச  முடியாது. நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம். சலனமே  இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம். உடம்பிலே துணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.

நாளை சாகப் போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:

‘‘ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி ‘அலிபி’ தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான்  விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம்,  கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள்.  சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.’’

அவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று சொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது. அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம். தர்மு  தன்னையும் மறந்து சொன்னார், ‘‘என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!’’ ஆமாம், பாவம் கொடுத்த, ‘போனஸ்’தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.அன்று இரவு நான் தூங்கவே இல்லை. காலை ஐந்து மணிக்கு, ‘‘முருகா! முருகா!’’ என்று  பலத்த சத்தம். கைதிகள் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன். ‘‘என்ன  விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்.’’

‘‘இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக்கொண்டு போகிறாயே, ஏன்?’’ என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. இந்து மதத்தைப்பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமி களும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை. ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை  நடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை. ‘‘ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது’’ என்பது அவர்கள் வாதம்.

அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. தத்துவார்த்த விளக்கமே கூறினார்கள். அந்தத் தத்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு.அந்தத் தத்துவப்படி நடந்த சம்பவங்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு. பாவம் - புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் தத்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன். வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறுத்துவது இந்து  மதம்தான். அதன் பண்பாடுகள் உன்னதமானவை; அதன் சடங்குகள் அர்த்தமுள்ளவை. மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது  இந்துக்களிடம்தான்.

சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்கள் காட்டினார்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்த்தை கூடக் கேட்கக்கூடாது என்றார்கள். பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி. திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை மரணத்தின்போதுதான் கழற்ற வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதுகூடக் கழற்றக் கூடாது. அவ்வளவு புனிதமானது அது. ஒரு உத்தமியின் கழுத்திலுள்ள தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துக்கள்  நம்பிக்கை. எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத்திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக்க விரும்பினேன்.
 
நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன். ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம்  செய்தபோது வறுமையிலிருந்தார். அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை. அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து  அணிந்திருந்தார். தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார். உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை  எடுத்துக்கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன். நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான்  அடகு வைக்கப்பட்டிருந்தன. தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன். அவர் பணத்தையும்  வாங்கிக்கொண்டு, ‘‘ஏராளமான வட்டி பாக்கியிருக்கிறது. இதை வட்டிக்கு வரவு வைத்துக் கொள்கிறேன்;  தாலியைத் தரமுடியாது’’ என்று  சொல்லி விட்டார். பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை. பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுக்க, அவர் புதிய  தாலியையே வாங்கி, தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.

என் படம் நடந்துகொண்டிருந்தபோதே, அந்த நடிகர் ‘இன்சால்வென்ட்’ ஆனார். ஆனால், மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. ‘இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துக்கள் அவருக்கு  திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி உத்தமி. புராண  காலத்து சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி. அந்தச் சத்தியவதியின் தாலியை அடகாக வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்டபாடும், அதில் ஏற்பட்ட குழப்பமும், அவர் நோயில் இழுத்துக் கிடந்து மாண்டதும் விவரிக்க முடியாத பெருங்கதை. அந்தத்  ‘தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்துவிட்டது. இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டி விட்டது. பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்துவிட்டது. நிற்க.

‘‘அன்னையும் பிதாவும் முதல் தெய்வம்’’ என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.
‘‘தாயைப் பணிந்தவன் கோயிலுக்குப் போக வேண்டாம்’’ என்பார்கள்.

தாய் - தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றிவந்த முருகனுக்கு அல்ல. தாய்-தந்தையருக்குத் தொண்டு செய்துகொண்டிருந்த ஒரு பக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை என்றும், இறைவன்  ஆத்திரமுற்றபோது ‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறினான் என்றும், இறைவனே மனமயங்கி, அவன் பாதத்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம். அந்தத் தாய் - தந்தையரை மனமார நேசிக்கும் எவனுக்கும் எதிர்காலம் உண்டு.நான்  கண்ணெதிரிலேயே பார்க்கிறேன், பலரை. ஆனால், தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும். அவர் என்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர். அவரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டி வைத்து மகனுக்குச்  சோறூட்டுவாள்.

எங்கள் பக்கத்தில், பிள்ளைகள் இல்லாத பணக்காரர்கள் ‘சுவிகாரம்’ எடுக்கும் பழக்கம் பரவலாக உண்டு. அந்தச் சுவிகாரத்தில், பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள். அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே  என்று கருதியும் சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார். ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற தாயையே மறந்துவிட்டான்! அவனால் மறக்க முடிந்தது; தாயினால் அது  முடியவில்லை. ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த வீட்டின் வெளித்திண்ணையில் அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் ‘‘ஐயா, நீ யார்?’’ என்று கேட்டார்கள். ‘‘என்னை ஆச்சி? என்ன வேண்டும்?’’ என்று  நான் கேட்டேன்.

உடனே அந்த மூதாட்டி, ‘‘தம்பி, உள்ளே இருப்பது என் பிள்ளைதான். சுவிகாரம் விட்டுவிட்டேன். அவனைப் பாக்குறதுக்காகக் காலையில் இருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மகங்கிட்ட கொஞ்சம் சொல்லேன்’’  என்றார்கள். என் கண்கள் கலங்கிவிட்டன. ஆசையாக ஒரு கூடையில் பணியாரமும் உளுந்து வடையும் கொண்டுவந்து, துணியால் அதை மூடி வைத்திருக்கிறார்கள் - தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடுவதற்காக. நான் வேகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, ‘‘உன்னைப் பெற்ற தாயார் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா’’ என்றேன். அவர் கோபமாக, ‘‘அவுங்களுக்கு  எப்பவும் இதே வேலையாய்ப் போச்சு. வராதே வராதேன்னா எதுக்காக வர்றாக?’’ என்று கூறிவிட்டு, கணக்குப் பிள்ளையை அழைத்து, ‘‘இந்தா ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு ரூபாய் கொடுத்து, இனிமே இந்தப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லு’’ என்றார். ‘‘அதை  நீயே கூப்பிட்டுச் சொல்லேன்’’ என்றேன் நான்.

அவர் மறுத்துவிட்டார், மனைவிக்குப் பயந்து. கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்ததும் அந்த அம்மையார், ‘‘அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!’’ என்று சத்தம் போட்டார்கள். அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில்  விழவில்லை. விளைவு என்ன தெரியுமா? தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக் குரலையும் கேட்க முடியாதபடி, ‘டமாரச்’  செவிடாகி விட்டன. மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி என்ன என்பதைப் புராணங்களைப் படித்து நீ நம்பவில்லையானால்,  உன் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பார். இப்படியொரு சம்பவம் அங்கேயும் நடந்திருக்கும். தாய்-தகப்பனுக்குச் செய்யும் பாவம் உன்  தலையைச் சுற்றி அடிக்கும். ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது. இந்துக்கள் சொன்ன தத்துவம் வேடிக்கைக் கதையல்ல. ‘‘யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்குத் தண்டனை உண்டு’’ என்பது அழிக்க முடியாத உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக்கொண்டே போகலாம். எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். ‘பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்பது, எவ்வளவு உண்மை! இறைவன் தீர்ப்புகள் எப்படி  இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னதுபோல் வேறு யார் சொன்னார்கள்? இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன். சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதவரை, ஞானமார்க்க  உபதேசிகளை நான் கேலி செய்ததுண்டு. ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக்காண, நமது ஞானிகள் ‘அறிவுலகத்தின் சுடரொளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன். இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவதுபோல், தத்துவத்தின் உண்மையைச்  சம்பவங்களே உறுதி செய்கின்றன. ‘இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர், இந்து மதத்துக்கே பொருந்தும்.

(தொடரும்)

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.