வீணை இசைக்கும் ஆஞ்சநேயர்



கும்பகோணம் ராமசாமி கோயிலின் மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திர ஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார்கள். கம்பீரத்தோற்றம். ஸ்வாமி, இடதுகாலை மடக்கி மற்றொருகாலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்டமேகம் போன்ற நிறம். அதில் ஞானச்சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரைபோன்ற மலர்ந்த கண்களில் அமுதச்சாரல் வீசுகின்றன. கூரிய நாசி. செவ்விய இதழ்கள்.

அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபய ஹஸ்தம் காட்டி எப்போதும் காப்பேன் என்று கூறுகிறது. சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ஸ்ரீராமனிடம் விநயமாக நம் குறைகள் எடுத்துக்கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே  சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். தர்மத்தை அழகாக வாழ்ந்து  வழிகாட்டும் அருமைச் சகோதரன். லஷ்மணாழ்வார் ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக்கொண்டு நிற்பதைப்பார்க்கும்போது உள்ளம் நெகிழ்கிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக்  கொண்டு நிற்கும் காட்சி காணக் கண் கோடி வேண்டும்.

முக்கியமாக ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாக  பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவைசாதிக்கிறார். கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்தக் கோலம் வேறெங்கும் காணக்கிடைக்காது.