ஆதித்ய ஹருதயம் உரைத்த அகத்தியர்



பிரளய காலம் என்பது ஓவ்வொரு யுகம் முடியும் தருவாயிலும் வரும். அப்படி க்ருத யுகம் முடிவடைந்தபோது வெள்ளம் பெருக்கெடுத்து பூமியைச் சூழ்ந்து கொண்டது. அப்போது படைக்கும் தொழிலை புரியும் பிரம்மன் உயிர்களையெல்லாம் சேர்த்து அமிர்தத்துடன் கலந்து ஒரு  மண் பானையில் வைத்து, அதனை மாவிலை போன்ற திரவியங்களால் அலங்கரித்து, கலச பூஜை செய்து மகாமேரு மலைமீது வைத்தார். பிரளய வெள்ளம் அளவுக்கு அதிகமாய் பீறிட்டு ஜீவன்கள் நிரப்பப்பட்ட பானையை அடித்துக் கொண்டு பாரத நாட்டின் தென் திசையை  நோக்கிப் பாய்ந்து வந்தது. தேவர்கள் சிவபெருமானை பிரார்த்தித்து ஜீவன்கள் அடைக்கப்பட்ட பானையை நிறுத்தும்படி வேண்ட சிவனும் கிருதமூர்த்தி வடிவு கொண்டு பாணம் ஒன்றால் அப்பானையை உடைத்தார். அப்படி அந்த கும்பம் என்ற பானை உடைந்து அதிலிருந்து  அமிர்தமும் ஜீவன்களும் வெளிப்பட, மீண்டும் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின. இதனை அகத்தியர் தமது நாடியில்,

‘பிரளய நீரில் நீந்திய ஜீவ கும்பத்தை
பாணமொன்றால் கயிலாயநாதன்
தகர்க்க கண்டோமே; அமிர்தமது
நின்ற துவித்தலமும்
மகாமகமொடு பொற்றாமரை
பொய்கையானதே
சிவனே தன்னமிர்த கரத்தால்
கும்பத்தைக் கூட்டி
மலரசஞ்சாய்ந்து மணலிங்கமாக்கிட்டானே’
- என்கிறார்.

ஆக கும்பத்தில் இருந்து வெளிப்பட்ட அமிர்தமது இரண்டு இடங்களில் தேங்கி நின்றது. அதனையே மகாமகக் குளம் என்றும் பொற்றாமரைக் குளம் என்றும் நாம் போற்றி வணங்குகிறோம். பிரம்மதேவரே இந்த கும்பேஸ்வரரை நிறுவினார். இங்குள்ள சிவன்,  கும்பத்தினாலும், மணல் மற்றும் தேன் கலந்து ஈசனே உருவாக்கியது என்று புலனாகிறது. மந்திர வடிவமாய் அன்னை மங்களாம்பிகை கோயில் கொண்டுள்ள புண்ணியத் தலம் இது. இந்த கலசத்தை அலங்கரித்த தேங்காய், மாவிலை யாவும் கூடி தல விருட்சமாக வன்னிமரமாக இன்றும் விளங்குகிறது. சனிதசை, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி போன்றவற்றின் உக்கிரம் தணிய இந்த வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் கணபதியை வணங்கினால் உடனடி நிவாரணம் கிட்டும். இது கண்கண்ட உண்மை.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் குருபகவான் கொலுவிருக்க, மக நட்சத்திர தினத்தன்று மாசி மாதத்தில் மகாமக விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் குருபகவான் வேண்டுதலின்படி மகாமக குளத்தில் வாயுதீர்த்தம், கங்கா  தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,  யமுனை தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசான தீர்த்தம், நர்மதா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவேரி தீர்த்தம், யமன் தீர்த்தம், குமரன் தீர்த்தம், நிருருதி தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம்,  கன்யா தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் பூலோகத்தில் இருந்தும் தேவலோகத்தில் இருந்தும் வந்து சங்கமமாவதாக ஐதீகம். அப்படி புண்ணிய  தீர்த்தங்கள் எல்லாம் கலந்த இத்திருக்குளத்தில் ஈசனே பத்து விதமான வடிவங்களில் அரூபமாய் நீராடுவார். அப்படி அவர் நீராடி மகிழ்கையில் அவருடைய வடிவங்களை தனது ஞானக் கண்ணால் கண்ட அகத்தியர் அத்திருக்கோலங்களை இப்படி வர்ணிக்கிறார்:

‘கோலமது ஐயிரண்டு ஆதிசிவனே
எடுத்து நீராடி நிற்கக் கண்டோமே
பிரம்ம முகுந்தனாய தனத்து
விருக்ஷிபமென
பானீ கோணீ பக்தீயெனும் பயிரவா
வகஸ்திய
வ்யானேனென விளங்க வானோரும்
வழிபட்டு தம் மெய் மறந்தனரே’

-அதாவது திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தது போலவே, ஈசனும் பத்து வடிவங்களாக உருக்கொண்டு மகாமகக் குளத்தில் நீராடி, தேவர்களையும், பிற அனைவரையும் மகிழ வைத்தார் என்று நாடி வாயிலாக அறிகிறோம். அன்று ஈசன் எடுத்த திருவுருவங்கள் பிரம்ம  தீர்த்தீஸ்வரர், முகுந்தீஸ்வரர், தன ஈஸ்வரர், வ்ருஷப ஈஸ்வரர், பாநீஸ்வரர், கோணீஸ்வரர், பக்தீஸ்வரர், பைரவ ஈஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியானேஸ்வரர் ஆகும். இந்த மூர்த்தங்கள் யாவும் அரை நொடியில் தோன்றி நீராடி மறையும் என்கின்றனர் சித்தர்கள்.

பொதிகை மலை செல்லும் வழியில் அகத்தியர் ராமபிரானை இலக்குமணனுடன் சந்திக்கிறார். அனுமன் இந்த குள்ளமான முனிவன்தான் அகத்தியன் என்று ராமனுக்கு அறிமுகப்படுத்தினார். வாட்டம் கொண்ட முகத்தினனாய் ராமபிரானை இந்த மகாமகக்குளக்கரையில் கண்ட அகத்தியர், அவரை ஆறுதல்படுத்த முயன்றார். குடமது உடைந்து ஜீவன் வெளிப்பட்ட இந்த இடத்தை ராமனுக்கு அகத்தியர் விளக்கி, இது  குடம் உடைந்து நின்ற தலம் என்பதால் குடந்தை என கூறி கும்பேஸ்வரரை வணங்கிட அழைத்துச் சென்று அந்த சந்நதியில் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை ராமபிரானுக்கு உபதேசம் செய்து, பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்சம் ஒன்றை ராமனுக்கு தந்து ஆசி கூறினார். மூன்று முறை  ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து பின் ருத்ராட்ச பீடத்தை தியானித்து ராமபாணத்தை ராவணன் மேல் ஏவ, ராமனின்  பக்கம் வெற்றி வர, ராவணனின் பத்து தலைகளும் தலையில் உருள மண்டோதரியின் மங்கலநாண் அறுந்தது என்கிறார் அகத்தியர் தன் நாடியில்:

‘அருணகிரண ஸ்தோத்திரந் தன்னுடனே
ருத்ராட்ச பீடணங்கூட்டி எய்த ராமபாணமதால்
மண்டோதரியின் மங்கல நூலது
எரிந்து சாம்பலானதே’

எல்லா சித்தர்களும், தேவர்களும் நீராட விரும்பும் பொய்கைதான் இந்தக் குடந்தை திருத்தலத்திலுள்ள மகாமகக் குளம். இதற்கு இணையான ஒரு பொய்கை ஈரேழு லோகங்களிலும் இல்லை. இந்த 2016ம் ஆண்டில் வரும் மகாமகத் திருவிழாவின்போது அந்தப் பொய்கையில் நீராடி  பெறும்பேறு எய்துவோம். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் மாசி மாத மக நட்சத்திர நாளன்றும் இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஈசனை வழிபட்டு, மகாமக நீராடலுக்கு அவரது அருளை வேண்டுவோம்; வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்வில் வளம் காண்போம்.