வருடாந்திர சிறப்பும் பெறும் மகாமகக் குளம்!



கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் உலகளாவிய முக்கியத்துவம் பெறுவது என்று இல்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த மகாமகத் திருவிழா மிகவும் சிறப்பானதுதான். சரி, மகாமகம் விழா முடிந்துவிட்டது, இனி அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்குக் காத்திருக்கலாம் என்று கும்பகோண பக்தர்கள் அமைதியடைந்துவிடுவதில்லை. ஆமாம், ஒவ்வொரு வருடமும் அவர்கள் இந்த மகாமகக் குளத்தில் நீராடி புண்ணியம் பெறுகிறார்கள்.

வருடாவருடமா? ஆமாம், ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திர நாளன்று பௌர்ணமி திதி அமையும். அந்த நாளிலும் இந்தக் குளத்தில் நீராடி இறையருளைப் பெறுகிறார்கள் அவர்கள். அதை ஒரு வழக்கமாக, சம்பிரதாயமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பது வியப்புக்குரிய தகவல்.மகாமகம் போலவே, கும்பகோணத்திலுள்ள அனைத்து சிவ, விஷ்ணு கோயில்களிலும் இறை மூர்த்தங்கள் தீர்த்தவாரி காண்கின்றன. வைணவக் கோயில்களில் அந்தந்த திருக்குளங்களில் இவ்வாறு நடைபெறுகிறது. இப்படி  நடைபெறும் வருடாந்திர நீராடல் காட்சிகள் இங்கே சில புகைப்படங்களாக, எங்கள் கோப்புகளிலிருந்து எடுத்து  உங்கள் ஆன்மிகப்  பரவசத்திற்காக, இதோ அளிக்கிறோம்.

மகாமகத் திருவிழாவின்போது மட்டுமல்லாமல், வருடாந்திர மாசிமகக் கொண்டாட்டத்திலும், கும்பகோணத்தைச் சேர்ந்த அனைத்து சைவ, வைணவக் கோயில்களும் பங்கேற்கின்றன. உதாரணத்துக்கு, சார்ங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் சார்ங்கபாணி-கோமளவல்லித் தாயார் தெப்பக் காட்சி.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் கோயில்களின் அஸ்திரதேவர்கள் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி காண்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மகாமகக் குளத்தின் நான்கு திசைகளிலிலிருந்தும் படிகளில் இறங்கி நீராடத் தயாராக இருக்கிறார்கள்.

- பி.எஸ்.
படங்கள்: ஸி.எஸ். ஆறுமுகம்