அட்டைப்படம், அப்படி ஒரு அழகு!



வாசீக கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் படைத்த ‘அந்த ஒருவர் யார்?’ என்ற அப்பர் தேவார அமுது கட்டுரையும், ‘மந்திரங்கள் என்றால் என்ன?” என்பதை விவரித்த அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் கட்டுரையும் திகட்டாத ஆன்மிக இலக்கிய விருந்தாய் பரவசப்படுத்தின. சனீஸ்வரன்  என்பதுதான் சனிபகவான் திருநாமம் என்று இதுவரை நினைத்திருந்தோம். சனைஷ்சரன் என்பதுதான் உண்மையான திருநாமம் என அறிந்து தெளிவு பெற்றோம்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

திருமூலரின் திருமந்திரத்தை இத்தனை நகைச்சுவை உணர்வோடு வேறு யாரேனும் விளக்கிச் சொல்லியிருக்கிறார்களா என்பது சந்தேகமே!
- வே.ராமானுஜன், எர்ணாவூர்  

நேரத்தின் மதிப்பையும் நம் பொறுப்பையும் சுட்டிக்காட்டிய பொறுப்பாசிரியரின் தலையங்க கட்டுரைக்கு நன்றி. அந்த ஒருவர் யார் எனக் கேட்டு அங்க அடையாளங்காட்டி, அச்சம் போக்கி மீண்டும் பிறவாநிலைக்கு வழிகாட்டிய கி.வா.ஜ.அவர்களின் கட்டுரை வெகு அற்புதம்.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

பெற்ற தாயைப்பற்றி அன்றே ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் பெருமைப்பட வைத்து பாடல்களை வடித்திருந்தது நெஞ்சை உ(ரு)லுக்கியே விட்டது.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.

தங்கள் இதழ் அட்டைப்படம் அப்படியொரு அழகு! தெய்வம் நேரில் நின்று காட்சி தருவது போல் உள்ளது அற்புதம். தெளிவு பெறுஓம்... அட, அட.. விளக்கங்களில்தான் என்ன ஒரு தெளிவு! சூப்பர், படு சூப்பர். அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் கண்ணதாசன் இன்னும் நம்மோடு வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. ஜமீன் கோயில்கள் தரும் தகவல்கள் வியக்க வைக்கின்றன.
- இரா.வைரமுத்து, சென்னை.

கோயிலில் உள்ள கல்வெட்டுகள்தான் எத்தனை கதைகள் சொல்கின்றன! அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அக்கால கோயில் பராமரிப்புகளை மிகத் தெளிவான விவரமாகத் தெரிந்துகொள்ள உதவும் ஆசிரியருக்கு நன்றி.
- ரத்னா ராஜசேகர்,
 செகந்தராபாத்.

கி.வா.ஜ. அவர்கள் எழுதிய திருவதிகை பெருமானின் தேவார அமுது சுவைத்து மகிழ்ந்தோம். மாதேஸ்வரனின் இத்தகையச் சிறப்பை இதுவரை நாங்கள் அறிந்ததில்லை.
- கே.விஸ்வநாத்,
பெங்களூரு.

மகாபாரதம் தொடர் விறுவிறுப்பாக உள்ளது. தீர்த்த நீராடல் கட்டுரையைப் படிக்கும்போதே அந்தந்த தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தைப் பெற்றாற்போல் இருந்தது. பக்தித் தமிழ் தொடரின் ஓவியங்கள் அருமையோ அருமை.
 - லதாராஜ், வந்தவாசி.

பிரசாதங்களில் இத்தனை வகையா! வியந்தோம். புதுமையானதானாலும், பழமையானதானாலும் இறைவனுக்கு நிவேதித்தால் அது பிரசாதமாகிவிடும் எனும் ஆசிரியரின் முன்னுரையே தனிச்சுவை.
- ஜகன்நாதன், புதுடெல்லி.

மஞ்சு விரட்டு வேண்டுமா, வேண்டாமா என்ற சர்ச்சையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஒரு விவசாயி ஏரெடுத்தானானால்தான் அவனுடையை வாழ்க்கையும் ஏறுநடைபோடும் என்ற யதார்த்தத்தை ‘குறளின் குரல்’ தெள்ளென விளக்கியது. 
- சுந்தர தியாகராஜன்,
திருமலை வையாவூர்.

தெளிவு பெறுஓம், பிரசாதங்கள், வளம் தரும் வாஸ்து அடுத்த இதழில்