மகாபாரதம்



போரிலும் நேர்மை பாராட்டியவர்கள்!

பாண்டவ ப்ரஸ்தத்தில் அரசவையில் வீற்றிருந்த தருமபுத்திரரிடம் விடைபெற்றுக் கொண்டு கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன் மூவரும் மகத தேசத்தை நோக்கிப் போனார்கள். ஜராசந்தனின் மிகப் பெரிய கோட்டை இருக்கின்ற அந்த தேசத்து மக்கள் பூஜை செய்கின்ற கிரிவிரதத்தின் மீது ஏறினார்கள். அந்த மலை மகத தேசத்தினுடைய முக்கிய அணிகலனாக விளங்கியது. பெரிய மதிப்பாக மக்கள் அதை கருதினார்கள். அந்த  மலையின் மீது முரசுகள் வைக்கப்பட்டிருந்தன. அவை ஒருமுறை ஒலித்தால் எதிரொலியின் மூலம் பல மாதங்களுக்கு அந்த முரசு சத்தம்  கேட்டுக் கொண்டிருக்கும். அந்த மலைத் தொடர் அவ்வித விசித்திரம் கொண்டது.

மூவரும் மலை மீது ஏறி அந்த முரசை அறைந்து பிறகு அதை அவிழ்த்து கீழே போட்டு உடைத்தார்கள். எந்த சிகரத்தை மக்கள் கண்மணி என்று கருதியிருந்தார்களோ அதைத் தங்கள் முழு பலத்தால் இடித்து உடைத்து அதன் சிகரங்களை உடைத்தெறிந்தார்கள். தொலைவிலிருந்து  பார்த்தால் கும்பிடத் தோன்றும் அதன் சிகரம் இப்பொழுது மூளியாக இருந்தது. ஜனங்கள் பதற வேண்டும் என்றும், வீரர்கள் ஆத்திரப்பட வேண்டும் என்றும், போருக்குத் தயாராக வேண்டும் என்றும், அவர்கள் அழிவு ஆரம்பமாகி விட்டது என்பதை காண்பிக்க வேண்டும்  என்றும் இந்த காரியங்கள் அந்த மூவரால் செய்யப்பட்டன. சிகரத்தை உடைத்து விட்டு அவர்கள் கீழே இறங்கினார்கள். ஜனங்கள் பதறினால்தானே தலைமை அதிரும்? ஜராசந்தனை அதிகம் அதிர வைத்தார்கள்.

மகத தேசத்தின் தலைநகருக்குள் அவர்கள் நுழைந்தார்கள். மிகப்பெரிய கோட்டையில் பலத்த காவல் இருந்தபோதும் அவர்கள் தங்கள் புஜபலத்தால் வலுக்கட்டாயமாக நுழைந்தார்கள். மக்கள் புழங்கிக் கொண்டிருக்கும் கடைத்தெருவில் ஆரவாரம் செய்தார்கள். வன்முறையால்  மூன்று மலர் மாலையை பிடுங்கிக் கொண்டார்கள். தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டார்கள். வண்ண உடையில் இருந்தார்கள். எல்லோரையும் தங்களைப் பார்க்க வைத்தார்கள். அந்தணர்கள் சூழ்ந்த ஜராசந்தன் பூஜையறையில் விளக்குகள் ஆடின. அறுந்து விழுந்தன. ஹோமத்தீ அணைந்து புகைந்தது. இம்மாதிரியான துர்சகுனங்களை கண்ட அந்தணர்கள் ஜராசந்தனை உடனடியாக யானையின் மீது ஏற்றி அதைச் சுற்றி தீ வளர்த்து அவன் பாதுகாப்புக்காக மந்திரங்கள் சொன்னார்கள். ஆனால், யானை தீயை கண்டு நடுங்கியது. அந்தணர்களால்  அமைதியாக மந்திரங்கள் சொல்ல முடியவில்லை. மந்திரக் கட்டு குலைந்தது.

அரண்மனைக்குள் நுழைந்த மூவர் பற்றிக் கேட்டு பூஜையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஜராசந்தன் அரசவைக்குப் போனான். அந்த மூவரும் அந்தண வேடத்தில் இருந்ததால் மரியாதையாக கைகூப்பி வரவேற்றான். உங்களுக்கு நல்வரவு என்று சொல்லி அவர்களை  நமஸ்கரித்தான். அர்ஜுனனும், கிருஷ்ணரும் பேசாமல் இருந்தார்கள். அவன் வரவேற்பை ஏற்காததுபோல் முகம் திருப்பிக் கொண்டார்கள். ஸ்ரீகிருஷ்ணர் ஜராசந்தனிடம் சொன்னார்: ‘‘நள்ளிரவு மட்டுமே பேசுகின்ற விரதத்தை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். அதனால் இப்போது  பேசவில்லை’’ என்று சொல்ல, அவர்களை யாகசாலையில் தங்க வைத்துவிட்டு மன்னன் தன் இருப்பிடத்திற்குப் போனான். நள்ளிரவிற்குப் பிறகு அவர்களை தேடி வந்தான். அவர்களை சந்திப்பதில் மிகுந்த கவனமாக இருந்தான்.

‘‘அந்தணர்களே யார் நீங்கள்? உங்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்ததாக நினைவில்லை. அப்படி செய்திருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள். எதற்காக மகதம் பூஜை செய்கின்ற சிகரத்தை உடைத்தீர்கள்? முரசுகளை அறைந்து நாசம் செய்தீர்கள்? எந்த முன்னறிவிப்புமின்றி யுத்தம் செய்கின்ற நோக்கத்தோடு நீங்கள் வந்திருப்பது தெரிகிறது. காரணம் என்னவென்று சொன்னால் அதற்கேற்றபடி நான் ஆயத்தமாவேன்’’ என்று மரியாதையாக பதில் சொன்னான்.

நல்லவனோ, கெட்டவனோ, அரசனோ, அரக்கனோ பரத கண்டத்தின் இந்த மரியாதைதான், அதன் மிகப் பெரிய நாகரீகமாக இன்றளவும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. வேதங்களிலிருந்து கிளர்ந்த சனாதான தர்மம் அந்த வேதத்தின் சாரத்தை தன்னுடைய நியதிகளாக வைத்துக் கொண்டது. வம்புச்சண்டைக்கு வந்தால்கூட என்ன காரணம் என்று கேட்டுத்தான், தகுந்த மரியாதையோடு உபசரித்த பிறகுதான், யுத்தம் துவக்குவது வழக்கம். எதிரியா இல்லையா என்று தீர்மானிப்பது பண்பாடு. ‘‘எதற்கு வந்தீர்கள். எதற்காக வர்ண மாலைகளை தரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக மலை உச்சியை துவம்சம் செய்தீர்கள்’’ என்று ஜராசந்தன் ஒரு அரசனுக்குரிய நியதியோடும் பண்போடும்  கேட்டான்.

‘‘நாங்கள் அந்தணர்கள் வேடம் பூண்டிருக்கிறோம். எங்களிடம் லக்ஷ்மி வாசம் செய்வதால் மலர் மாலை அணிந்திருக்கிறோம். நான் உனக்குத் தாய் மாமன், கிருஷ்ணன். இவர்கள் அர்ஜுனனும், பீமனும் ஆவார்கள். உன்னை தண்டிக்க வந்திருக்கிறோம். உன்னால் கவரப்பட்ட அரசர்கள்  பலரையும் விடுவித்து இவ்விதம் கொடுமை செய்ததற்காக உன்னோடு போர் செய்து உன் கர்வத்தை குலைக்க வந்திருக்கிறோம்.’’ சகல விஷயமும் தலையில் கொட்டப்பட்டது. இதுதான் காரணம் என்று பூடகமின்றி நேரடியாகப் பேசப்பட்டது. ‘‘இதற்கு அந்தண வேடத்தில்  வருவானேன்? பெரிய படை திரட்டி வந்திருக்கலாமே. என் படையோடு சமர் செய்திருக்கலாமே. நீங்கள் தனித்த யுத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் போலும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். உங்கள் மூவரோடும் நான் ஒரே நேரத்திலும் அல்லது தனித்தனியாகவும் சண்டையிடவும் தயார். இது எனக்கு கொண்டாட்டமான விஷயம். நீங்கள் என்னை தண்டிப்பதற்கு என்று சொன்னதுதான் நகைப்பாக இருக்கிறது. நான் ஒன்றும் இரவில் படுத்துத் தூங்குகின்ற அரசனை அவன் மனைவியர் மத்தியிலிருந்து கவர்ந்து வந்து  விடவில்லை. முன்னறிவிப்பு செய்து, போரிட்டு, ஜெயித்து கொண்டு வந்திருக்கிறேன். போர் செய்ய திராணி இல்லாதவன் என்னிடம் கைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறான். இதில் என்ன தவறு என்று தெரியவில்லை. வெகு நிச்சயமாக நான் அவர்களை பலிபோடப் போகிறேன். சிவனுக்காக தீட்சை எடுத்து யாகம் செய்யப் போகிறேன்.

இப்பொழுது உங்களையும் அந்த கும்பலில் சேர்த்துக் கொள்கிறேன். நீங்களாக வந்திருப்பதால் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். எப்படி யுத்தம் செய்ய விருப்பம்?’’ என்று வெகு குதூகலத்தோடு கேட்டான். மரணம் பற்றி சிறிதும் அஞ்சாத க்ஷத்திரியர்கள் வாழ்ந்த தேசம். அவரவர் கொள்கையில் அவரவர்க்கு உடன்பாடு இருப்பினும் அதில் தவறு இருந்தால் போரிட்டு தீர்த்துக் கொள்ள வேண்டிய நியதி உள்ள தேசம் இது. வலிமையுள்ளது எஞ்சும் என்ற தர்மத்தை பின்பற்றுகின்ற தேசம். நான் தவறா, சரி. முடிந்தால் தண்டித்துப் பார். அல்லது தவறு என்று சொன்ன உன்னை நான் தண்டிக்கிறேன். என்று விஷயங்களை தீர்த்து விடுகின்ற தேசம். நியாயங்களை நிலைநிறுத்துகின்ற தேசம்.

ஜராசந்தன் போருக்குத் தயார் என்று சொன்னதும் பீமன் எழுந்து அவனோடு போர் செய்வதாக தன் விருப்பத்தை தெரிவித்தான். ஜராசந்தன் அதை வரவேற்றான். அர்ஜுனனைக் காட்டிலும், பீமனைக் காட்டிலும் வலிமைமிக்க நாராயண அம்சமான கிருஷ்ணர் அமைதியாக  இருந்தார். ஜராசந்தனை கொல்லுகின்ற வலு அவருக்கு இருப்பினும் யது குலத்தோரால் அவன் கொல்லப்பட மாட்டான் என்ற வரம் வாங்கியிருந்ததால் தான் நகர்ந்து பாண்டவர்களுக்கு இடம் கொடுத்தார். பீமனால் இவன் கொல்லப்பட வேண்டும் என்பது விதி என்று அசரீரி  சொல்லிருப்பதாலேயே ஜராசந்தனோடு போர் செய்த பலராமர் பின்வாங்கி கிருஷ்ணரோடு துவாரகாபுரிக்கு போய் புதிய கோட்டை அமைத்துக் கொண்டார். யதுகுலம் ஜெயிக்க முடியாத எதிரியை இப்பொழுது பீமன் மூலம் வஞ்சம் தீர்த்துக் கொள்ளப்போகிறது. ஒருவனுக்கு  மரணம் முள்ளால் வரவேண்டுமென்றாலும், ஆயுதத்தால் வரவேண்டுமென்றாலும், கையால் வரவேண்டுமென்றாலும் அதன் வழியேதான்  வந்து தீரும். மாற்று முயற்சிகள் பயன்படாது. அவதாரமான கிருஷ்ணர் இதை தெரிந்து கொண்டு வலிவுமிக்க பீமனை ஜராசந்தனோடு  போரிட அனுப்பினார்.

மறுநாள் காலை போருக்கான மேடை தயாரானது. திரண்டு வேடிக்கை பார்க்க வந்த மல்லர்களும், போர் வீரர்களும், அதிகாரிகளும்  ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் பொதுமக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மல்லர்கள் இருவரும் மேடை ஏறினார்கள். பரஸ்பரம் கால்தொட்டு  நமஸ்கரித்துக் கொண்டார்கள். விலகி நின்று கை கூப்பினார்கள். ஜனங்களுக்கு வந்தனம் சொன்னார்கள். பிறகு, அருகே நின்று இரண்டு  கைகளையும் ஒருவரை ஒருவர் பற்றி மேடையிலிருந்து தள்ள முயற்சித்தார்கள். இழுத்து கீழே போட வலிவு காட்டினார்கள். ஆனால்,  இருவரும் பரஸ்பரம் அசையவில்லை, மல்லாந்து விழவில்லை. உடும்புப் பிடியாக தசைகள் முறுக்கி, முதுகு விடைத்து, பிருஷ்டம் இறுக்கி, தொடைகள் அழுந்தி, பற்கள் கடித்து, கண்கள் நெறிய மிகுந்த வேகத்தோடு ஒருவரை ஒருவர் தள்ள முயற்சித்தது பெரும் ஆவலை உண்டு  பண்ணியது.

சட்டென்று விலகி ஆச்சாமரம் போன்ற தன் கைகளால் பீமன் ஜராசந்தன் முகத்தில் அடித்தான். ஏதோ துணியால் அடித்தது போன்று அந்த அடியை வாங்கிக் கொண்டு துடைத்து ஜராசந்தனும் பீமனை பதிலுக்கு அடித்தான். இடுப்பை இறுக்கி கீழே போட்டான். கீழே போட்ட அதே க்ஷணத்தில் பீமன் அவனை மல்லாக்க கிடத்தினான். பதிலுக்கு ஜராசந்தனும் அதே வேகத்தில் பீமனை மல்லாக்க கிடத்த, படேர் படேர்  என்று மேடை அதிர அவர்கள் விழுந்து, விழுந்து எழுந்தார்கள். பொது ஜனங்கள் அப்பேர்பட்ட உக்கிரமான யுத்தத்தை பார்த்ததில்லை  என்பதால் மிகுந்த பயத்தோடு கூச்சலிட்டார்கள். வீரர்கள் பல் கடித்து ஆவேசமானார்கள். மல்லர்கள் கொல்லு கொல்லு என்று  உற்சாகமூட்டினார்கள். கிருஷ்ணரும், அர்ஜுனனும் அசையாது மல்யுத்தத்தின் வேகத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள். கடும் மழையால்  குளத்திலுள்ள மலர்களெல்லாம் சலசலக்க இரண்டு தாமரை மலர்கள் மட்டும் ஆடாது இருப்பதுபோல அந்தக் கும்பலில் அவர்கள் இரண்டு  பேரும் தனித்துத் தெரிந்தார்கள். ஒரு காரியத்தின் நோக்கமும், அதை செய்தாக வேண்டிய விதிகளும் தெள்ளத் தெளிவாக மனதில் இருந்து  விட்டால் ஒருவன் ஆவேசமடைய மாட்டான். அடுத்தது அடுத்தது என்று வேகமாக நகர்வான்.

இப்பொழுது கைகளை அடித்து, முறுக்கி, காலால் மிதித்து, கையாலும், காலாலும் தாக்கிக்கொண்டபடி சண்டை நடந்தது. இருவருக்கும் காயம்பட்டு ரத்தம் ஒழுகியது. ஜராசந்தனுக்கு அடி அதிகம். ஆனாலும், அவன் களைப்படையாது இருந்தான். அடி வாங்க அடி வாங்க உற்சாகம் கொண்டான். பதிலுக்கு கடும் வேகமாக தாக்கினான். ஆனால், அந்த வேகத்திலிருந்து பீமன் நகர்ந்து கொள்வதால் பல அடிகள் காற்றில் கலந்தன. பாய்வதில் மட்டுமல்லாமல் பதுங்குவதிலும் மல்யுத்தம் விதிமுறைகளைக் கொண்டது. அதுவும் ஒரு தந்திரமாக  கருதப்பட்டது. பீமன் அந்த தந்திரத்தில் நிகரற்றவனாக இருந்தான். தன்னைத் தாக்குகின்ற கையை விலக்கி நின்று போகவிட்டு, போகின்ற கையை அடித்து உதைத்தான். கடும் வலியை ஏற்படுத்தினான். அந்தக் கையை கவனிக்கின்ற நேரத்தில் முகத்தில் அடித்தான். பின்  மண்டையைத் தாக்கினான். இரண்டு கைகளாலும் தலையை நசுக்கினான். அக்குளில் கைகொடுத்து சுழற்றி மூலையில் போட்டான். விலா எலும்புகள் உடையும் சத்தம் கேட்டது. கூட்டம் வாய்பொத்தி அமைதியாக பிரமை பிடித்ததுபோல பார்த்துக் கொண்டிருந்தது.

இப்பொழுது சண்டை வேறுவிதமாக மாறியது. முஷ்டியாலும், காலாலும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். தன்னைவிட வயதில் இளையவனான பீமனை யுத்தத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக ஜராசந்தன் பெரும் மனதுடன் அனுமதித்தான். அவன் என்ன விதமாக யுத்தம் செய்கிறானோ அதே விதமாக தானும் யுத்தத்தை நடத்தினான். அவன் முஷ்டி பலத்தால் தாக்கினால் அதே விதமாகவும், தோளோடு தோள் தாக்கினால் அதே விதமாகவும் தூக்கி அடித்து சண்டை செய்தால் அந்த விதமாகவும் தன் யுத்த தர்மத்தை வகுத்துக்  கொண்டான். அதுவும் ஜராசந்தனுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்தது. நீ என்ன செய்தாலும் சரி என்னை ஜெயிக்க முடியாது என்ற பயத்தை எதிராளிக்குக் கொடுத்தது.

ஆனால், பீமன் அதற்கு அசருபவனாக இல்லை. யுத்தத்தின் போக்கை அவன் எடுத்துக் கொண்டாலும், எதிராளியின் பலத்தை துல்லியமாக எடை போடுபவனாகவும், கடுமையான தாக்குதலை நடத்துபவனாகவும், தாக்குதலை விட்டு நகர்ந்து தாக்குகின்ற விதத்தையே திசை திருப்புபவனாகவும் இருந்தான். ஜராசந்தனுடைய முஷ்டி முகத்துக்கு நேரே வந்தபோது விலகி, அது தன்னை தாண்டிப் போகிற கணத்தில் மிக வேகமாக அந்த இடத்தை ரத்தம் வர தாக்கினான். அதனால் அடிக்க வேண்டிய கை அடிபடாமல், அடிக்க வேண்டிய கை அடிக்காமல்  அடிபட்டது. சுழற்றி வீசிய கையை தடுத்து பொத்தென்று இழுத்து ஜராசந்தனை தரையில் விழச் செய்தான். மறுபடியும் தூக்கி அடித்தான்.  தரையில் விழுந்த ஜராசந்தனை பார்த்தவண்ணம் சட்டென்று கிருஷ்ணரை நோக்கினான். மேடையைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் இருந்த நாணல் புல்லை உருவி கிருஷ்ணர் நகத்தால் கீறி பிளந்தார்.

அந்தக் குறிப்பை கவனித்துவிட்ட பீமன் உடனே இடது காலை ஜராசந்தன் தொடைமீது வைத்து, வலது காலை திருப்பி முறுக்கி, மிகுந்த பலத்துடன் ஜராசந்தன் உடம்பை இரண்டாகப் பிய்த்துப் போட்டான். மேடை முழுவதும் ரத்தம் பொங்கி பரவியது. ஜனங்கள் வாய்விட்டு  கதறினார்கள். வீரர்கள் நிலைகுத்தி நின்றார்கள். அடித்து துவைத்தல் நடக்கும்; கிழித்தெறிதல் நடக்குமா என்று அதிசயமாய்க் கலவரப்பட்டார்கள். இத்தனை வலிவா என்று நிலைகுலைந்து பார்த்தார்கள். அதிசயப்பட்டார்கள். தூக்கி மூலைக்கு ஒன்றாக அந்த உடம்பை  பீமன் வீச, அந்த இரண்டு பகுதிகளும் வேகமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டான்! பீமன் பயந்தான். இதென்ன வித்தை என்று  கலங்கினான். தயங்கினான்.

துள்ளி எழுந்த ஜராசந்தன் பீமனை சரமாரியாக அடித்தான். பீமன் அந்த அதிசயத்தால் தன்வசமிழந்திருந்தான் என்பது தெள்ளத் தெளிவாக  வேடிக்கை பார்ப்போருக்குத் தெரிந்தது. கிருஷ்ணர் மறுபடியும் ஒரு நாணலை எடுத்து நகத்தால் கீறி இரண்டாக பிளந்தார். பீமன் பார்க்க  அதை புரட்டிப் போட்டார். பீமன் புரிந்து கொண்டான். உடனே வேகமாகத் தாக்கினான். மறுபடியும் அடித்து தரையில் சாத்தினான். இப்பொழுது தொடையில் கை வைத்து வேகமாக அடித்து இரண்டாக பிய்த்து பிய்த்தை உடம்பை தலைகீழாக மாற்றிப் போட்டான். இதனால் கால் பக்கம் தலையும், தலைப்பக்கம் காலும் இருந்த உடம்பு ஒன்று சேரமுடியாமல் தவித்தது. துவண்டது. அமைதியாயிற்று. ஜராசந்தன் இறந்து போனான்.

ஜராசந்தன் மகனுக்குப் பெயர் சகாதேவன். அவன் பயந்து அலறி கிருஷ்ணரிடம் தன் பொக்கிஷங்களை கொடுத்து அவரோடு சமாதானம் பேசினான். மனம் இறங்கிய கிருஷ்ணர், சகாதேவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். அதனால் பீமனும், அர்ஜுனனும் அவனுக்கு மரியாதை செய்தார்கள். அவர்களும் நண்பனாகப் பார்த்தார்கள். தன் தந்தையிடமிருந்த மிகச் சிறந்த தேரை சகாதேவன் ஸ்ரீகிருஷ்ணருக்கு  பரிசளித்தான். இரண்டு பேர் நின்று போர் செய்யும் விதமாக அகலமாகவும், உறுதியாகவும், விரைவாக செல்லும்படியாகவும் அது  செய்யப்பட்டிருந்தது. அந்தத் தேரை பல திக்குகளில் ஓட்டி அர்ஜுனனோடும், பீமனோடும் பயணம் செய்து ஸ்ரீகிருஷ்ணர் சந்தோஷப்பட்டார். அந்த தேரிலேயே ஏறி காண்டவப்ரஸ்தத்திற்கு திரும்பி வந்து தருமரிடம் ஜராசந்தன் இறந்தது தெரிவித்தார். மூவரும் செயற்கரிய காரியம் செய்து திரும்பியது கண்டு தருமபுத்திரர் மிகவும் மகிழ்ந்தார். என் பொருட்டு இவ்வளவு சிரமங்கள் எடுத்துக் கொண்டீர்களே என்று  ஆனந்தத்தோடு துக்கப்பட்டார்.

ஜராசந்தனிடம் சிறைபட்ட மன்னர்கள் வரிசையாக வந்து தருமபுத்திரரை வணங்கினார்கள். ‘நீங்கள் ராஜசூய யாகம் செய்ய வேண்டிய தருணம்  வந்து விட்டது. எனவே, அதற்குண்டான ஏற்பாடுகளை கவனியுங்கள்’ என்று வேண்டினார்கள். மற்ற அதிகாரிகளும் அவ்விதமே வேண்ட தருமபுத்திரர் பணிவாக மறுத்தார். ‘‘ஸ்ரீகிருஷ்ணரின் உத்தரவு இன்றி நான் ஒருபோதும் ஒரு காரியத்தையும் செய்யேன். எனவே நான்  யாகதீட்சை ஏற்றுக் கொள்வது என்பது ஸ்ரீகிருஷ்ணரின் கையில் உள்ளது. ஒருவேளை அவரே செய்ய ஆசைப்பட்டாலும் அதற்கு நான்  துணையாக நிற்பேன்’’ என்று சொன்னார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஆனந்தமாக அவரை தழுவிக் கொண்டு, ‘‘உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. எதையும் எனக்கு தத்தம் கொடுக்கின்ற உங்கள் பண்பு என்னை குதூகலமடைய வைக்கிறது. ராஜசூய யாகம் செய்ய இதுவே தருணம். நீங்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை  செய்யலாம்’’ என்று ஸ்ரீகிருஷ்ணர் உத்தரவிட, போர் செய்வதற்காக வடக்கு பக்கம் அர்ஜுனனும், கிழக்கு பக்கம் உள்ள நாடுகளில் வெற்றி  பெறுவதற்காக பீமனும், தெற்கே வெகுதூரம் வரை போவதற்காக சகாதேவனும், மேற்கே உள்ள தேசங்களை போரிட்டு வெல்வதற்காக நகுலனும் தயாரானார்கள். காண்டவப்ரஸ்தத்தில் தங்கிய தருமபுத்திரர் இந்த போர் செய்திகளை செவிமடுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

உயர்ந்த மலைச் சிகரங்களையும், தெளிவான நீர்த் தடாகங்களையும் கொண்டிருந்த பல தேசங்களை அர்ஜுனன் வென்றான். கடக்கவே முடியாத மேரு மலையின் அடிவாரம்வரை அவன் பயணம் செய்தான். மிக அழகான யுவதிகளும், வயதானவர்களும் நிறைந்திருந்த  தேசங்களில் அவனை வரவேற்றார்கள். போர் செய்யும் எண்ணமே இல்லாமல் அர்ஜுனனுக்கு கட்டுப்படுவதாக சிலர் வரிப்பணம் கொடுத்தார்கள். தருமருடைய ஆட்சியை ஏற்றுக் கொண்டார்கள். அர்ஜுனன் அம்மாதிரி இடங்களில் தங்கி, நீராடி அங்குள்ள மனிதர்களிடம்  அன்பாகப் பேசி நட்பு வளர்த்துக் கொண்டான்.

அலை பொங்கும் கடலோரம் இருக்கின்ற நகரங்களையெல்லாம் கிழக்கே பீமன் வென்றான். பீமனை எதிர்க்க வேண்டுமென்று ஆர்வத்தோடு சில மன்னர்கள் போட்டிபோட, அவன் யுத்தத்தில் இறங்கினான். யுத்தத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் அவர்கள் அலறிப், பின்வாங்க  அவன் பொறுமையோடு காத்திருந்தான். அவர்கள் ரத்தினக் குவியலோடும், தங்கப் பாளங்களோடும் வந்து அவனை வணங்கி தருமபுத்திரர்  ஆட்சியை ஏற்பதாகச் சொன்னார்கள். போர் செய்ய வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியதாகச் சொன்னார்கள். அவர்களை இறுகத்  தழுவிக் கொண்டு பீமன் அன்பு பாராட்டினான். தெற்கே சகாதேவன் கோதாவரி ஆற்றைத் தாண்டி திராவிட தேசம், பாண்டிய தேசம், ஸ்ரீலங்கா போன்ற இடங்களை நோக்கி நகர்ந்தான். பாண்டிய மன்னனோடு ஒரு நாள் முழுவதும் சண்டையிட்டு அவரிடமிருந்த அற்புதமான  முத்துகளை பெற்றுக் கொண்டான். உலகப் புகழ்பெற்ற கிஷ்கிந்தா என்ற நகரை அடைந்து அங்கு ஆட்சி செய்கின்ற நீலன் என்பவனை அடைந்து போர் செய்ய அழைத்தான்.

‘‘சகாதேவா உன்னை நான் அறிவேன். உனக்கு யார் துணை இருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும். இதுவரை நீ ஜெயித்தது போதும். இதற்கு மேல் என் இடத்திற்குள் நீ பிரவேசிக்க முடியாது. எனவே திரும்பிப் போ. என்னை நீ ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு தருமபுத்திரரோடு சண்டை இல்லை’’ என்று சொல்ல, சகாதேவன் மனம் மாறாமல் அவரை நோக்கி படையெடுக்க, அவனுடைய தேர்களும், அவன் வீரர்களின் ஆயுதங்களும், அவனுடைய வீரர்களுடைய உடைகளும் தீப்பற்றிக்கொண்டன. அக்னியினுடைய வீச்சை  தாளமுடியாமல் சகாதேவன் அவஸ்தைப்பட்டான். எதனால் இது என்று ஆச்சரியப்பட்டான்.

நீலனுடைய மகள் சுலக்க்ஷணா. பேரழகி. அக்னிதேவன் அவளைக் கண்டதும் மதிமயங்கி அவளை மணக்க விரும்பினார். ஒரு பிராமண உருவம் தாங்கி நீலனிடம் போய் தனக்குப் பெண் தரவேண்டுமென கேட்டான். சுலக்க்ஷணாவை விரும்புவதாகச் சொன்னார். நீலன் அவரை சரியானபடி விசாரிக்க, தான் அக்னி தேவன் என்பதை ஒப்புக் கொண்டார். அக்னி தேவனே தன் மகளை விரும்பியது கண்டு நீலன் சந்தோஷமடைந்தான். மகளை மணமுடித்து தருவதற்கு ஒப்புதல் தந்தான். தன்னுடைய நகரை காப்பாற்ற வேண்டும் என்ற கன்னியா
சுல்கத்தை பெற்றுக் கொண்டான். மகளை திருமணம் செய்வித்ததற்காக இந்த வரத்தை அக்னிதேவன் கொடுத்தார். அதனால்தான் அவன்  தேசத்திற்குள் யாரும் படையெடுத்து வரமுடிவதில்லை.

இந்தக் கதையை கேட்டதும் சகாதேவன் சட்டென்று தேரிலிருந்து இறங்கி, கீழே தர்ப்பையை பரப்பி அதன் மீது உட்கார்ந்து கொண்டு அக்னியை நமஸ்கரித்தான். அக்னியை குளிர்விக்கும் ஸ்தோத்திரங்கள் சொன்னான். நாங்கள் புரியும் யாகத்திற்கு நீங்கள் தடையாக  இருக்கக்கூடாது என்று அக்னியை வேண்டிக் கொண்டான். அக்னி அவன் முன் தோன்றி, ‘‘சகாதேவா நான் உன்னை சோதித்தேன். ஒரு பொழுதும் நான் இந்த யாகத்திற்கு தடையாக இருக்க மாட்டேன். நீலன் வந்து வரிப்பணம் தருவார். வாங்கிக் கொள்’’ என்று சமாதானம்  சொன்னார். பாண்டவ புத்திரர்கள் வெறும் புஜபலம் மட்டும் காட்டி மற்றவரை வசீகரிக்காமல் அன்பான ேபச்சாலும், மென்மையான நடவடிக்கையாலும், சிலசமயம் பணிவினாலும் வெற்றி பெற்றார்கள். நீலன் ஓடிவந்து வரிப்பணத்தை கொடுத்து சகாதேவனை ஸ்நேகமாக்கிக் கொண்டான். தன் இடம் தாண்டி தென்திசை போவதற்கு வழி சொன்னான்.

தென்திசை கடற்கரையோரம் சகாதேவன் முகாமிட்டு எப்படிக் கடப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, சகோதரன் மகன் கடோத்கஜனை நினைத்தார். கடோத்கஜன் மிகப் பெரிய உருவம் உடையவன். மனோவேகம், வாயுவேகமாக இடங்களை தாண்டிக் கொண்டு போக பலம்  உள்ளவன். பீமனுடைய அம்சமாக பூமியில் பிறந்தவன். சிற்றப்பன் தன்னை நினைக்கிறான் என்று தெரிந்ததும் உடனே நேரே வந்து கைகட்டி நின்று எனக்கு என்ன வேலை உத்தரவிடுங்கள் என்று பணிவாகப் பேசினான். புத்திரபாசம் பெருக்கெடுத்தோட சகாதேவன் தன் அண்ணன்  மகனை வாரி எடுத்து நெற்றியில் முத்தமிட்டார். கடல் கடந்து விபீஷணனிடம் போய் தருமபுத்திரரின் காரியத்தைச் சொல்லி, அவருக்கு  அடங்கியதாக வரிப்பணம் வாங்கி வா என்று சகாதேவன் உத்தரவிட, அப்படியே கடல் கடந்து அவன் இலங்கைக்கு போய் இறங்கி அங்குள்ள கோட்டை கொத்தளங்களுக்குள் நுழைந்து தன் வருகையை தெரிவித்தான்.

விபீஷணன் உடனே அவனை சந்தித்து, தருமருடைய காரியம் அறிவேன். நீங்களெல்லாம் யார் என்றும் தெரியும். எந்த அவதாரத்தின் கீழ் நிற்கிறீர்கள் என்பதையும் அறிவேன். இதோ என்னுடைய வரிப்பணம். தருமருடைய காரியம் தங்கு தடையின்றி நிறைவேறும் என்று சொல் என்று ஆசிர்வதித்தான். பலம் காட்டி போரிட்ட மன்னரும், பணிவாக நின்ற மன்னரும் தாண்டி விபீஷணைப் போல எங்கே, என்ன, எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் நடந்த மன்னர்களும் பரத காண்டத்தில் உண்டு. மேற்கே போன நகுலன் அங்குள்ள சகல தேசங்களையும் வென்று பாலைவனப் பகுதிகளில் உள்ள மன்னர்களிடம் வரிப்பணம் பெற்று தருமரிடம் சமர்ப்பித்தான். சகல தேசங்களிலும் உள்ள மன்னர்களை ஜெயித்தாகி விட்டது என்று தெரிந்து தருமபுத்திரர் ராஜசூய யாகத்திற்குத் தயாரானார்.

வேள்வி செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வரவழைக்கப்பட்டனர். மன்னர்கள் ஒன்று சூழ்ந்தனர். யாரும் கட்டளையிடாமலே அவரவர் ஒவ்வொரு வேலையை எடுத்துக் கொண்டார்கள். துரோணர், துருபதர், பீஷ்மர் உட்பட துரியோதனனும் அவனுடைய மகன்களும்,  மகாரதியான கர்ணனும் வந்து சேர்ந்தார்கள். துரியோதனன் மன்னர்கள் பரிசுகளை வாங்கி அந்த பொக்கிஷங்களை சேர்க்கும் வேலையை மேற்கொண்டார். அந்தணர்களை உபசரிப்பது, மன்னர்களை வரவேற்பது, நல்ல தின்பண்டங்கள் செய்வது, சகலருக்கும் உணவளிப்பது என்று பொறுப்புகளை எடுத்துக் கொண்டார்கள். பெரும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. தங்குவதற்காக தனித்தனி வீடுகள் எழுப்பப்பட்டன. பாண்டவ ப்ரஸ்தமே ராஜசூய யாகத்தை செய்வதற்கு முழு முனைப்போடு இறங்கியது.

ஆறுவிதமான அக்னிகள் வளர்த்து அவற்றின் மூலம் தேவர்களை தருமபுத்திரர் திருப்தி செய்தார். அந்தணர்களுக்கு பொன்னும், பொருளும் தானம் அளித்து, வந்தவர்களுக்கு பரிசுகள் அளித்து எல்ேலாரையும் கௌரவப்படுத்தினார். நாலாபக்கத்திலிருந்தும் செல்வம் திரட்டிக் கொண்டு  வந்து ஒரு இடத்தில் வைத்து, அதை மறுபடியும் நாலாபக்கமும் பரிமாறுகின்ற ஒரு முக்கியமான காரியமாக அந்த ராஜசூய யாகம் இருந்தது. தென்திசை முடித்து வடதிசை போயிற்று. வடதிசை ரத்தினங்கள் மேற்குதிசை போயின. மேற்குதிசை தங்கங்கள் கிழக்குதிசை வந்தன.  கிழக்குதிசை தந்தங்களும், மரக்கட்டில்களும் சகல பக்கமும் பரவின. அவரவர்க்கு கிடைத்த பரிசை விருப்பத்தோடும், வியப்போடும், மன்னர்களும், மற்றவர்களும் சோதித்துக் கொண்டிருந்தார்கள். திருப்தியடையாதவர் யாரும் இல்லை என்ற நிலை உண்டாயிற்று. எல்லோர்  மனதிலும் சந்தோஷம் இருந்தது. எல்லோர் மனதிலும் நிம்மதி இருந்தது. எல்லோரிடமும் போதும் என்ற நிறைவு இருந்தது. எல்லோரிடமும்  அமைதி இருந்தது.

ஸ்ரீகிருஷ்ணர், வந்திருந்த பிராமணர்களின் காலை கழுவி அந்த ஜலத்தை தன் தலையில் தெளித்துக் கொள்ளும் காரியத்தை சிறிதும் பிழறாது செய்து கொண்டிருந்தார். எல்லாம் வல்ல அவரே அவ்விதம் செய்தது கண்டு மற்றவர்களும் ஒருவருக்கொருவர் பணிவாகவும், பிரியமாகவும்  நடந்து கொண்டார்கள். பேசிக் கொண்டார்கள். ஜராசந்தன் வதத்திற்குப் பிறகு மிகப் பெரிய அமைதியை காண்டவப் பிரதேசமும், பரதகண்டத்தின் வடக்குப் பகுதியும் அனுபவித்தன. புயலுக்குப் பின் அமைதி என்பது உண்மையாயின் இந்த அமைதிக்குப் பிறகு புயலும்  வரும் என்பதுதானே உலக வழக்கம்? வட்டம்தானே உலக வாழ்க்கை! தருமபுத்திரரின் யாகம் ஜனங்கள் மத்தியில் அமைதியை, நிம்மதியை, திருப்தியை கொடுத்தது. அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு ஏதுவாக மக்கள் அந்த அமைதியை, சந்தோஷத்தை அனுபவித்தார்கள். நெடுநாள் சந்தோஷமாக இருக்க யாரால் முடியும்? மனிதர்களுக்கு அது இயலாத விஷயம்? மகாபாரதத்தில் ஆதிபர்வம் இத்துடன் நிறைவுபெறுகிறது.

ஒரு காரியத்தின் நோக்கமும், அதை செய்தாக வேண்டிய விதிகளும் தெள்ளத் தெளிவாக மனதில் இருந்து விட்டால் ஒருவன் ஆவேசமடைய மாட்டான். அடுத்தது அடுத்தது என்று வேகமாக நகர்வான்.

(தொடரும்)