அருட் சக்தியாக மாறிய அமிர்தத் துளி



அமுதக் கும்பம் பெருகியோடிய குடமூக்கு எனும் குடந்தையினின்று எழுந்த அமுத வாசம் வானவர்களை வா என அழைத்தது. வானவர்கள் விண்ணில் மிதந்து வந்து பூவுலகம் தங்கினர். கும்ப நகரம் கண்டு கைகூப்பினர். பௌண்டரீக யாகம் வளர்க்கலாம் எனக் கூடி அமர்ந்தனர்.  யாகம் செய்து செய்து சிவந்த மண்ணில் தேவர்கள் செந்தீ வளர்த்தனர். ஈசனும் தணலின் மத்தியில் தண்மையாக ஒளிர்ந்தான். யாகத்தினின்று அமுதத்திற்கு இணையாகப் பொங்கிப் பொறிபோன்ற அமுதத் திவலைகள் தெறித்தன. அந்த அமுத சக்தியின் திரட்சி, திருக்குடந்தைக்கு அருகிலுள்ள ஐந்து தலங்களில் சக்திக் கோளமாக சுழன்று, ஒளியாக பிரகாசித்தது.

ஐந்தில் ஒரு அமுதத் துளி அடர்ந்திருந்த பாடலவனம் எனும் பாதிரி மரங்கள் நிறைந்த கானகத்தினுள் புகுந்து, அங்கேயே தங்கியது. லிங்க ரூபமாகப் பொங்கியது. பாதிரி வனத்தில் அம்மையும் ஐயனோடு எழுந்தருளினாள். அன்று திருப்பாதிரியில் பாதிரி விருட்சத்தின் அடியில்  தவம் செய்தவள் இன்று பாடல வன மத்தியில் ஐயனுக்கு இணையாக நின்றாள். அவனும் அருளும் அழகும் ஒன்றிசைந்த கோலம் காட்டினான். அழகம்மையான அபிராமியும் உடன் அமர்ந்து ஆற்றுப்படுத்தினாள். கும்பகோணத்தை சுற்றியுள்ள பஞ்சகுரோசத் தலங்களில் திருப்பாடலவனம் எனும் கருப்பூரும் ஒன்றாகும். (மற்றவை: திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், தாராசுரம், சுவாமிமலை). பிரம்மன்,  ஈசன்முன் அமர்ந்து ஞான உபதேசம் பெற்றான். இந்திரன், குபேரன், அகத்தியர் என்று பலரும் வணங்கினர். கும்பகோண மகாமக குளத்தில் நீராடுமுன் இந்த பஞ்சகோசத் தலங்களை தரிசித்துச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். நால்வரில் ஒருவரும் சமயக் குரவருமான சுந்தரர் சுந்தரேஸ்வரரை தரிசித்தார். ‘‘கச்சியின் இன்கருப்பூர் விருப்பன் கருதிக்கசிவார்...’’ என்று தொடங்கி ‘‘நச்சிய நன்னிலத்து பெருங்கோயில்  நயந்தவனே’’ என்று துதிக்கிறார். சோழர் காலத்தில் 1186-1216 ஆண்டுகளுக்குள் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
  

தொகுப்பு: கிருஷ்ணா
படங்கள்: குடந்தை ஆறுமுகம்