மகத்துவம் மிக்க மகாமக தானங்கள்



வித்துவான் வே. மகாதேவன்

மக தீர்த்தத்தில் எப்படிக் குளிப்பது என்பதற்கான விதிகள் இருப்பது போலவே தானங்கள் செய்வது தொடர்பாகவும் பல நியதிகள் உள்ளன. மகாமகம், மாசிமகம் அல்லது பிற நாட்களாக இருந்தாலும், மக தீர்த்தமாடுவோர் செய்ய வேண்டிய தானங்கள் பல உண்டு.

மகாமக நாளன்று தஞ்சை நாயக்க அரசர்கள் ‘துவாபாரதானம்’ முதலான பதினாறு தானங்களைச் செய்தார்கள் என்பது வரலாற்றேடுகளில் காணப்படுகிறது.மக நீராடிய பின்னர் தீர்த்தக் குளக்கரையின் வடகரையில் உள்ள அரச மரத்தடியில் தானங்களைச் செய்தல் வேண்டும்.

இருபது தானங்கள்: மகாமக தீர்த்தத்தில் நீராடிய பின்னர் தத்தமது சக்திக்கேற்ப இருபது தானங்களைச் செய்ய வேண்டுமென மகாமக ஸ்நானதான விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.

‘‘சிவபெருமான் மீது ஆழமான பக்தி கொண்ட அந்தணர்களை அழைத்து அவர்களை மணைப்பலகையில் அமர்த்த வேண்டும். அர்க்யம் தரவேண்டும். சந்தனம் தரவேண்டும்; மலர்கள் இடவேண்டும்; பின்னர் அவர்களுக்கு 20 தானங்கள் தரவேண்டும்’’ என்கிறது குடந்தைப்  புராணம்.

1. பூமிதானம்
2. கன்னிகாதானம் (இதற்காகப் பொருளைத் தானம் செய்வது)
3. சொர்ண (பொன்) தானம்
4. யக்ஞோபவீத (பூணூல்) தானம்
5. கோதானம்
6. அசுவ தானம் (குதிரை)
7. விருஷப தானம் (காளை மாடு)
8. அன்னதானம்
9. பாயச தானம்
10. தான்ய தானம்
11. கல்பக விருட்ச தானம் (தென்னை)
12. குப்த தானம் (பூசணிக்காய், பலாப்பழம், இளநீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் ஒரு ரூபாய் அகலத்திற்குத் துளையிட்டு அதற்குள் ரத்தினம், சொர்ணம், வைரம், வைடூரியம், வெள்ளி, முத்து முதலியனவற்றைப் போட்டுத் தோலினால் மூடி தட்சிணையுடன் கொடுப்பது குப்த தானம்)
13. சந்தன தானம்
14. நல்முத்து தானம்
15. நவரத்தின தானம்
16. தேன் தானம்
17. உப்பு தானம்
18. எள் தானம்
19. மாதுளம்பழம் தானம்
20. சோடச பல தானம் (பதினாறு விதமான பழங்களை வைத்துப் 16 பேருக்குத் தானம் செய்வது)

- என்று வடமொழியில் உள்ள புராண நூல்கள் இருபது தானங்களைப் பட்டியலிடுகின்றன. திருக்குடந்தைப் புராணத்தில் இந்தத் தானங்களின் பெயர்கள் மற்றும் விவரங்களில் மாறுபாடு உண்டு. குடந்தைப் புராணத்தில் உள்ள விவரம் வருமாறு:

‘‘பசுதானம், கன்யாதானம், சுவர்ணதானம், கவிகை (குடை) தானம், வஸ்த்ர (ஆடை) தானம், உபவீதம் (பூணூல்) தானம், அன்னதானம், பாயச தானம், கற்பகத்தரு தானம், தான்ய தானம், விபூதி தானம், கந்த தானம், நவமணி தானம், தேன் தானம், பழவகை தானம், தாம்பூல  தானம் ஆகியவற்றை மறைவிடத்தில் செய்ய வேண்டும்’’ என்று திருக்குடந்தைப் புராணத்தில் நானதான விதிப்படலத்தில் இருக்கும்  பாடல்கள் சொல்கின்றன. (எண் 3-4).

க்ருச்ரதானம்: மகா தீர்த்தத்தில் உள்ள தீர்த்தங்களுக்குத் தனித்தனியாகச் சங்கல்பம் செய்துகொண்டு ‘க்ருச்ரதானம்’ அளிப்பார்கள். ‘க்ருச்ரம்’  என்பது பசுவின் விலை, அதனை வேத வேதியருக்கு அளிப்பது க்ருச்ரதானம் என்று சொல்லப்படும். சிலர் பசுவினைத் தானம் செய்வதும்  உண்டு. அந்நிலையில் அது கோதானம் ஆகிவிடும். நன்மக்கட் பெற: திருமணமாகிப் பல ஆண்டுகளான பின்னும் பிள்ளைப் பேறு இல்லாமல் கவலைப்படுபவர்கள் உண்டு. அவர்கள் மக தீர்த்தமாடிச் சில தானங்களைச் செய்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும் என்று  புராணங்கள் சொல்கின்றன.

தென்னைமரம் (அதாவது தென்னம்பிள்ளை) ஒன்றினை தானமாகத் தருதல்; பதினோரு எள் உருண்டைகளைத் தானமாகத் தருதல்; 50 பலம்  எடையுள்ள வெண்ணெய்க்குள் நவரத்தினங்களை வைத்து லிங்கமாகச் செய்து தானமாகத் தருதல் என்ற இவை மூன்றையும் செய்வது விசேஷம். சக்திக்கேற்ப ஏதேனும் ஒன்றும் செய்யலாம்.இந்தத் தானங்களைப் பற்றிப் புராண நூல்களில் பின்வரும் நிகழ்ச்சி விவரித்துச்  சொல்லப்பட்டுள்ளது.

கலிங்க நாட்டினை வீரசர்மன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் ‘சுமதி’ என்பவளை மணந்து இனிமையாக வாழ்ந்து வந்தான். சுமதி கருவுற்றாள். பிள்ளைப்பேறு, மகிழ்ச்சிக்குப் பதிலாகத் துயரத்தைத் தந்தது. அவளுக்கு விழி இல்லா மகன் பிறந்தான். தம்பதியர் துயரக்  கடலில் மிதந்தனர். ‘சாண்டில்யன்’ என்னும் முனிவரை அடைந்து தங்கள் துன்பத்துக்குக் காரணம் கேட்டனர்.‘‘சுவாமி! எங்களுக்கு நன்மகன்  பிறக்கவில்லையே. அதற்குக் காரணம் என்ன?’’ என்று வினவினர். அப்போது முனிவர், ‘‘அரசே! முற்பிறவியில் நீ மன்னனாக இருந்தாய்.  அப்போது நீ உன் அரண்மனை மாடமாளிகைகளை விரிவுபடுத்தினாய். அந்நிலையில் அரச மரத்தடியில் இருந்த நாகங்கள் பலவற்றைப் பறித்தெறிந்தாய். அந்தத் தோஷம் காரணமாக நீ அங்கஹீனமான மகனைப் பெற்றாய். கும்பகோணத்துக்குச் சென்று மகாமக தீர்த்தத்தில் முறைப்படி நீராடிக் கும்பேஸ்ரரை வணங்கி அந்தணன் ஒருவனுக்குக் கற்பக (தென்னை) விருட்சதானம் தரவேண்டும். பதினோரு எள் உருண்டைகளைத் தட்சணையோடு தரவேண்டும். 50 பலம் எடையுள்ள வெண்ணெயை லிங்கமாகச் செய்து நவமணி மற்றும் பொன்னுடன்  தானமாகத் தரவேண்டும். இத்தானங்களைச் செய்தால் உனக்கு நன்மகன் பிறப்பான்’’ என்று சொன்னார்.

மாமுனிவர் அறிவுரைப்படி வீரசர்மன் கும்பகோணம் சென்றான். முறைப்படி நீராடி தானங்கள் செய்தான். நன்மகன் பிறக்கப் பெற்றான். அவன் வளர்ந்தபின் அவனுக்கு முடி சூட்டினான். அதன்பின் கும்பகோணம் வந்து தங்கி நாள்தோறும் முறைப்படி மக தீர்த்த நீராடிய அவன் இறைவனடி சேர்ந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.இப்படி இந்த மூன்று தானங்களை முறைப்படிச் செய்தால் நன்மக்கட்பேறு உண்டு  என்பது புராணம் கூறும் செய்தி.

விருஷப தானம்:  மகாமகக் குளத்தில் நீராடி விருஷப தானம் செய்தால் பெரும்புண்ணியம் கிட்டும் என்று புராணங்களில்  சொல்லப்பட்டிருக்கிறது. விருஷபம் என்பது காளை மாடாகும். காளை மாட்டினைத் தானமாகத் தரலாம். பொன் அல்லது வெள்ளியாலான காளை மாட்டின் உருவத்தைத் தட்சணையுடன் தரலாம். மாட்டின் விலைக்கேற்பப் பொருளாகவும் தரலாம். இந்தத் தானத்தைச் செய்தால் கயாவில் கோடி முறை சிராத்தம் (திவசம்) செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

விசேஷ தானங்கள் சில: விசேஷ தானங்கள் சிலவற்றைக் கும்பகோணத்தில் செய்வதைப்பற்றிய குறிப்புகள் கும்பகோண க்ஷேத்ர மகாத்மியத்தில் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு.

1. ஒரு தட்டில் கோதுமையைப் பரப்பிக்கொள்ள வேண்டும். அதன்மேல் பலவிதமான பழ வகைகளை வைக்க வேண்டும். அதனை ஒரு புதுத் துணியால் மூடி அந்தணருக்கு தானமாகத் தரவேண்டும். இருபது தானங்களில் இது ‘பலதானம்.’ இதைத் தனித்தனியாகவும் செய்யலாம்.

2. குதிரை, யானை, எருமைப் போத்து (கன்று) பிடரியில் சாயாததும் கொம்புள்ளதும் மயிர் செறிந்ததுமான வெள்ளாட்டுக் கிடாய் இவற்றைத் தானமாகத் தருதல் வேண்டும். இந்தத் தானம் ‘அவமிருத தானம்’ எனப்படும்.

3. இருமுக சுரபி தானம் - அதாவது, இரண்டு முகங்கள் உள்ள பசுவைத் தானமாகக் கொடுத்தல். அப்பொழுதுதான் கன்று போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பசுவைத் தானமாகக் கொடுப்பது இருமுக சுரபி தானமாகும். இந்தத் தானத்தை ‘ஹேமாத்ரி’ என்ற நூல்  ‘உபயகோமுக தானம்’ என்று சொல்கிறது. தானம் தரும்போது பசுவை ஒரு கையால் தொட்டுக்கொண்டு ஒரு மந்திரத்தைச் சொல்லவேண்டும். நான்கு தலைமுறைகளை நரகத்திலிருந்து ஈடேற்றும் சக்தி - நினைத்ததையெல்லாம் நடத்திவைக்கும் ஆற்றல் இந்தத் தானத்துக்கு உண்டு. மிகப்  பல பாக்கியங்களை ஒருசேரக் கொடுக்கக்கூடிய தானம் இது என்பது மேற்படி நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமாகும். இந்தத்  தானத்தை வாங்கியவர்கள் மிகப்பல பிராயச்சித்தங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் ஹேமாத்ரி என்ற நூலில்  சொல்லப்பட்டிருக்கிறது.

4. கால மகா புருஷ தானம்: கால ம்ருத்யு திருப்திக்காக அதாவது, எமபயம் இல்லாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் மிகவும் சக்தி வாய்ந்த தானமிது. புருஷனின் உருவம்போலக் கம்பளியில் தைத்துக் கொள்ள வேண்டும். அதனுள் எள்ளும், பொன்னும் கலந்து அடைக்க வேண்டும்.  அந்த உருவத்துக்குக் கண் முதலானவற்றைப் பொன்னால் செய்ய வேண்டும். இந்தப் புருஷ ஆஹ்ருதிப் பொம்மையில் அதாவது, மனித உருவம்போல இருக்கக்கூடிய இந்தப் பொம்மையில் சுமார் 5 பவுன் போட வேண்டும். அதன் இடது கையில் விளக்கும், வலதுகையில்  கட்டங்கம் என்னும் ஆயுதமும் தரவேண்டும். ரத்தம்போலச் சிவந்த நிற ஆடை ஒன்றை அந்தப் பொம்மைக்கு அணிவிக்க வேண்டும். இந்த உருவத்தைப் பசும்பொன்னுடன் பிராமணருக்குத் தானமாகத் தரவேண்டும். தானம் தந்தபின் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும் என்பது ஒரு முக்கியமான நியதி.

இந்தத் தானம் பற்றி கும்பகோணம் புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘கிருதவீரியன்’ என்பவன் கேகய நாட்டை ஆண்டு வந்தான். இவன் மனைவி சேதி நாட்டு அரசியான ‘சோபனாங்கி’ என்பவள். இவர்களுக்கு மிகப்பல ஆண்டு களாகப் புத்திர பாக்கியம்  இல்லை. அந்த நிலையில் அவர்கள் அரண்மனைக்கு ‘சாகல்யன்’ என்னும் முனிவர் வந்தார். முனிவரை வரவேற்று அவருக்குப் பாத பூஜைகளைச் செய்தான் மன்னன். முனிவரிடம் ‘‘சுவாமி! எனக்கு மக்கட்பேறு இல்லை. நான் என்ன தவறு செய்தேன்? சென்ற ஜன்மத்தில்  சிவபெருமானை முறைப்படிப் பூஜிக்கவில்லையா? சிவனடியார்களுக்குத் தொந்தரவு தந்தேனா? முனிவர்களை எள்ளி நகையாடினேனா? பாம்புப் புற்றுகளை இடித்தேனா? மறைகளை நிந்தித்தேனா? என்ன பாவம் செய்தேன்?’’ என்று கேட்டான்.

அதற்கு முனிவர், ‘‘மன்னனே! சென்ற பிறவியில் நீ மனைவியோடு வாழும்போது தயவு தாட்சாண்யம் சிறிதும் இல்லாமல் இருந்தாய். ஒருநாள் ஒரு பூனை நெய்க் கலயத்தில் வாய் வைத்தது. அப்போது உன் மனைவி ஒரு தண்டு எடுத்துத் தந்தாள். நீ அந்தக் கோலினை  வாங்கிப் பூனையை நையப் புடைத்தாய். பூனை இறந்தது. பிறகு ஒருநாளில் நீ சிவன் கோயில் ஒன்றில் ஒரு கிணற்றினை வெட்டினாய்.  பாவம் செய்திருந்தாலும் கோயிலில் கிணறு வெட்டிய புண்ணியத்தால் இந்த ஜன்மத்தில் அரசனானாய். பூனையைக் கொன்றதால் பிள்ளைப்  பேற்றை இழந்தாய். இந்தப் பாதகத்திலிருந்து நீங்குவதற்கு மகாமக தீர்த்தத்தில் மூழ்கிக் கால மகாபுருஷ தானம் முதலான தானங்களைச் செய்தால் மக்கட்பேறு கிட்டும்’’ என்றார். மன்னனும் அவ்வாறே செய்து மக்கட்பேறு பெற்றான் என்கிறது கும்பகோண மகாத்மியம்.

மன்னன் பொன்னால் மார்ஜாலம் (பூனை)போல்செய்து கண்ணும் கழுத்தும் கோமேதகம் பதித்து முகத்தை வெள்ளி கொண்டு செய்து புள்ளிகளை நீலமணிகளால் செய்து உடல் உறுப்புகளில் பன்மணிகளும், வைரமும் பதித்து நாசியைப் பத்மராகத்தாலும், காதினை  மரகதங்களாலும் ஆக்கிப் புஷ்பராகத்தால் முதுகும், பன்மணிகளால் வயிறும், முப்பத்தைந்து அங்குலம் நீளம் உடையதாகச் செய்தான். அப்பூனையின் கழுத்தில் ஏழு சதங்கைகள் ஒலிக்குமாறு பொருத்தினான். பொற்கயிற்றினை ஏழு ஜாணில் செய்து பூனையை ஒரு பொன்  தட்டில் வைத்தான். சிவபெருமானை வணங்கிக் காலமகா புருஷனாக அந்தப் பூனையின் உருவத்தைக் கருதிப் பதினாறு உபசாரங்களைச்  செய்தான். ‘ஞானம் ஆதரித்த காலாய நன்மனு மூலமாக ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களைக் கூறி அர்ச்சித்தான். வேதம் வல்ல அந்தணருக்கு  நீல ஆடைகளும், அணிகலன்களும் அளித்துக் குங்குமம் இட்டு அந்தத் தட்டினைத் தந்தான் என்று திருக்குடந்தைப் புராணத்தில் இந்தத் தான  விவரம் சொல்லப்பட்டுள்ளது.

- Mahamahamahimai.org இணையதளத்திலிருந்து...