கண் அளித்த கடவுளுக்கு நன்றி!



திருமூலர் மந்திர ரகசியம்

யாராவது ஒருவா் நன்றாக, நல்ல செல்வ வளத்தோடு இருந்தால், நாமும் அதேபோல் இருக்க விரும்புகிறோம்; அவரிடம்போய், அவா் எப்படி அந்நிலையை அடைந்தார் என்பதை அறிந்துகொண்டு, நாமும் அந்த வழியிலேயே செயல்படுகிறோம். அட, இதைக்கூட விடுங்கள்! அலுவலகத்திலேயே, “என்னய்யா இது? வீட்டை விட்டுக் கிளம்பினால், முக்கா மணிநேரத்துல வா்ற ஆபீசுக்கு, மூணுமணி நேரம் ஆயிடுச்சு!”  என்று புலம்பும்போது, நண்பா் சொல்கிறார்:

“நீ இந்த ரூட்டை பிக்கப் பண்ணு. டிராபிக் இருக்காது. சிக்னல் அதிகமா இருக்காது. ரோடும் பிரமாதமா இருக்கும்.அதுலதான் நான் வரேன்,  நேரத்துக்கு வரேன்.” உடனே அவா் சொல்வதைச் செய்துபார்க்கத் தீா்மானிக்கிறோம். சற்றுநேரப் பயணத்திற்கே இப்படி அடுத்தவா் சொல்வதை, நம் வாழ்விலும் கடைபிடிக்கத் தீா்மானிக்கும் நாம், வாழ்க்கைப் பயணத்தில் மிகுந்த அனுபவசாலியான மகான்கள் சொல்வதை  ஏன் ஏற்கக்கூடாது?

திருமூலா் நல்வழி காட்டுகிறார்:

ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன்
காயன நந்தியைக்காண என் கண் பெற்றேன்
சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேன் அன்றே
(திருமந்திரம்-2610)

இப்பாடலில் இறைவனைத் தாய் போன்றவன் என்று சொல்லி, நம் தலை-வாய்-கண் -சிந்தை ஆகியவற்றைச் சொல்லி, இறைவனின் அருமை பெருமைகளையும் சொல்லியிருக்கிறார்
திருமூலா்.

‘தாயைப் போன்ற இறைவனை வணங்கிச் சுமக்க, இறைவன் திருவருளால் தலைபெற்றேன்’ என்பது பாடலின் தொடக்கம். துவங்கும்போதே, இறைவனை தாய் போன்றவன் என்று கூறியிருப்பது ஆழ்ந்த கருத்து உடையது.எந்தவொரு தாயும் தன் பிள்ளை கெட்டுப் போகவேண்டும்  என நினைக்கமாட்டாள். உலகமே தூற்றும் கொலைகாரனாக இருந்தாலும், அவனைப் பெற்ற தாய், “எம்புள்ள நல்ல வந்தாங்க! சேருவார் கூடச்சேர்ந்து இப்பிடி ஆயிட்டான். என்னவோ... இத்துனூண்டு ஒரு பொருளத் தூக்கிப் போட்டான். அது வெடிச்சிருச்சு. வெடிக்கும்னு இவன்  கண்டானா என்ன?” என்று தன் பிள்ளைக்காக வக்காலத்து வாங்குவாளே தவிர, தன் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டாள். எப்படியாவது,  யார் காலிலாவது விழுந்து தன் பிள்ளையைக் காப்பாற்ற முனைவாள்.

ஒரு பிறவிக்குத் தாயாக இருப்பவளே இவ்வளவு அன்போடு இருக்கும்போது, எல்லா ஜீவ ராசிகளுக்கும் தாயாக இருக்கும் இறைவன் எவ்வளவு அன்போடு இருப்பார்! இதன் காரணமாகவே, ‘தாயை ஒத்த இறைவன்’ என்கிறார் திருமூலா். திருமூலா் மட்டுமல்ல, ‘மாத்ரு தேவோ பவ’ எனக்கூறும் வேதம் தொடங்கி, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ எனும் ஔவையார்வரை அனைவரும் தாயைச் சொல்லித்தான் பாடம் நடத்துகிறார்கள்.

அது போதாதென்று, உலகையும் அதில் கொட்டிக் கிடக்கும் செல்வங்களையும் துச்சம் என மதித்து ஒதுக்கித் துறவியா் திலகங்களாகத் திகழ்ந்தவார்கள் கூட, தாயாரை மதித்து அவருக்குத் தகனக்கிரியை செய்வித்த செயல்களையும் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். உதாரணம், பட்டினத்தார் தன் தாயாருக்குத் தகனக்கிரியை செய்தபோது பாடிய பாடல்கள்; ஆதிசங்கரா் தன் தாயாருக்குத் தகனக்கிரியை செய்தபோது பாடிய பாடல்கள் முதலானவை இன்றும் நம்மைக் கனிவித்து தாயாரின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. இதுவும் போதாதென்று,  சிவபெருமான் தாயாராக வந்து, செட்டிப்பெண் ரத்னாவதிக்குப் பிரசவம் பார்த்தார்; அதன் காரணமாகவே (திருச்சியில்) தாயுமானவா் எனப் பெயா் பெற்றார் என்றும் பதிவு செய்து வைத்தார்கள். தாயின் பெருமை அந்த அளவிற்கு மிகமிக உயா்ந்தது. அதன் காரணமாகவே தாய் போன்ற இறைவன் எனச் சொல்லிப் பாடலைத் துவக்குகிறார் திருமூலா்.

அப்படிப்பட்ட இறைவன் திருவடிகளை வணங்குவதற்காகவே தலையைப் பெற்றேன் எனப் பாடலைத் துவக்கினாலும், மற்ற மூன்று அடிகளில், அதை இன்னும் விரிவுபடுத்துகிறார் திருமூலா்.தலையைச்சொன்ன பாடல், வாயைச் சொல்லி, கண்ணைச் சொல்லி, சிந்தையில்  போய் நிறைவு பெறுகிறது. வாய் போன்றவராம் இறைவன்! சுவையுணா்வு கொண்டது வாய்; சுவை உணவையும் கொண்டது வாய். இங்கே இது நன்றாக இருக்கும், அங்கே அது நன்றாக இருக்கும் என்று தேடித்தேடி, நல்ல உணவுகளாக ஏற்கிறோம் அல்லவா, அதுபோல,  இறைவனும் நம்மிடம் உள்ள நற்குணங்களையும் நற்செயல்களையும் தேடித்தேடிப் பார்த்துப் பார்த்து நம்மை ஏற்று நமக்கு அருள்புரிகிறார். அப்படிப்பட்ட இறைவனை வாழ்த்துவதற்காகவே எனக்கு வாய் கிடைத்தது என, வாயின் தொழிலைக் கூறுகிறார் திருமூலா்.

வாழ்த்துவதற்காகத்தான் வாயே தவிர, யாரையும் எந்தவொரு ஜீவனையும் இழிவுபடுத்திப் பேசுவதற்காக அல்ல. இதை சிவபெருமானாலேயே ‘நாவுக்கரசு’ எனப் பெயா் சூட்டப்பெற்ற திருநாவுக்கரசரும் ‘வாழ்த்த வாயும்’ எனத் தெளிவாகக் கூறுகிறார். அழுத்தமாகச் சொல்ல வேண்டுமானால், ‘இனிமையான உணவைத் தேடி உண்ணும் வாய் இனிமையாகப் பேச வேண்டாமா?’ என்பதுதான் கருத்து. தலையைச்  சொல்லி உடனே வாயைச் சொன்னதில் வேறொரு பொருளும் உண்டு. எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று சொன்னாலும், ஒரு  சாண் வயிறு காலியாக இருந்தால், தலை மட்டுமல்ல, உடம்பு முழுவதுமே செயலற்றுப் போய்விடும். அதன் காரணமாகவே, தலையைச் சொன்ன திருமூலா் உடனேயே, உணவை ஏற்கும் வாயைக் கூறினார். எவ்வளவோ போ் ஒருவேளை உணவுகூட இல்லாமல்  துயரப்படும்போது, எனக்கு அப்படிப்பட்ட துா்பாக்கியமான நிலையைத் தராமல் உணவளித்தாயே என இறைவனை வாழ்த்துவதற்காகவே வாய்.

வாயைச் சொன்னவா் தொடா்ந்து, கண்ணைச் சொல்கிறார். கண்களின் பெருமையை அளவிட முடியுமா என்ன? அதனால்தானே, ‘ஸா்வேந்த்திரியானாம் நயனம் ப்ரதானம்’ - இந்திரியங்களில் மிகவும் முக்கியமானது கண் என்பது கருத்து. மிகுந்த அன்போடு குழந்தைகளைக்  கொஞ்சும்போதுகூட, ‘கண்ணே’ என்றுதானே கொஞ்சுகிறோம்! அது மட்டுமல்ல! ‘காயன நந்தியைக்காண என் கண் பெற்றேன்’ என்பது, கண்களால் பார்ப்பனவற்றைத் தெய்வமயமாகவே பார்ப்பதற்காகக் கண் பெற்றேன் எனும் பொருளைத் தரும். அதாவது, கண்களால் பார்க்கும் அனைத்தையும் கடவுள்மயமாகவே பார்ப்பது மிகவும் உயா்ந்த நிலை. அப்படிப்பட்ட எண்ணம், பாவனை வந்துவிட்டால், சண்டையாவது சச்சரவாவது? எதுவும் இருக்காது.மேலும் இதை லௌகிகமாகப் பார்த்தால்கூட, எவ்வளவோ அழகழகான காட்சிகளையும் பொருட்களையும் படைத்த இறைவன், அவற்றையெல்லாம் கண்டு களிக்கக் கண்களையும் நமக்கு அளித்தாரல்லவா? அதற்காக  அந்த இறைவனுக்கு நாம் நன்றி  சொல்லவேண்டாமா? இவ்வாறு கண்கள் பெற்ற பயனைச் சொன்ன திருமூலா் தொடா்ந்து, ‘சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேன்’  எனக்கூறிப் பாடலை நிறைவு செய்கிறார்.

தங்கக் குடத்திற்குச் சந்தனப் பொட்டு வைப்பதைப் போன்றது இது. கண்களைச் சொல்லி உடனே சிந்தையைச் சொல்லக் காரணம், காண்பனவற்றையெல்லாம் கடவுள் மயமாகவே பார்த்தாலும், சிந்தனை அதைக் குழப்பி விடுகிறது. குழப்பும் அச்சிந்தையை அதன்  காரணமாகவே, இறைவனிடம் செலுத்தச் சொல்கிறார் திருமூலா்.சிந்தையை இறைவனிடம் சமா்ப்பித்து விட்டால், துயரங்களும் தொல்லைகளும் பாதிக்குமா?

திருமூலரின் இந்தஅமைப்புமுறை அற்புதமாக அமைந்ததைப்போலவே,வாழ்த்த வாயும் நினைக்கமடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மாமலா் தூவித்துதி
- என்கிறார் அப்பா் சுவாமிகள்.

கண் உண்டு காண, கருத்துஉண்டு நோக்க, கசிந்து உருகிப்
பண் உண்டு பாட, செவி உண்டு கேட்க, பல் பச்சிலையால்
எண்ணுண்டு சார்த்த எதிர் நிற்க ஈசன்
- எனப் பட்டினத்தாரும் விளக்குகிறார்.

கண்கள் அவனைக் காண
உள்ளம் அவனை நினைக்க,
கைகள் அவனை வணங்க-
இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன்
அன்பே நாம் பெறும் கருணை
- என, கண்ணதாசன் கூறியதும் இதுவே!

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இறைச்சிந்தை என்பது சுலபமாகத்தான் தோன்றுகிறது. இப்பாடலிலே, ‘சேயன நந்தி தூரத்தில்  இருப்பதைப்போலத் தோன்றும் இறைவன்’ எனத் திருமூலா் கூறியிருப்பதன் மூலம், தூரத்தில் இருப்பதைப்போலத் தோன்றினாலும், நமக்கு  மிகவும் அருகில் இருக்கிறார் இறைவன் என்று நம்மை உணர வைக்கிறார் திருமூலா். அதை நம்மில் பலரும் நன்றாக உணா்ந்ததாகவே தெரிகிறது. தற்போது, தெய்வ வழிபாட்டு நிகழ்ச்சிகளும், கதாகாலட்சேபம், ஆன்மிக வகுப்புகள் எனப்பலவும் விரிவாகவே நடக்கின்றன.  இருந்தாலும், நாம் நிம்மதியாக இருப்பதாகத் தெரியவில்லை; அமைதியைத் தேடி அலைகிறோம். எங்கோ கோட்டைவிட்டிருப்பது  தெரிகிறது. திருமூலா் இதற்கு என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம்!

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறுவார் அமராபதி நாடி
எளியன் என்று ஈசனை நீசா் இகழில்
கிளி ஒன்று பூஞையின் கீழ் அதுவாமே
(திருமந்திரம்-526)   

சென்ற பாடலில், இறைவனிடம் செலுத்தப்பட்ட சிந்தையைச் சொன்ன திருமூலா் இப்பாடலில், சிந்தையின் தெளிவைச் சொல்கிறார். கூடவே  ஒரு கிளி கதையையும் கூறுகிறார். அந்தக் கிளிக் கதையைப் பார்த்துவிட்டுப் பிறகு, பாடலின் தொடக்கத்தைப் பார்க்கலாம். மரத்திலே  வாழ்ந்துகொண்டு, அதில் உள்ள பழங்களையும் கொட்டைகளையும் கொத்தித் தின்று, மகிழ்ச்சியாக வாழ்வது கிளி. அது, யாராவது சொல்லிக்  கொடுத்தால், அப்படியே சொல்லும். இவ்வாறு மரத்தில் ஒரு கிளி சந்தோஷமாக வாழ்ந்தபோது, அம்மரத்தின் அடியில் ஒரு பூனை இருந்தது. மரத்தின் மேலே கிளி சந்தோஷமாகச் சிறகடித்துக் கத்திக்கொண்டிருக்கும்போது, கீழே பூனை இங்கும் அங்குமாக உலாவும். அதைப்பார்த்துக் கிளி பரிகாசம் செய்யும்.

தரையில் உலாவக்கூடிய பூனைக்கு மரம் ஏற முடியாது. ஆகவே பூனையால் தனக்கு ஏதும் ஆபத்து வராது என்று நினைத்தது கிளி. பூனைக்கு மரம் ஏறத் தெரியும் என்பது கிளிக்குத் தெரியாது; வழக்கப்படிப் பாட்டுப்பாடுவதும், பூனையைப் பரிகாசம் செய்வதுமாகவே இருந்தது அது.  ஒருநாள், கிளி அசந்து மறந்து இருந்த நேரத்தில் பூனை மெல்ல மரத்தின் மீது ஏறியது. கிளியைப் பிடித்து... என்ன ஆகியிருக்குமென்று. அது போல, ஓரளவிற்குப் பணம், பதவி என வசதிகள் வந்தவுடன், அதுவரை தெளிவாக இருந்த சிந்தை, இறைவனை இகழத் தொடங்கும்.  அதாவது, ‘எல்லாம் என்னால்தான். நான் இல்லையென்றால்.” என ஆரம்பித்து அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் இறைவனை  அவமானப்படுத்தும். விளைவு?

ஏறிய வேகத்தைவிட விரைவாகக் கீழே விழுந்துவிடுவோம். காரணம்? சிந்தையில் தெளிவு இல்லை. அதாவது, சிந்தையில் தெளிவு பெற்றதாக எண்ணிக்கொண்டு, பக்தியில் திளைத்திருப்பதாக எண்ணுகிறோமல்லவா, அது எடுபடாது. பூனையிடம் சிக்கிய கிளியைப்போல, உலகியலில் மனதை மயக்குபவற்றிடம் சிக்கி, நம்மை இழந்து விடுவோம். அதேசமயம், சிந்தையில் தெளிவு பெற்றவா்களோ, அன்பின் வழியில் நின்று இறைவனை அடைவார்கள். அவா்களுடைய முதிர்ந்த அன்பு, அவா்களுக்கு முக்தியைக் கொடுக்கும். சிந்தையின் தெளிவே  பக்தியின் முதிர்ந்தநிலை என்பதை விளக்கும் இப்பாடல், அவ்வாறு தெளிவுபெறாத பட்சத்தில் விளையக்கூடிய விளைவுகளையும் கூறி, நம்மை எச்சரிக்கிறது.

(மந்திரம் ஒலிக்கும்)