திருமுறைக் கதை



போதும் என்ற மனநிலையே எப்போதும் வேண்டும்!

கரியயொரு திங்க ளாறும் கானவன் மூன்று நாளும்
இரிதலைப் புற்றி நாகம் இன்றுணும்
இரையாமென்று
விரிதலை வேடன் பக்கவிற்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்டபாடு நாளை நாம் படுவோ மன்றே
(தனிப்  பாடல்)

வேட்டுவ குலத்தில் ஆடவர்கள் வேட்டையாடுவதில் வல்லவராக விளங்குவார்கள். வனசரன் என்ற ஒரு வேடன் காட்டிலுள்ள மிருகங்களை வேட்டையாடி, நாள்தோறும்  கிடைக்கும் இறைச்சியை உண்பதை வழக்கமாக வைத்திருந்தான். சில நாட்களாக வேட்டையில் அவனுக்கு   ஒன்றும் கிடைக்காததனால் பசியும், பட்டினியுமாக அவன் அலைய நேரிட்டது.  ‘தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்,’ என்ற ஔவையின் வாக்கிற்கு இணங்க அவன் செய்த வினையின் பயனால் அவனுக்கு காய்கனி வகைகள்கூடக்  கிடைக்கவில்லை.  இப்படியே இரண்டு நாட்கள் கடந்துவிட்டன.
 
களைத்து, ஒளியிழந்த வனசரனுக்கு, மூன்றாம் நாள், அருகில்  உள்ள ஆற்று நீரைப்  பருகிக்  கொண்டிருந்த ஒரு யானை தென்பட்டது. உடனே வில்லின் நாணை இழுத்து, யானையை நோக்கி அம்பை ஏவினான். அம்பு பட்ட மாத்திரத்திலேயே அந்த யானை கீழே விழுந்து  இறந்தது. வேடனின் வினைதானோ என்னவோ அவன் யானையைக் குறி பார்த்துக் கணை ஏவிக்கொண்டிருந்த தருணத்தில், அவன் காலை ஒரு பாம்பு கடித்தது. உடனே தன் வில்லால் அந்தப்  பாம்பின் தலையில் ஓங்கி அடித்தான். அடிபட்ட அந்தப்  பாம்பும் உடனே  இறந்துவிட்டது. அந்தப் பாம்பு முன்பே வேடனைத் தீண்டியதால் உடல் முழுதும்  விஷம் பரவி வேடனும் இறந்துவிட்டான்.

இப்படி யானை, பாம்பு, வேடன் ஆகிய மூவரும் ஒரே சமயத்தில் இறந்ததைக் கண்ணுற்ற ஒரு நரி, தான் அதுவரை பதுங்கியிருந்த பொந்தை விட்டு வெளியே வந்தது. தனக்கு மூன்று வகையான  உணவுகள் கிடைத்துவிட்டதைக் கண்டு ஆரவாரித்து, மகிழ்ந்து, துள்ளிக் குதித்தது. அந்த  மூன்று உடல்களையும் சுற்றிச் சுற்றி வந்தது. இப்படிப்பட்ட அருமையான உணவை பொறுத்திருந்து, நிதானமாக, கொஞ்சம் கொஞ்சமாக பல  நாட்களுக்கு சுவைக்க வேண்டும் என திட்டமிட்டது. மூன்றில் யானை உடல் மிகப் பெரியது.

அதனால் அது ஆறு மாதத்திற்குத் தனக்கு  உணவாகும்; வேடன் உடல் மூன்று  நாட்களுக்குப் போதுமான உணவாகிவிடும், எஞ்சிய பாம்பை ஒரு நாளில் தின்றுவிடலாம் எனத்  திட்டமிட்டது. அந்த இன்ப எண்ணத்திலேயே மிதந்து, நாக்கைச் சுழற்றி உமிழ்நீரை உள்ளுக்குள் உறிஞ்சியபடி, உடல்களைச் சுற்றிச் சுற்றி   வந்தது. தானே யாவற்றையும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதற்கு மிகுந்து  முதலில் எந்த உடலைச் சாப்பிட்டால் சரியாக இருக்கும்  என்று  யோசித்தது. கடைசியாக, வேடனையே முதலில் சாப்பிடலாம் என்று நினைத்தது. வேடன் அருகில் இருந்த நாணுடன் கூடிய வில்  அதன் பார்வையில் பட்டது. உடனே, ‘‘அந்த நாணில் என் பற்களை நன்றாகத் தீட்டிக் கொண்டால், பற்கள் கூர்மையாகி எளிதில் இறைச்சியை  உண்ணுவதற்கு வசதியாக இருக்குமே”  என நினைத்து, நாணைத் தன் பற்களால் பற்றி, இங்குமங்கும் தேய்த்தது. பலமுறை தேய்த்ததனால் நாண் இற்று, வில்லும் நிமிர்ந்து, நரியின் தலையை பலமாக அடித்தது. அந்த அடி தாங்கமுடியாமல் அப்போதே  நரி விழுந்து உயிரை  விட்டது.

சற்று நேரத்தில் பேராசை பிடித்து இறந்துபோன அந்த நரியின் மனைவி அங்கு வந்தது. நான்கு உடல்கள் மடிந்து கிடப்பதைக் கண்டது. தன் கணவனும் இறந்து கிடப்பது கண்டு வருத்தமுற்றாலும், மனதைத் தேற்றிக் கொண்டது. ஆனால், வெகு நாட்களாக மனித உடலையே ருசித்து  அறியாத பெண் நரி, தாமாவது அந்த வேடன் இறைச்சியைச் சாப்பிடலாம் என எண்ணி வேடனை ஆவலுடன் கடித்தது. ஆனால், வேடன்  உடலில் புகுந்திருந்த விஷம் பெண் நரியின் உடலிலும் ஏறி, அதுவும் இறக்க நேரிட்டது. ஆக இப்பொழுது இருப்பது உயிரில்லாத ஐந்து  உடல்கள்.

‘நரியனார் பட்ட பாடு நாளை நாம் படுவோமன்றே’ என்ற இதே கருத்தை ஐந்தாம் திருமுறையில், பொதுப் பாடல் பகுதியில் ஏழாவது பாடலில் திருநாவுக்கரசர் புகுத்தியிருக்கிறார்.

எரிபெருக்குவர் அவ்வெரி யீசன்
உருவருக்கம் அதுஆவது உணர்கிலார்
அரி யயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே

அக்னியை வளர்த்து, செல்வம் யாவும் இட்டு, வேள்வி புரிந்து, அந்த அக்னியே இறைவனின் திருமேனி வகையானது என்பதை உணரும் ஆற்றல் இல்லாத அறிவிலிகளாக விளங்கும் சிலர், ஜோதியாய் நின்ற இறைவனின் அடியையும், முடியையும் காண்பதற்கு தேடித் தேடித் தோற்றுப் பின் தெளிந்த திருமாலும், பிரம்மனும் அரிய முடியாத கடவுளைக் காண்பதற்கு  அயர்த்து,  நரியின் எண்ணம் போன்று பயனற்றுப் போவார்கள் (நரி விருத்தம் ஆகுவர்) என்பதைக்  குறிக்கிறது.

மேலும், நான்காம் திருமுறையில், திருவதிகை வீரட்டானம் தலம் ஐந்தாவது பாடலிலும் திருநாவுக்கரசர் இக்கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்:

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த
தெரிவரான் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர்
சிந்தை செய்வார்
வரிவரா லுகளுந் தெண்ணீர்க் கழனிசூழ்
பழனவேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிகைவீ ரட்டனாரே

கோடுகளையுடைய வரால் மீன்கள்  தாவும் தெளிந்த நீரையுடைய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை நான்கு பக்கங்களையும் எல்லையாகக் கொண்டு, நெல்லரியும் உழவரால் சூழப்பட்ட வயல்களைக் கொண்ட அதிகையின் வீரட்டனார், பேராசையால் வரால் மீனைக் கவரச் சென்று  தன் வாயில் முன்பு பற்றியிருந்த ஊன் துண்டத்தையும் இழந்தது போல், கிட்டாத ஒன்றை நினைத்துக் கிட்டியதனையும் இழக்கும் இயல்பையுடைய மனித வாழ்க்கையை ஆராயும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மயக்கத்தை நீக்கும் உபாயத்தைத்  திருவுளம்  கொண்டு அருளுவார் என்று பொருள்படப்  பாடியுள்ளார்.

இவ்வாறு பற்பல கதைகளும், அரிய  கருத்துகளும் திருமுறைகளினூடே தொக்கி நிற்கின்றன. இந்த கதைப்படி கைக்கு எட்டியும், வாய்க்கு  எட்டாதது ஏன்? கைக்கும், வாய்க்கும் நடுவே பேராசை என்ற அலைபாயும் மனம், உணவை வைத்திருக்கும் கையையும் உயர்த்த விடாமல், வாயையும் திறக்கச் செய்யாததும்தான். ‘இப்போதைக்கு இது போதும்’ என்ற மனம் இருந்திருந்தால் அது பொன் செய்யும் மருந்தாகியிருக்கும்!

உமா பாலசுப்பிரமணியன்