ஜமீன் கோவில்கள்



ஒரு பொம்மையாக அரசாட்சி நடத்திய ஆன்மிக ஜமீன்தார்!

முத்தாலங்குறிச்சி காமராசு

நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்தைக் கடந்ததும், ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவரின் சிலை கம்பீரமாக  காட்சியளிக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாத்த இவரது தோற்றம் பார்ப்பவர்களை வணங்கத்  தூண்டுகிறது. இவரது தமிழ் பற்றுக்கு உதாரணமாக கோயில் வளாகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் தற்போதும் காணப்படுகின்றன. எழுதி  முடித்தும் முடிக்காமலும், பதம் செய்யப்பட்டும் நேர்த்தி செய்யப்படாமலும் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குதான் இருதாலய  மருதப்ப தேவர் தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எழுதியுள்ளார். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் நூற்றுக்கணக்கானோர்  அமர்ந்து பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அந்தச் சுவடிகள்தாம் இவை.

மருதப்பரின் உறவினர்கள் சிலரும் பெருங்கவிஞர்களாக, இறையருள் பெற்ற புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இருதாலய மருதப்பத்தேவர் கல்வி ஞானம் மிகுந்தவர். தமிழறிஞர்களிடம் அவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தார்; அவர்களை அரவணைத்து உதவுவார். டாக்டர் உ.வே.  சாமிநாத அய்யர் எழுதிய “நான் கண்டதும், கேட்டதும்” என்னும் நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளை, புத்தகங்களாகப் பதிப்பித்த அண்ணல் அவர். அவர் பணி சிறக்க, இரண்டு வில் வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகளை இருதாலய மருதப்பதேவர்  வழங்கியுள்ளார். “ஊத்துமலை ஜமீன்தார்கள் கலைகளை மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் போற்றி வந்தனர்.

இவர்களது அரண்மனையில் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. நான் முதல் முதலில் இருதாலய மருதப்ப தேவரை அரண்மனையில் சந்தித்தபோது அவர் வேட்டைக்காரர் கோலத்தில் இருந்தார்’’ என்றும் “மன்னர் மருதப்பர், தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிப்பார். பாலை பருகி 6 மணிக்கெல்லாம் பரிவாரங்களுடன் நகர் உலா செல்வார். யானை, குதிரை, காளை  கட்டுமிடங்களை நேரடியாக பார்வையிடுவார். அவரால் அமைக்கப்பட்ட இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையைப் பார்வையிட்டுக்  கொண்டே உலாவுவார். காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ்ப் புலவர்களுடன் கலந்துரையாடுவார். காலை 10 மணிக்கு மேல் அரண்மனை கச்சேரிக்கு சென்று சமஸ்தான பணிகளை கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு தமிழ் நூல்களைப் படிக்க உட்காருவார். தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை சமஸ்தான வேலைகளில் ஈடுபடுவார். பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து பேசுவார். ஓலைகளில் எழுதியுள்ளதை அவர்கள் நீட்டுவார்கள். அவற்றை படித்து பார்த்து  மறுநாள் தனது கருத்தை  சொல்வார். மாலையில் நல்ல பாடல்களை இசைக்கச் செய்து ஆலய வழிபாடு மேற்கொள்வார். வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்களை அவரே கோயிலுக்கு அழைத்து சென்று  மரியாதை செய்து பிரசாதம் வழங்கி கவுரவிப்பார்” என்றும் தனது நூலில் உ.வே.சா.  குறிப்பிட்டுள்ளார்.

கோயில்களில் கவி பாடவும், ஓலைச்சுவடிகளை எழுதவும் கவிராயர்களை இருதாலய மருதப்பர்  பணியமர்த்தினார். சங்கர நமச்சிவாயர் என்னும் புலவரை நன்னூலுக்கு உரை எழுதச்செய்தார். மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், தினந்தோறும் ஒருபடி பாலும் அவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. இவரைக்கொண்டே தொல்காப்பியத்துக்கும்  ஊத்துமலை ஜமீன்தார் உரை எழுதவைத்தார். அந்த உரை திருவனந்தபுரம் அரசு காப்பகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே கருதிய மருதப்பர், அகரம் என்ற நகரில் மனக்காவல் ஈஸ்வரர், சிவகாமியம்மைக்கு பெருங்கோயிலை கட்டியுள்ளார் என்கிறார்  டாக்டர் ராஜையா.

ஊத்துமலை ஜமீன் வருவாய் தரக்கூடிய 52 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் கீழப்பாவூர், மேலப்பாவூர் கிராமங்களில் 272 ஏக்கர் நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடங்களை வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். அப்போதைய  நிலவரப்படி ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கோயிலுக்கு அளித்தார். இவரைப் போற்றி 344 பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். ஒரு சமயம் மருதப்பத்தேவர் கழுகுமலை முருகனை தரிசிக்க நடந்து சென்றார். அப்போது பயணம்  எளிமையாக அமைய காவடிச்சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியவாறு கூடவே சென்றார். இப்பாடல்களை புலமை  படைத்த ஊத்துமலை மன்னரே இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது என்கிறார் எழுத்தாளரும், தென்காசி அரசு வக்கீலுமான மருது பாண்டியர்.  இப்பாடல்களை நூலாக வெளியிட்டார் மருதப்ப மன்னர். இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடி கூடுதல் பெருமை பெற்றது. இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை  மற்றும் இறைபக்தி பற்றியும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை அடுத்து கோயிலைச் சுற்றி வரும்போது சுவாமி வாகனங்களைக் காணலாம். பொதுவாக கோயில்களில் காணப்படும் மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள்போல் இல்லாமல், இங்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட தேர், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இவை ஜமீன்தார்கள் கோயிலுக்கு தானமாக அளித்தவை. கோயில் வெளிபிராகாரத்தில் தற்போது ஆஞ்சநேயர், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.12.09.1891 அன்று மருதப்பர் இப்பூவுலகை நீத்தார். மனம் கலங்கிய ராணியார் செய்வதறியாமல் தவித்தார். கணவரின் நோக்கத்தை ஈடேற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளோடு அவர் ஆட்சி பொறுப்பை ஏற்க முன்வந்தார்.
 
ஆங்கிலேயர் ஆட்சியில் கணவனை இழந்தவர் அரசாட்சி செய்ய முடியாது என்று ஒரு சட்டம் இருந்தது. மகாராணி, கணவர் இருதாலய  மருதப்ப தேவர் போல மாவு பொம்மை ஒன்றைத் தயார் செய்தார். அவர் உயிரோடு இருந்தபோது மேற்கொண்டிருந்த அலங்காரங்களை  தினமும் அந்தச் சிலைக்குச் செய்தார். ராஜதர்பாரில் அந்த  பொம்மையை ராஜாவாக நிறுவி அதன் காலை தொட்டு வணங்கிய பின்னரே தனது அன்றாட செயல்களைத் தொடங்கினார். மருதப்பர் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். கோயிலுக்கு அருகே பொதுமக்களுக்காக கிணறு ஒன்றை வெட்டினார். அன்ன சத்திரம் அமைத்தார். கோயில் வளர்ச்சிக்காக, வீரகேரளம்புதூர், கலிங்கம்பட்டி, வடக்கு கிருஷ்ணபேரி (ம) ராமனூர், ராஜகோபாலபேரி, அச்சங்குன்றம், மேலகிருஷ்ணபேரி, முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஏழு  கிராமங்களை இணைத்தார். (இதுகுறித்த கல்வெட்டு கோயில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.)

மருதப்பர் உயிரோடு இருப்பதாகவே பாவித்து அந்த மாவு பொம்மையுடன் அரசாட்சி செய்தார் ராணி. தற்போது 150 வருடங்களை தாண்டியும் அந்த மாவு பொம்மை ஜமீன்தாரின் வாரிசான பாபுராஜ் என்ற மருதுபாண்டியரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி,  இருதாலய மருதப்ப தேவர் இன்றும் தம்முடன் வாழ்வதாகவே ஜமீன் வாரிசுகள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் ஜமீன் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அனைத்து சமுதாயத்துக்கும் மண்டகப்படி உண்டு. கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல்நாள் திருவிழாவை பிராமண சமூகத்தினரும், இரண்டாம் நாள் யாதவர் சமூகத்தினரும், 3வது நாள் பிள்ளைமாரும், 4வது நாள் கர்ணம் வகையாறாக்களும், 5வது நாள் நாச்சியார் என்னும் அரண்மனை பெண்களும், 6வது நாள்  வீராணம் தேவர் இனத்தவர்களும், 7வது நாள் சின்ன புலியப்ப தேவர் வகையறாக்களும், 8வது நாள் ஜமீன் உறவினர்களும், 9வது நாள்  தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 10வது நாள் சேனை தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். தேர்த்திருவிழா மிக விமர்சையாக  நடக்கும். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும். வானில் கருடன் வட்டமிட்ட பிறகே தேரை வடம் பிடித்துக்கொடுப்பார் ஜமீன்தார். தேரடி முக்கில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. இந்த தெய்வத்துக்கு அசைவப் படையலும் உண்டு. மழை பொய்த்தால் ஜமீன்தார் தலைமையில் இந்த தெய்வத்துக்கு பூஜை நடக்கும். உடனடியாக மழைபொழியும் அதிசயமும் நடந்துள்ளது.

நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் ஆலயத்தில் வேலை செய்யும் அனைவரும் கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அரண்மனைக்கு சென்று மேளதாளத்துடன் ஜமீன்தாரை அழைத்து வருவர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் முதல் தரிசனம் ஜமீன்தாருக்குத்தான். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சீடை,  அப்பம், வெண்ணெய், அவல், பொரி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகே மற்றவர்கள் தரிசனம் செய்வர். அன்றைய தினம்,  குருவாயூரில் இருப்பது போலவே சிறப்பு அலங்காரத்தில் குழந்தையாக நவநீத கிருஷ்ணன் காட்சியளிப்பார். இங்குள்ள உற்சவர் ராஜகோபாலன், ருக்மணி, சத்யபாமா சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை.  சரஸ்வதி பூஜையின்போது வீரகேரளம்புதூரில் உள்ள  முப்பிடாதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், கருமேனி அம்மன் கோயில்களில் கொலு வைப்பார்கள். மூன்று அம்மன்களும் சப்பரத்தில்  பவனி வருவர். அன்று ராஜகோபால சுவாமி பரிவேட்டைக்கு சப்பரத்தில் புறப்படுவார். அன்றும் ஜமீன்தார் வந்து துவக்கி வைத்த பின்னரே  சப்பரம் புறப்படும்.

இருதாலய மருதப்ப தேவரையும், அவருக்கு பிறகு அரியணை ஏறிய ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரையும் ஜமீன் சுப்பையா தேவர்  கடவுளாகவே கருதினார். சிற்றாற்றின் கரையில்  இருதாலய ஈஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு இருதாலய மருதப்பர் என்றே  பெயர்! கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபெருமான் மருதப்ப தேவராகவே வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் சந்நதி கருவறையில் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரின் சிலை உள்ளது.  இருவரையும் வணங்குவது போல எதிரே  உள்ள தூணில் சுப்பையா தேவர் சிலை காணப்படுகிறது.

இந்தச் சிறிய கோயிலில் நவகன்னிகள், நந்தியம்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஜமீன்களின் சீரிய ஆன்மிகப் பணியைப் பறைசாற்றும் வகையில் கோமதி அம்மனை ஜமீன்தார் தனது மகளாக பாவித்து வழிபடும் திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக ஒரு பெண் தெய்வத்தை அன்னையாக பாவிப்பது வழக்கம்; ஆனால், மகளாக பாவித்து நடத்தப்படும் இந்த அதிசய வழிபாடு நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடக்கிறது.
அந்த விவரம் அடுத்த இதழில்.

(தொடரும்)

படங்கள்: பரமகுமார், மருது பாண்டியன்