ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்



வரிகளில் தேசக் கனவை எழுதிய
சீருடைகளை அணிந்தனர்
நேற்றைய போரில் மாண்டுபோனவர்
கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து
அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்
எல்லோருடைய அழுகையையும்

துடைக்கும் அவர்களால்தான்
இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும்
எல்லோருடைய துயரையும்
துடைக்கும் அவர்களால்தான்
இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும்
கழுத்தில் சயனைட் குப்பி
தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை
துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன
தோழியின் நினைவில் மறந்தான்
களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை
துப்பாக்கியை ஏந்திக்
கையசைக்கும் விழிகளில்
 தேசத்தின் வரைபடம்
நேற்றைய போரில்
கொல்லப்பட்ட குழந்தைகளின்
நினைவில் மறந்தான்
தந்தையைத் தேடி அழும்
தன் குழந்தையை.
‘நாளை மீட்கப்படும் கிராமத்தில்
நான் இல்லாது போகலாம்
அம்மாவின் பொழுது சொந்தவூரில் புலர்கையில்
சாணி தெளித்த முற்றத்தில்
செவ்வரத்தம் பூவாய் பூத்திருப்பேன்’.
முதுகுப் பொதிக்குள்
உலர்ந்துபோன உணவுப் பொட்டலம்
ஒரு குவளை குடிநீர்
பெருந் தாகத்தில் ஊடறுக்கும்
கொரில்லாவின் இறுதிக் கணத்தில்
மனமெங்கும் பரவிக் கிடந்தது
கனவு பூத்த தாய் மண்.

-தீபச்செல்வன்