கல்லீரல் - உயிர் காக்கும் போராளி!



-டாக்டர் கு.கணேசன்

காலையில் எழுந்ததும் வாக்கிங் போவது, பால் பூத்துக்குப் போய் பால் வாங்கி வருவது, சாப்பிட்ட கேசரி குடலில் செரிப்பது, பொத்தான் அளவில் இருக்கிற ‘பாராசிட்டமால்’ மாத்திரை ஆறடி உடம்பின் காய்ச்சலைக் குறைப்பது, மீசையில் பூசிய ‘டை’ அலர்ஜி ஆவது, ஆபீஸில் இரண்டு ஆள் வேலையை ஒரே ஆள் பார்ப்பது, ராத்திரி ஆனதும் டி.வி பார்த்துவிட்டு உறங்குவது... இப்படி நாள் முழுவதும் உடலில் நடக்கிற நிகழ்வுகளுக்குத் தேவையான சக்தியையும், சத்துக்களையும் தருவது எது என்று நினைக்கிறீர்கள்? ‘உடலின் காவல்காரன்’ என்று மருத்துவர்களால் அழைக்கப்படும், கல்லீரல்!

நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல். ஆங்கிலத்தில் இது ‘லிவர்’. பேச்சுத் தமிழில் ‘ஈரல்’. ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாகப் பதுங்கியிருக்கிறது. இதயத்தைப் போலவே இதிலும் எலும்புகள் இல்லை; முழுக்க முழுக்க ஒரு ‘முக்கோண’ தசைப் பெட்டி.

தொட்டுப் பார்த்தால் பஞ்சு மெத்தை மாதிரி அத்தனை மிருது! மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பு ரீதியில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது. குடையை விரித்தால், அதன் மத்தியிலிருந்து கைப்பிடிக்கம்பி வெளிவருகிறதல்லவா? அதுபோலத்தான் கல்லீரலின் ‘மத்தியப் பிரதேச’த்திலிருந்து (Porta Hepatis), நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது.

இது கீழ்நோக்கி இறங்கி, சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் இருக்கும் பித்தப்பை (Gall bladder)யோடும், முன் அடைப்புக்குறி போலிருக்கும் முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது. ஓர் ஆர்வத்தில் கல்லீரலைக் குறுக்காகப் பிளந்து பார்த்தால், அதனுள்ளே ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஒரு தேன் கூடு போல் பல்லாயிரக்கணக்கான ‘பல்லாங்குழிகள்’ தெரிகின்றன. அவற்றுள் கோடிக்கணக்கான  ‘ஹெப்பாடிக் செல்கள்’ கூடி பித்த நீரைச் (Bile) சுரக்கின்றன.

இந்த பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குப் போகிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர் வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல். உலகில் உள்ள எல்லா நிபுணர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

சிறியதும் பெரியதுமாக அனுதினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட காரியங்களைச் செய்கிறது. இத்தனை செயல்களுக்கும் கல்லீரல் நடத்தும் ரசாயன மாற்றங்களை வெளியில் செய்து காட்ட விரும்பினால், இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய ரசாயனத் தொழிற்சாலையே கட்ட வேண்டியிருக்கும். அப்படியும்கூட கல்லீரல் செய்யும் சில உட்பரிமாற்றங்களை வெளியில் செய்துகாட்ட முடியாது என்று வியக்கிறார்கள் மருத்துவர்கள்!

ஸ்கூட்டரில் கார்புரேட்டர் செய்யும் பணியைத்தான் உடம்பில் கல்லீரல் செய்கிறது. பெட்ரோலை எரிசக்தியாக மாற்றி, ஓட்டும் சக்தியாகக் கொடுப்பது கார்புரேட்டரின் பணி. அதைப் போலவே உணவில் இருக்கும் சத்துக்களைக் கிரகித்து, உடலுக்கு உதவும் சக்தியாக மாற்றித் தருவது கல்லீரலின் பணி. இது எப்படிச் சாத்தியமாகிறது?

பித்தநீரில் இருக்கிறது இந்த சூட்சுமம். உணவு இரைப்பையை விட்டு இறங்கியதும், பித்தநீர் பித்தப்பையிலிருந்து வெளியேறி,  முன்சிறுகுடலுக்கு வந்துவிடுகிறது. உணவிலிருக்கும் கொழுப்பைப் பிரித்துக் கூழ் போலாக்குகிறது. இப்போது அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து ‘லைப்பேஸ் என்சைமை’ துணைக்கு அழைத்துக்கொள்கிறது. கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது. இது போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்குத்தான் வந்து சேருகிறது. அங்கு குளுக்கோஸ் எனும் சக்திப்பொருளாக மாற்றப்படுகிறது. நீங்கள் சாப்பிட்ட திருநெல்வேலி அல்வா செரிமானமாவது இப்படித்தான்!

சரி, நீங்கள் சாப்பிட்டது அரிசி சோறு! அது எப்படிச் செரிமானமாகிறது? அரிசி சோற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதும் கல்லீரல்தான். அதேசமயம் சாப்பிட்ட சோறு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்துதான்! ‘கோமா’வில் சரிந்துவிடுவீர்கள். தேவையான அளவுக்கு ரத்தத்துக்குக் குளுக்கோஸை கொடுத்துவிட்டு, மீதியை கிளைக்கோஜனாக மாற்றி, தன்னிடம் சேமித்துக்கொள்கிறது, கல்லீரல்.

கல்லீரல் மட்டும் இந்தச் சேமிப்பு வேலையைச் செய்யாவிட்டால், அரசியல்வாதிகள் ‘உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று பந்தல் போட்டு உட்கார முடியாது. அதேபோல் நீங்கள் விரதம் இருக்கும்போதும், வீட்டில் கோபித்துக்கொண்டு ஒருநாள், இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கும்போதும், வயிறு பசித்து உணவுக்காக ‘அழும்’. அப்போது, ‘இந்தா நீ கேட்ட உணவு’ என்று தன் சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனை மறுபடியும் குளுக்கோஸாக மாற்றித்தரும் வள்ளலும் கல்லீரல்தான்!

உடம்பின் அவசரத்துக்கும் ஆபத்துக்கும் அயராமல் சத்துக்களை அள்ளித் தரும் ஆபத்பாந்தவனல்லவா, கல்லீரல்! வறுமை, வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் பலர் மாதக்கணக்கில்கூட சாப்பிடாமல் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுவது உண்டு. அப்போது அவர்களுக்கு நாட்கணக்கில் சக்தியைத் தருமளவுக்கு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் கிடைக்காது.

இதுபோன்ற சமயங்களில் உடலில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்து சத்தை எடுத்து குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க வழிசெய்து, உயிர் காக்கும் போராளியாக மாறுகிறது கல்லீரல். சாப்பிட்ட உணவு மட்டுமல்ல, குடித்த மது, விழுங்கிய மாத்திரை, சுவாசித்த புகை, தலைக்குத் தேய்த்த தைலம், தவறுதலாகக் குடித்துவிட்ட விஷம்... இப்படி எல்லாமே கல்லீரலுக்குத்தான் போகிறது.

திருப்பதி உண்டியலில் பணத்தையும் நகைகளையும் பிரிக்கிற மாதிரி, இவற்றில் உள்ள ரசாயனங்களை தனித்தனியாகப் பிரித்து, ‘நல்லது எது? கெட்டது எது?’ எனத் தெரிந்து, மாத்திரை, மருந்து போன்ற நல்லதைச் செயல்பட வைக்கிறது. புகை, தூசி போன்ற கெட்டதைச் செயலிழக்கச் செய்கிறது. கல்லீரல் மட்டும் இந்தத் துப்புரவுப் பணியைச் செய்யாவிட்டால், நெருக்கமான சாலைகளில் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகை மட்டுமே ஒரே வாரத்தில் நம்மைச் சாகடித்துவிடும்!

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடியும்போது, அவை மண்ணீரலுக்கு (Spleen) வந்து அழிகின்றன. அப்போது ‘பிலிரூபின்’ என்ற நச்சுப்பொருள் வெளிவருகிறது. இது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே, அதை ‘விருந்து’க்கு அழைத்து, பக்குவப்படுத்தி, பித்த உப்புகளாக மாற்றிச் சிறுநீரிலும் மலத்திலும் ‘பத்திரமாக’ அனுப்பிவைக்கிறது. இந்த உபசரிப்பின் பலனால் ரத்தம் சுத்தமாகிறது; உயிர் ஆபத்து விடைபெறுகிறது.

இதுபோல், உடலில் புரதச்சத்து பயன்படுத்தப்படும்போது, ‘அமோனியா’ எனும் நச்சு வாயு கிளம்பும். இது நேரடியாக நுரையீரலுக்குப் போனால் நம் மூச்சு அடங்கிவிடும்.  ஆகவே, இதன் சுற்றுப்பாதையை மாற்றி அமைத்து, அதைத் தன்னிடம் வரச் செய்து, அதன் வடிவத்தை யூரியாவாக மாற்றிச் சிறுநீரகத்துக்கு அனுப்ப, அது சிறுநீரில் வெளியேறிவிடுகிறது. இந்தச் சுழற்சியில் தகராறு ஏற்பட்டால், ரத்தத்தில் யூரியா அதிகரிக்கும். அதனால் சிறுநீரகம் பழுதாகும். இதைத் தவிர்க்க, யூரியாவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய சிரமமான பணியையும் கல்லீரல்தான் சிரமேற்கொள்கிறது.

மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைகளால், தெரிந்தோ, தெரியாமலோ பலதரப்பட்ட விஷப் பொருட்களும் உடம்புக்குள் நுழைவது இப்போது சகஜமாகிவிட்டது. உதாரணத்துக்குச் சில... நீங்கள் அருந்தும் தேநீரில் ‘டேனின்’ என்ற நச்சுப்பொருள் இருக்கிறது. காபியில் ‘காஃபீன்’, சிகரெட்டில் ‘நிகோடின்’, ‘டாஸ்மாக்’ சமாச்சாரத்தில் ஆல்கஹால். இவை எல்லாமே கல்லீரலுக்குப் போகாமல் நேரடியாக இதயத்தையோ, மூளையையோ அடைந்தால், இரண்டே நிமிடங்களில் மரணம் நிச்சயம். ஆனால் நடப்பதென்ன? இந்த நச்சுக்கள் கல்லீரலுக்குப் போனதும் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி’ விஷம் இழந்துவிடுவதால் நம்மால் உயிர் பிழைக்கமுடிகிறது.

உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடுகிறதல்லவா? இதற்குக் காரணம் என்ன? கல்லீரல் தயாரிக்கும் ‘புரோத்ராம்பின்’ என்ற ரசாயனம்தான். இந்த ரசாயனத்தை மட்டும் தயாரிக்க மாட்டேன் என்று கல்லீரல் ஸ்டிரைக் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான், உடலிலிருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி இறந்துபோவதற்கு நாம் ஷேவ் செய்யும்போது ஏற்படும் சின்னக் கீறல் போதும்!

கல்லீரல் பற்றி இத்தனை விஸ்தாரமாகப் பேசுவது ஏன்? உடல் உறுப்புகளில் இதயத்தைத் தெரிந்த அளவுக்குக் கல்லீரலின் அற்புதம் அநேகருக்கும் தெரியாத, புரியாத புதிர். ‘கல்லீரலை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதுதான் நடைமுறை நிஜம். உடம்பை வளர்க்கவும் உயிரைக் காக்கவும் கடைசி வரை போராடும் கல்லீரல், தனக்கு பாதிப்பு வரும்போது அது குறித்த அறிகுறிகளை ஆரம்பத்தில் காட்டாது. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, முடிந்தவரை செயல்படுகிற அசாத்திய சக்தி கல்லீரலுக்கு உண்டு.

ஆனால், மது, மிகை உணவு உள்ளிட்ட தீய ‘சக்தி’களால் முக்கால்வாசி கல்லீரல் கெட்டுவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அதைக் காப்பாற்றுவது கடினம். ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிடாமல், கல்லீரல் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அது அடுத்த வாரம்!

(இன்னும் பேசுவோம்...)

சத்துக்களின் சங்கமம் கல்லீரல்!

அரிசி சோற்றைப் போலவே பருப்புச் சோற்றில் இருக்கும் புரதச்சத்தைச் செரித்து குளுக்கோஸாக மாற்றுவதும் கல்லீரல்தான். காய்கறிகளில் காணப்படும் வைட்டமின்களைக் குடலில் கிரகித்து ஊட்டச்சத்தாக மாற்றுவதும் இதே கல்லீரல்தான். சரி, இத்தனை சத்துக்களையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது கல்லீரல்? தனி ஒரு உறுப்பாக இருந்துகொண்டு, உடலின் பல உறுப்புகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தச் சத்துக்களை உடல் இயக்கத்துக்குத் தேவையான ‘ஆதார சக்தி’யாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்!

இதயம் துடிப்பதற்குத் தேவையான சக்தி ஒரு வகை. கண் இமைப்பதற்குத் தேவையான சக்தி வேறு வகை. மூளை வளர்வதற்குத் தேவையான சத்து ஒன்று. முடி வளர்வதற்கான சத்து இன்னொரு வகை. உழைப்பதற்கும், உறங்குவதற்கும் தேவையான சக்திகள் வெவ்வேறானவை. வளரும் குழந்தைக்கும் வயதானவருக்கும் வேண்டிய சத்துக்கள் வேறுபடும்.

எந்த உறுப்புக்கு, எந்த சத்து, எந்த அளவில், எந்த நேரத்தில் தேவை என்பதை தேர்ந்த கணிப்பொறி போல் கல்லீரல்தான் தெரிந்துவைத்திருக்கிறது. அதை அந்தந்த உறுப்புக்குச் சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து அனுப்புகிறது. அதனால்தான் வாக்கிங் போகும்போது, பாட்டு கேட்டுக்கொண்டே ‘செல்’லையும் நோண்டுகிற மாதிரி ஒரே நேரத்தில் பல வேலைகளை நம்மால் செய்ய முடிகிறது.

வாசகர் கேள்விகள்

என் அப்பாவுக்கு மலக்குடலில் கேன்சர் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கு எங்கு சிகிச்சை பெறுவது?
-சரவணக்குமார், கடலூர்.

‘மலக்குடல்’ கேன்சருக்கு புற்றுநோய் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில், அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை என மூன்று வகை சிகிச்சைகள் தேவைப்படும். புற்றுநோய் சிறப்பு மருத்துவர் மற்றும் மேற்சொன்ன மூன்று சிகிச்சைக்கும் வசதி உள்ள அரசு மருத்துவமனை அல்லது சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

முதுமையில் ஓர் அறுவை சிகிச்சை வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்? (‘இன்சிஷனல் ஹெர்னியா’ வந்து நான் ரொம்பவும் சிரமப்பட்டேன்)
- செல்வம், விழுப்புரம்.

பொதுவாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. என்றாலும், வயது அதிகரிக்கும்போது, பிரச்னைகளும் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க, ஆரம்ப கட்டத்திலேயே நோயின் தன்மையைச் சரியாக கணித்துவிட வேண்டும். முறையாகத் திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரைத் தேர்வு செய்ய வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடந்துகொள்ள வேண்டிய எச்சரிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவசர சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும்.