ஜெயம் ரவி வீட்டில் புது ஹீரோ!



நல்ல சினிமா எடுக்க நினைப்பவர்களின் வட்டத்தில் முதல் சாய்ஸ், ‘ஜெயம்’ ரவி. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. தன் திரை வாழ்க்கையின் அருமையான கட்டத்தில் இருக்கிறார். நேரம் தவறாமை, அப்பாவும் அண்ணனும் வார்த்தெடுத்த பாதையில் செல்லும் பயணம் என ரவி எப்பொழுதும் பர்ஃபெக்ட் அண்ட் சிம்பிள். அடுத்து காத்திருக்கிற ‘போகன்’ பற்றி பேசினாலே உற்சாகம் ஆகிறார். ‘வர்தா’ புயல் வீசிய மாலையில் நடந்தது இந்த அமைதி சந்திப்பு.

‘‘என்னோட ஒவ்வொரு படமும் வித்தியாசமா இருக்கணும்னு பார்த்துக்கறேன். அப்படித்தான் என்னோட செலக்‌ஷன் அமையும். அந்த வகையில் ‘போகன்’ எனக்கு முக்கியமான படம். ஒரு கட்டத்தில் பிரபுதேவா மாஸ்டர் என்னை வழி நடத்தியிருக்கிறார். ‘எங்கேயும் காதலி’ல் அவரோட வொர்க் பண்ணின அனுபவம் எப்போதும் இனிக்கும். ‘போகனி’ல் அவரோட தயாரிப்பு, அரவிந்த்சாமி, ஹன்சிகா, இயக்குனர் லக்‌ஷ்மன் என நல்ல செட் இருக்கு. இப்போ வெளியான ‘போகன்’ லேட்டஸ்ட் டிரெய்லர் நல்ல டிரெண்டிங்கில் போகுது. சந்தோஷம்.’’
- புன்னகையின் பூரிப்பில் பேசுகிறார் ஜெயம் ரவி. ‘வனமகன்’, ‘டிக் டிக் டிக்’ என அடுத்தடுத்த படங்களினால் அவரின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

‘‘உங்களை ‘குட்டி கமல்ஹாசன்’னு பிரபுதேவா சொல்லியிருக்காரே?’’
‘‘அப்படிச் சொன்னது அவரோட அன்பு. அதை பெருந்தன்மைனு சொல்லலாம். அவருக்கு என்னைப் பிடிக்கும். அவர் இயக்குநரான முதல் படத்துல நானும் ஹன்சிகாவும்தான் ஜோடி. அந்த சென்டிமென்ட் வேற. நான் அவர் சொல்றதை அப்படியே கேட்டுப்பேன். எனக்கு நல்லது பண்ணினவங்கள்ல அவர் முன்னணியில் நிற்பார். நான் அவரை கவனிச்சு உள்வாங்கி நடிக்கறதை அப்படி சொல்லியிருக்கார். கமல் சாருக்கு முன்னாடி நானெல்லாம் ஒரு சின்னப் பையன். பிரபு சார் ‘ரோமியோ ஜூலியட்’ பார்த்துட்டு லக்‌ஷ்மன் டைரக்‌ஷன்ல படம் வரணும்னு நினைச்சார். ஆல்ரெடி அரவிந்த்சாமி அவருக்கு நெருக்கம். அதனால ப்ராஜெக்ட் முழுமை அடைஞ்சிருச்சு.’’

‘‘ ‘போகன்’ல நீங்க வில்லனாமே?’’
‘‘உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா? ஆனா அதில்லை விஷயம். அதுல நிறைய சஸ்பென்ஸ் இருக்கு. நானும் அரவிந்த்சாமியும் வில்லனாகவும் மிரட்டுவோம்; ஹீரோவாகவும் கலக்குவோம். நான் சின்ஸியர் போலீஸ் அதிகாரி. போகன் அவர்தான். இப்பத்தானே ‘தனி ஒருவன்’ல நடிச்சோம்னு கொஞ்சம் தயங்கினார் அரவிந்த்சாமி. கதையைக் கேட்டதும் ‘ரவி, இது நான் மிஸ் பண்ணக் கூடாத கதை’னு சொல்லி கமிட் ஆனார்.’’

‘‘நீங்களும் அரவிந்த்சாமியும் பக்கா ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்க போல...’’
‘‘யெஸ். ஆனா, அவர் அதுக்கும் மேல. அவர்மேல நான் பெரிய மரியாதை வச்சிருக்கேன். ‘தனி ஒருவன்’ல வந்த நட்பு, ‘போகனி’ல் ஸ்டிராங்க் ஆகிடுச்சு. அவரது அன்பால என் மனசைத் தொட்டார். இந்தப் படத்துல அவரை மாதிரி நான் இமிடேட் பண்ற சீன் ஒண்ணு இருந்தது. அவருக்கு அன்னிக்கு ஷூட் இல்லை. ஆனாலும் வந்திருந்து முழு நாளையும் செலவிட்டார். அது அவருக்கு அவசியமே இல்லை. ஆனாலும் செஞ்சார். படத்துல நாங்க ரெண்டு பேரும் சரிக்கு சமமா இருப்போம். ஷூட்டிங்ல ஒருநாள் எனக்கு சின்ன ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. என்னை ஆஸ்பிட்டலில் சேர்த்து, சிகிச்சை முடிச்சதும் கவனமா வீட்லேயும் கொண்டு வந்து விட்டார். அடிக்கடி என்னை வந்து பார்த்துக்கிட்டார். இதையெல்லாம் சேர்த்து அவரை எனக்கு எப்பவும் பிடிக்கும்.’’

‘‘ ‘வனமகன்’ எப்படி போயிட்டிருக்கு?’’
‘‘விஜய் இயக்கும் படம் அது. எங்க அண்ணன் மாதிரிதான் அவரும். என்னோட முதல் படத்துல இருந்தே வொர்க் பண்ண விரும்பினார். ‘குமரிக்கண்டம்’னு ஒரு கதை சொன்னார். அது பெரிய பட்ஜெட் படம்னால கொஞ்சம் தள்ளிப் போயிருக்கு. இப்ப ‘வனமகன்’. காடும் காடு சார்ந்த இடங்களும்தான் படத்தோட கதைக்களம். அதனால அந்தமான், நிகோபர் தீவுகள், தாய்லாந்துனு பறந்துக்கிட்டே இருக்கோம். பாலிவுட் பொண்ணு சாயிஷா சைகல்தான் ஹீரோயின். டான்ஸ்ல பின்றாங்க. தமிழ்ல பேச தீவிரமா முயற்சி பண்றாங்க.’’

‘‘உங்க வீட்ல இருந்து இன்னொரு ஹீரோ ரெடியாகுறார் போல...’’
‘‘ஹா... ஹா... ‘மிருதன்’ இயக்குநரோட மறுபடியும் ‘டிக் டிக் டிக்’ பண்றேன். இந்தியாவில் தயாராகிற முதல் விண்வெளிப்படம். ‘ஸ்பேஸ்ல என்னப்பா கதை’னு உங்களுக்குத் தோணும்! இருக்கு. சின்னச் சின்ன ஆச்சரியங்களா ரசனையான விஷயங்கள் நிறைய இருக்கு. அதிக உழைப்பும் கிராஃபிக்ஸ் வொர்க்கும் தேவைப்படும். அதுலதான் நம்ம ஜூனியர் ஆரவ் நடிக்கறார்.

சாருக்கு ஆறு வயசுதான். படு ஷார்ப்! என்னோட டயலாக்ஸ், டான்ஸ் எல்லாம் அவருக்கு அத்துப்படி. திடீர்னு ‘ஜங்கிள் புக்2’ல நடிக்கப் போறேன்னு சொன்னார். பக்கத்துல உட்கார வச்சு, ‘உனக்கு நடிக்க விருப்பமா’ன்னு கேட்டேன். உடனே ‘ஆமாம்’னார். நடிக்க விட்டா, கேமரா பயம் இல்ல, பதற்றம் இல்ல. ஒருநாள் அவர் நடிக்கறதைப் பார்த்துட்டு என் டயலாக்கை மறந்துட்டேன். சார் ஞாபகப்படுத்துறார். நமக்கு போட்டியா வீட்லேயே வளர்க்கறோம் போலிருக்கு. இந்தப் படத்தோட சினிமா அவருக்கு கட். அப்புறம் படிப்புதான். சாருக்கு எதில இஷ்டங்கறதை பின்னாடி பார்த்துக்கலாம்.’’

‘‘அண்ணன் என்ன சொல்றார்..?’’
‘‘அண்ணனோட இணைய எப்பவும் நான் ரெடி. சிவகார்த்திகேயனோட இப்ப அவர் படம் போயிட்டிருக்கு. அதுக்குள்ள வேற வேற இயக்குநர்களோட வொர்க் பண்ணலாம்னு இருக்கேன்.’’

‘‘நடிகர் சங்கத்துல பொதுக்குழு கூட பரபரப்பாகுதே?’’
‘‘எங்க சங்கத்துல நாங்க எப்பவுமே ஆக்டிவ் தான். எந்த சத்தமுமே இல்லாமல் இருந்தா வேலை ஒண்ணும் நடக்கலைன்னு அர்த்தமாகிடுமே. சங்கம் ஆரோக்கியமா இருக்கு. கவலை வேண்டாம்.’’

‘‘என்ன திடீர்னு லண்டன் ட்ரிப்?’’
‘‘நானும் ஆர்த்தியும் முதன்முதல்ல சந்திச்ச நாள் எங்களுக்கு அவ்வளவு விசேஷம். திரும்பிப் பார்த்தால் கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு. எனக்கு நிக்க நேரமில்லை. உட்கார பொழுது இல்லை. அடுத்தடுத்து அவுட்டோர். அதனால திடீர்னு அவங்கள லண்டன் கூட்டிட்டு போய் சர்ப்ரைஸ் கொடுத்தேன். போன வருஷம் லண்டனுக்கு குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனோம். இந்த வருஷம் நாங்க தனியா லண்டனுக்கு ஃப்ளைட் ஏறிட்டோம். ஒரே கொண்டாட்டம்தான். சந்தோஷம்தான்...’’

- மை.பாரதிராஜா