ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 3

‘‘தமிழை தங்கள் பெருமைகளில் ஒன்றாகக் கருதக்கூடிய தமிழர்கள், தங்கள் காலை தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்...’’ எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படியொரு வாக்கியத்தை 2005ம் ஆண்டு ஒரு மேடையில் பேசப் போக, தமிழ்நாடே கொந்தளித்தது. அவர் பேசிய மேடை தமிழ் மேடை அல்ல, சமஸ்கிருத மேடை. சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்கவும் தமிழைத் தாழ்த்திப் பேசவும் அவர் துணிந்ததை ஒருவர் கூட ஆதரிக்கவில்லை.

சமஸ்கிருத சேவா சமிதியில் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில்தான் அப்படிப் பேசினார். அவர் அந்த மேடையில் நிறைய சர்ச்சைகளைக் கிளப்பினார். ‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும்’ என்றும், ‘அது இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்’ என்றும் பேசினார். ‘‘இதெல்லாம் நல்ல புத்தியுடைய ஒரு தமிழ் எழுத்தாளன் பேசக்கூடியதா?’’ என விவாதம் தொடங்கியது.

‘‘எப்போதும் ஜெயகாந்தன் இப்படித்தான்; அதிரடியாகப் பேசி தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்கிறார்’’ என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள். எழுத்தையும் இலக்கியத்தையும் தீவிரமாகக் கொண்ட என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஜெயகாந்தனைத் தெரியும். ஆனால், அவருடைய எழுத்து முறையையும் சிந்தனை வார்ப்புகளையும் விளங்கிக்கொள்ள முடியாது.

நாங்கள் இலக்கியம் பயிலத் தொடங்கிய காலத்தில் அவர் எழுதுவதை அறவே நிறுத்திவிட்டார். 2002ல் அவர் எழுதிய ‘ஹர ஹர சங்கரா’ என்னும் சிறுநூலைத் தவிர அவர் வேறு எதையுமே புதிதாகப் படைக்கவில்லை. இருந்தபோதிலும் வாழ்நாள் சாதனையாளராக மதிப்பிட்டு இந்தியாவின் ஒரே உயரிய இலக்கிய விருதான ‘ஞானபீடம்’ அவருக்கு வழங்கப்பட்டது. அதைக்கூட ஞானபீட விருதுக்காகவே அவர் சிறுநூலை எழுதியதாக சிலர் பழித்தார்கள்.

விருதுக்காக எழுதக்கூடிய எழுத்தாளராக அவர் என்றைக்குமே இருந்ததில்லை. ஞான பீட விருது குறித்து சொல்லும்போது, ‘‘ஞானத்தையே  பீடமாகக் கொண்ட எனக்கு பீடமெதற்கு? ஞானமென்பது கிரீடம். பீடமல்ல’’ என்றுதான் கருத்து தெரிவித்தார். ‘‘ஜெயகாந்தன் அப்படி என்னத்தை எழுதிக் கிழித்துவிட்டார்?’’ என ஆவேசப்படும் சிறு பத்திரிகைக்காரர்கள் எங்களை ரொம்பவே குழப்பிக்கொண்டிருந்தார்கள். ‘‘அவர் எழுதியதில் ஒன்றுகூட கதையம்சம் உடையது அல்ல.

அத்தனையும் வெற்றுக்கூச்சல். கலாபூர்வமான சங்கதிகள் அவர் படைப்புகளில் எங்கேயும் தென்படவில்லை’’ என்பதுவரை அவரைக் கட்டுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு எழுத்தாளன் தான் எழுதியது போதும் என்று நிறுத்திக் கொண்டதையும் ‘‘எழுத எதுவும் இல்லாமல் நிறுத்திக்கொண்டார்’’ என்றுதான் விமர்சித்தார்கள். ஜெயகாந்தன் எழுத்து அறிமுகமாவதற்கு முன்பே அவருடைய மேடைப் பேச்சுகள் என்னைக் கவர்ந்துவிட்டன.

பாரதி பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு, ‘பாரதியை இவரிடமிருந்தே கற்க வேண்டும்’ எனத் தோன்றிற்று. காத்திரமான பேச்சு அவருடையது. முகம் கோணாமல் கருத்துக்களை வைக்கவேண்டும் என்னும் அவை நாகரிகத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது அவர் பேச்சு முறை. எத்தனை மணி நேரம் பேசினாலும், அதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவருக்குப் பட்டதை தர்க்க நியாயங்களோடு விளக்க முற்படுவார்.

ஒருமுறை இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜனின் நூல் வெளியீட்டு விழா. திரைத்துறையின் முன்னணிப் பாடலாசிரியர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். அந்த விழாவில், ‘‘வரதராஜன் வைத்திருந்த ஹார்மோனியப் பெட்டியை இளையராஜா கல்லாப்பெட்டியாக்கிவிட்டார்’’ என்றிருக்கிறார். விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல், ‘‘இந்த மேடையில் அமர்ந்திருப்பவன் எவனும் கவிஞனில்லை. இவனெல்லாம் இளையராஜாவை நத்திப் பிழைக்கிறவன்’’ என்றிருக்கிறார். ‘‘மக்களுக்காகப் பாடுபவனே கவிஞன். மக்களை முன்னோக்கி அழைத்துப்போக எண்ணாமல் அவர்களை பின்னுக்கு இழுக்கிறவர்களை எப்படி கவிஞர்களாகக் கருதமுடியும்?’’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் மேடையில் அமர்ந்திருந்த பாடலாசிரியர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கியிருக்கிறார்கள்.

மறுநாள் தங்கள் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். ‘புதுச் செருப்பு கடிக்கும்’ என்ற ஜெயகாந்தனின் கதைத் தலைப்பை வைத்து ‘புதுச் செருப்பு அடிக்கும்’ என்று புலவர் புலமைப்பித்தன் எழுதிய பதிவு அவற்றில் முக்கியமானது. மொத்த அரங்கையும் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் சாமர்த்தியத்தை அவர் பேச்சு கொண்டிருக்கும். முதல் வாக்கியத்தில் இருந்தே ரசிக்கவைப்பார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உலக சினிமா’ நூல் வெளியீட்டில், ‘‘உலக சினிமா என்பது வேறு. சினிமா உலகம் என்பது வேறு’’ என்று ஆரம்பித்து, எது சினிமா என்று சொல்லி முடிக்கையில் அரங்கமே உறைந்திருந்தது. சினிமா, அரசியல், பத்திரிகை என்று சகல துறைகள் பற்றியும் அவரால் பேச முடிந்தது. இலக்கியத்தில் அரசியலையும் ஆன்மிகத்தையும் கலந்த அபூர்வ ரசவாதியாக அவரை வியந்துகொண்டே இருக்கலாம். ஜெயகாந்தனின் எழுத்துகளை வியப்பதில் உள்ள சிக்கல், அவர் அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிற கருத்துக்கள்.

எழுத்தில் உள்ளதைத்தான் பேச வேண்டுமென்றோ, பேசிய கருத்தை பின்வாங்கிக்கொள்ள வேண்டுமென்றோ அவர் நினைப்பதில்லை. அவர் மேடையில் பேசி விட்டுப் போனபிறகு அவரைப் பற்றி மட்டுமே பேசும்படியான நிலையை ஏற்படுத்திவிடுவார். இதை அவர் திட்டமிடுவதில்லை. இயல்பாக அவருடைய சிந்தனைகள் அப்படித்தான் அமையும். ‘தத்துவார்த்த பலத்தில்தான் ஒரு எழுத்தாளன் நெடுநாளைக்கு ஜீவித்திருக்க முடியும்’ என்பார்கள்.

ஜெயகாந்தன் என்கிற ஜெ.கே.வுக்கோ அந்தத் தத்துவத்தையே மறு விசாரணைக்கு உட்படுத்தும் ஆற்றலிருந்தது. மறைத்துப் பேசவோ, மேலோட்டமாக ஒன்றைப் புகழவோ அவர் விரும்பியதில்லை. கதைகளின் வாயிலாகவும் அவர் மனித சமூகத்தின் மீது தனக்குள்ள விமர்சனங்களையே முன்வைத்தார். அதனால்தான் அவர் கதாபாத்திரங்கள் லாரி டிரைவராய் இருந்தாலும், ரிக்‌ஷாவாலாவாய் இருந்தாலும் அவரைப் போலவே பேசின. கம்பனில், பாரதியில், புதுமைப்பித்தனிலிருந்து அவர் தன்னை நிறுவிக்கொண்டவர்.

அவர் காலத்தில் அவரைப் போல எந்த எழுத்தாளரும் கொண்டாடப்படவில்லை. மற்றவரைவிட அவருக்கு ஒரு ரூபாயாவது அதிக சன்மானம் தர விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளே விரும்பின. நிறுத்தி நிதானமாக, கிளிப் பிள்ளைக்குச் சொல்வதைப் போலச் சொல்லுவார். ‘இப்படியும் இருக்கிறதுதானே... இதை ஏன் பார்க்கவில்லை’ என்பார். ‘ஒருகாலத்தில் சொல்லிய கருத்தை மாற்றி தற்போது வேறு மாதிரி பேசுகிறீர்களே?’ என்றால் ‘‘அதுதான் வளர்ச்சி’’ என்பார்.

‘‘சொன்னதையே சொல்ல வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது?’’ என்பார். அதன் காரணமாகவே ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர், அதன்பின் அதற்கு நேர்முரணான இந்துத்துவாவைக் கையிலெடுத்தார். அவரை விமர்சிப்பவர்களும் அவரைப் பொறுத்துக்கொள்ளவே செய்தார்கள்.  அவர் பேச்சைக் கேட்டவர்கள், அவர் படைப்புகளை வாசித்தவர்கள், ஒருமுறையாவது அவரை நேரில் சந்தித்துப் பேச விரும்புவார்கள்.

எனக்கு ஜெ.கே. என்றால் அப்படியொரு ஆசை. அவர் படைப்புகளை வாசிக்கையில் மிகுந்தெழுந்த பிரியத்தின் நீளத்தை அளவிட முடியாது. அவர் மேடையில் நின்று பேசும் கம்பீரம், முறுக்கிய மீசை, கேள்விகளைக் கேட்டு அவரே பதிலளிக்கும் முறை என நிறைய சொல்லலாம். அப்படியாகப்பட்ட ஜெ.கே.வை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது நான் ‘கணையாழி’யில் உதவி ஆசிரியர். ஜெ.கே.வை அட்டைப்படமாகக் கொண்டு ஒரு சிறப்பிதழ் தயாரிக்கலாம் என ஆசிரியர் குழுவில் முடிவெடுத்தார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் தரப்பட்டது. ஓவியர் ஆதிமூலம் அட்டைப்படம் வரைவதாக ஒப்புக்கொண்டார். சிறப்பிதழ் என்பதால் அவ்விதழில் ஜெ.கே.வின் நேர்காணல் அவசியம் இடம்பெற வேண்டும் என்று ஆசிரியர் ம.ரா. பிரியப்பட்டார்.

‘‘கேள்விகளை நீங்களே தயார் செய்யுங்கள்’’ என்றும் சொல்லியிருந்தார். நெடுநாள் ஆசை நிறைவேறப் போகிறது என்னும் ஆவலில் பதினைந்து வருடங்களாக ஜெ.கே.விடம் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் தொகுத்துக்கொண்டேன். ‘அவரை எனக்கு அறிமுகமில்லையே’ என்ற பொழுது தான் ‘‘ராஜ்கண்ணனைத் தொடர்புகொள்ளுங்கள்’’ என்று ம.ரா. அறிவுறுத்தினார்.

அந்த ராஜ்கண்ணன்,  ஜெ.கே.வை நிரம்பப் படித்தவர். பல ஆண்டுகளாக ஜெ.கே.யுடன் நெருங்கிப் பழகியவர். ஜெ.கே.யின் படைப்புகளை வரிசைக்கிரமமாகச் சொல்லவும் அதன் நுட்பங்களை உணர்த்தவும் கூடியவர். அவரைத் தொடர்பு கொண்டதும் ‘‘நிச்சயமாக செய்யலாம்’’ என்றார். கேள்விகளை அவரிடமும் ஒருதரம் வாசிக்கக் கொடுத்தேன். அவரும் வாசித்துவிட்டு ‘‘கேட்கவேண்டிய கேள்விகள்தான்’’ என்றார்.

அதோடு ‘ஜெ.கே. இந்தக் கேள்வியை இப்படி அணுகுவார்’, ‘அந்தக் கேள்விக்கு அப்படி பதில் சொல்வார்’ என யூகித்தார். கடைசியில் பார்த்தால் ராஜ்கண்ணன் சொன்னது போலவேதான் ஜெ.கே.வின் பதில்கள் அமைந்திருந்தன. ஒருவகையில் ஜெயகாந்தனின் வெற்றியாக அதைப் பார்க்கலாம். தன்னை வாசிப்பவர்களையும் தன் தரத்திற்கு மேம்படுத்திவிடக் கூடிய எழுத்து அவருடையது.

ஒரு மதியப் பொழுதில் ராஜ்கண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெ.கே. கேள்விகளை அனுப்பச் சொன்னதாகவும், அடுத்த வார இறுதிக்குள் பதில்களைத் தருவதாகச் சொல்லியதாகவும் தகவலைப் பகிர்ந்துகொண்டார். எனக்கோ கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ‘கேள்விகளில் எழுத்துப்பிழை வந்துவிடக் கூடாது’ என்பதற்காக ஒருமுறைக்கு பத்து முறை சரி பார்த்து அனுப்பி வைத்தேன்.

இடையில், ராஜ்கண்ணனின் இல்ல விழாவுக்கு ஜெ.கே. வந்திருந்தார். நானும் போயிருந்தேன். பரஸ்பர அறிமுகத்தில், ‘‘இவர்தான் கேள்விகளைத் தயாரித்த யுகபாரதி’’ எனவும் ராஜ்கண்ணன் சொல்லத் தவறவில்லை. ‘‘ஓ, அப்படியா?’’ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் நமஸ்கரித்துக் கொண்டேன். அவரைப் பற்றி எழுதுவதால் ‘வணக்கம்’ கூட ‘நமஸ்காரம்’ என்றே வருகிறது.

சொன்னது போலவே சொன்ன தேதியில் பதில்கள் தயாராயிருப்பதாய் ஜெ.கே. வீட்டிலிருந்து தொலைபேசி வந்தது. வழக்கம் போல அலுவலகப் பையனை அனுப்பாமல் நானே போனேன். ஜெ.கே.வை மீண்டும் ஒருமுறை நேரில் தரிசிக்கலாம் என்னும் அற்ப ஆசைதான்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்