அந்த மரங்களுக்கு என்ன மாற்று?



வதைத்துக் கடந்திருக்கிறது ‘வர்தா’ புயல். முறிந்து கிடக்கும் மரங்களுக்கும் நசுங்கிக் கிடக்கும் கார்களுக்கும் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் முதிர்ச்சியற்ற மனிதர்கள், கூரையாக இருந்த கீற்றுகளையும் ஓடுகளையும் இழந்து வீதியில் தவித்த எளிய மனிதர்கள், சீறும் கடலை ஆபத்து அறியாமல் சுற்றுலா போல பார்க்கச் சென்ற இளைஞர்கள், மரங்கள் பேயாட்டம் போட்டதால் ஒதுங்க இடம் தேடித் தவித்த பறவைகள் என எல்லாவற்றையும் கடந்து சென்றிருக்கிறது புயல்.

‘இந்தப் புயலால் 7000 கோடி ரூபாய் பாதிப்பு’ என இந்திய தொழிற்கூட்டமைப்பு மதிப்பிட்டிருக்கிறது. தனிநபர்களின் இழப்புகள் எப்போதும் போல எந்தக் கணக்கிலும் வராது! ‘ஒரு புயல் என்பது எப்படி கரையைக் கடக்கும், அதன் முன்பகுதி என்ன, கண் பகுதி கடக்கும்போது ஏற்படும் அமைதி, அதன்பின் வரும் பின்பகுதி’ என புயலின் அறிவியல் கற்றோம். வேறு என்ன கற்றோம்?

தமிழகத்தில் கடலூருக்கும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையை கடந்த 50 ஆண்டுகளில் 17 புயல்கள் கடந்துள்ளன. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்தான் இந்த எல்லா நிகழ்வுகளும். கடந்த 94ம் ஆண்டு சென்னையைப் புரட்டிய புயலின் வேகம், மணிக்கு 65 கிலோமீட்டர். அதைவிட பல மடங்கு வீரியமானது வர்தா. மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகக் காற்று சென்னையை சூறையாடியது.

இயல்பாகவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அதிகம் உருவாகி புயலாக மாறும் பகுதி நம் கடற்கரை. புவி வெப்பமயமாதலால் மாறும் பருவநிலைகள், இதன் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், இயற்கைச் சீற்றங்களுக்கு ஏற்றது போல நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். அழகுக்காக வெளிப்புறச் சுவரில் கண்ணாடி பதித்த வானுயர் கட்டிடங்களிலிருந்து அவை பெயர்த்துக்கொண்டு விழுந்தன;

பல நிறுவனங்களில் நவீனமாக வைத்திருந்த வினைல் பெயர்ப் பலகைகள் அத்தனையும், அடித்த காற்றில் குப்பைகளாயின. ஒருவேளை விடுமுறை விடப்படாமல் இருந்து மக்கள் நடமாட்டம் இருந்திருந்தால், இவை எத்தகைய ஆபத்துகளை விளைவித்திருக்கும் என்ற யூகமே திகிலூட்டுகிறது. ஒரு கடற்கரை நகரில் எப்படிப்பட்ட வசதிகள், ஆடம்பரங்கள் தேவை என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது வர்தா.

சமீப நாட்களில் சென்னை நகரில் கார்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. பார்க்கிங் வசதி இல்லாவிட்டாலும், காரை சாலையோரங்களில் நிறுத்தி விடுகிறார்கள். இரவு நேரங்களில் சென்னையின் எல்லா சாலைகளின் ஓரத்திலும் வரிசையாக கார்களைப் பார்க்க முடியும். கடந்த ஆண்டு வெள்ளத்தில் அதிகம் சிக்கியவை இப்படிப்பட்ட கார்கள்தான். ஆனாலும் கார்களின் பெருக்கம் குறையவில்லை.

வர்தாவால் விழுந்த மரங்கள், இந்த சாலையோரக் கார்களையே பதம் பார்த்தன. கடந்த மழையும் இந்தப் புயலும் இவர்களின் கண்களைத் திறந்து, சாலைகளை எல்லோரும் பயன்படுத்த வழிகாட்டினால் சரி! கடந்த 94ம் ஆண்டு சென்னையை உலுக்கிய புயலில் சுமார் 1500 மரங்கள் விழுந்தன. இம்முறை அதைவிட பல மடங்கு இழப்பு.

நூறாண்டுகளைத் தாண்டி வளர்ந்த மரங்களும் வேரோடு சாய்ந்திருக்கின்றன. அடையாறு, மயிலாப்பூர், அசோக் நகர், அண்ணா நகர் என பல பகுதிகளில் நிழற்சாலைகளாகக் காட்சி தந்த இடங்கள் இப்போது வெட்டவெளிகளாகி விட்டன. கடந்த 94ம் ஆண்டு புயலில் இழந்த மரங்களுக்கே நாம் திரும்பவும் மரம் நடவில்லை. இம்முறையும் அதைச் செய்யாதுவிட்டால் ஆபத்துதான். வழக்கமாகவே தகிக்கும் நகரத்துக் கோடை இனிவரும் ஆண்டுகளில் இன்னும் மோசமாக அனல் வீசக்கூடும்.

பொதுவாகவே சென்னையில் புதிதாக நட்டு வளர்க்கும் மரங்கள் வளரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பழைய மரங்களின் பராமரிப்பும் மோசம். மரங்களின் வேர் அருகேகூட மண் இல்லாதபடி சிறைப்படுத்தி சிமென்ட் பிளாட்பாரங்களை அமைக்கிறது மாநகராட்சி. ‘தங்கள் கடை வாடிக்கையாளர் பார்வையில் தெரியாதபடி மறைக்கிறது’ என மரங்களை வேரறுக்கும் கடைக்காரர்களும் இங்கு அதிகம்.

‘மரங்களில் இருக்கும் பறவைகள் வாகனங்களின்மீது எச்சமிடுகின்றன’ என வெறுக்கும் நகரத்துவாசிகளும் இங்கு உண்டு என்பதை எளிய கிராமத்து விவசாயிகள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்த நகரம் இழக்கும் மரங்களை ஈடு செய்ய பசுமை ஆர்வலர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை இவர்கள்தான் கெடுக்கிறார்கள்.

மரங்கள் நிழலுக்கு மட்டுமில்லை, காற்றை சுத்தம் செய்யவும் அவசியம்’ என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். டெல்லி மக்கள் காற்று மாசு காரணமாக அடிக்கடி வீடுகளுக்குள் அடைந்துகொள்வதை செய்திகளில் படிக்கிறோம். அப்படி ஒரு நிலைமை சென்னையில் வராமல் இருக்க மரங்களே பிரதான காரணம். ‘நாம் நன்றாக இருக்க மரங்கள் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற சுயநலத்துடனாவது மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க வேண்டும்.

இதில் முக்கியமான விஷயம், என்ன மரங்களை நடுவது என்கிற தேர்வு. பொதுவாக இந்த வர்தா புயலில் அதிகம் விழுந்தவை, காட்டுவாகை, குல்மொஹர், மஞ்சள் கொன்றை மரங்கள்தான். இவை நம் நாட்டு மரங்கள் அல்ல. மடகாஸ்கர், அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்த வந்தேறிகள். சீக்கிரம் வளர்ந்து கிளை பரப்பி நிழல் தரும் என்பதைத் தவிர இவற்றால் பலனில்லை. இங்கே வீசும் காற்றைத் தாங்குகிற அளவுக்கு மண்ணில் ஆழமாக வேர் பரப்பும் திறன் இவற்றுக்கு இல்லை.

அதனால்தான் லேசாகக் காற்று அடித்தாலே மரம் விழுந்து போக்குவரத்து தடைபடுகிற செய்திகளை சென்னையில் அடிக்கடி படிக்கிறோம். வேம்பு, மகிழம், பூவரசு, புங்க மரம், ஆல மரம், அரச மரம், புன்னை, இலுப்பை, மருது, நாவல், ஆச்சா, காஞ்சி போன்ற மரங்களே நம் மண்ணுக்கு ஏற்றவை. பருவமழைக் காலத்தில் கிழக்குக் கரையிலிருந்து வரும் காற்றைத் தாங்கும்விதமாக கடற்கரைப் பகுதி நகரங்களிலும் கிராமங்களிலும் இவை வளர்கின்றன. ஆழ வேர் பரப்பி தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்கின்றன. இப்படிப்பட்ட மரங்களை நட்டு, முறையாக வளர்த்துப் பராமரிப்பதே, வர்தா புயலுக்கு தொலைநோக்கில் செய்ய வேண்டிய நிவாரணப் பணி!

- அகஸ்டஸ்