வேலைக்காரி



வீட்டுக்குள் நுழைந்த கணவன் கேசவனிடம் பரபரப்போடு பேசினாள் தங்கம். ‘‘ஏங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம எதிர் வீட்ல இருக்குற கண்ணனுக்கு ஏகப்பட்ட கடனாம்... பணம் கேட்டு தினமும் ஏகப்பட்ட பேர் வீட்டுக்கு வர்றாங்களாம்! அப்புறம் இன்னொரு விஷயம்ங்க... காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த நம்ம பக்கத்து வீட்டு பங்கஜத்தோட பொண்ணு ஒரு வாரமா காணோமாம்! யார் கூடவோ ஓடிப் போயிட்டா போலிருக்கு!’’ என்றாள்.

‘‘இதெல்லாம் யார் உனக்கு சொன்னது தங்கம்?’’ ‘‘நம்ம வீட்டு வேலைக்காரி வேலம்மா அவங்க வீட்டுலேயும் வேலை பார்க்குறா. அவதான் சொன்னாங்க!’’ கேசவன் எதுவும் பேசவில்லை. தங்கத்துக்கு ஏமாற்றம்! மறுநாள். கேசவன் நிதானமாக மனைவியைக் கூப்பிட்டான். ‘‘தங்கம்! நம்ம எதிர் வீட்டு கண்ணனுக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ். அது சம்பந்தமா நிறைய பேர் பணம் கொடுக்க, வாங்க அவர்கிட்டே வர்றாங்களே தவிர, அவர் ஒண்ணும் கடனாளி கிடையாதாம்! அப்புறம் பங்கஜத்தோட பொண்ணு ஓடிப் போகல.

பி.டெக் படிக்குற அவ, ப்ராஜெக்ட் விஷயமா கூட படிக்கிற பசங்களோட வெளியூர் போயிருக்கா. காலேஜ்லயே அனுப்பி வச்சிருக்காங்க!’’ ‘‘அப்படீங்களா?’’ தங்கம் வாயைப் பிளந்தாள். ‘‘அப்புறம் தங்கம், அடுத்தவங்களைப் பத்தி இப்படி தப்புத் தப்பா நம்மகிட்டே சொல்றவ, நம்மைப் பத்தியும்தானே தப்புத் தப்பா அடுத்தவங்ககிட்ேட சொல்லுவா! இப்படிப்பட்ட வேலைக்காரி நமக்கு வேணுமா?’’ ‘‘வேண்டாம்ங்க!’’
                        

-ஜெயா மணாளன்