நியூஸ் வே



* ‘டைம்’ இதழின் அட்டையை அலங்கரிக்கும் ‘பர்சன் ஆஃப் தி இயர்’ கௌரவத்துக்கான ஆன்லைன் வாக்கெடுப்பில் நரேந்திர மோடி வென்றார். அமெரிக்க அதிபர் ஒபாமா, புதிய அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரைத் தாண்டி மோடி வென்றார். ஆனாலும் ‘டைம்’ இதழின் ஆசிரியர் குழு கூடி, டொனால்டு டிரம்புக்கு இந்த கௌரவத்தை அளித்திருக்கிறது. இணையத்தில் இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

* ‘‘மத்திய பி.ஜே.பி. அரசு, மாநில அரசுகளின் அதிகாரங்களை மதிப்பதில்லை. மாநில அரசின் துறைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் நேரடியாகப் பேசுகிறார்கள். எங்கள் தலைமைச் செயலாளருடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் நடத்துகிறார் பிரதமர். அப்புறம் நாங்கள் எதற்கு இருக்கிறோம்?’’ என காட்டமாகக் கேட்டிருக்கிறார் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி.

* ஒரு ஆண்டில் மிகவும் அதிக பிரபலமான ட்வீட்டை ‘கோல்டன் ட்வீட்’ என அழைப்பதை ட்விட்டர் நிறுவனம் வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த ஆண்டின் இந்தியாவுக்கான கோல்டன் ட்வீட், விராட் கோஹ்லியுடையது! அவரது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவை சமூக வலைத்தளங்களில் கேலி செய்ததை கண்டித்து அவர் எழுதிய உணர்ச்சிகரமான ட்வீட், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக் பெற்றது. 39 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்திருந்தனர்.

* ‘மாசற்ற நர்மதை நதியை உருவாக்குவோம்’ என்ற நோக்கத்தோடு ஐந்து மாத யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான். நர்மதா உருவாகும் அமர்கண்டக் பகுதியில் ஆரம்பித்து, 3 ஆயிரத்து 500 கி.மீ தூரத்தை கடக்க இருக்கிறார்கள். நதியின் இருபுறமும் பழ மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டு இருக்கிறார்கள். வாரம் ஒருமுறை யாத்திரையில் பங்கெடுக்கிறார் முதல்வர்.

* இந்திய ராணுவத்தின் தளபதி, விமானப் படைத் தளபதி, ‘ரா’ உளவு அமைப்பின் தலைவர், இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்பின் இயக்குனர் என நாட்டின் மிக முக்கியமான அமைப்புகளின்  தலைமைப் பதவியில் இருப்பவர்கள் நால்வருமே இந்த டிசம்பர் கடைசியில் ஓய்வு பெறுகிறார்கள்.

வழக்கமாக இந்தப் பதவிகளுக்கு அடுத்து வருபவர்கள் பெயர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, அதிகார மாறுதலுக்கு அதிகாரிகள் தயாராக அவகாசம் அளிக்கப்படும். ஆனால் பிரதமர் மோடி எப்போதுமே கடைசி நிமிடத்தில் சர்ப்ரைஸ் அறிவிப்புகளைச் செய்வது வழக்கம் என்பதால், அவரது முடிவுக்காக ஃபைல் காத்திருக்கிறது.

* ‘‘ஓய்வு பெற்றபிறகும் நான் கிரிக்கெட் பயிற்சியை நிறுத்தவில்லை. சில கண்காட்சிப் போட்டிகளில் ஆடியிருக்கிறேன். ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து அமெரிக்காவில் நான் ஆடிய மூன்று போட்டிகளுக்கும் நல்ல வரவேற்பு. இதைத் தொடர இருக்கிறேன்’’ என்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

* மேற்கு இந்தியத் தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், ‘‘விராட் கோஹ்லி மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குழந்தைக்குக்கூட தெரியும். இப்போது அவரின் அசத்தலான ஆட்டம் ஒன்றும் ஆச்சர்யமில்லை. இனிமேல்தான் இருக்கிறது அவரது வாண வேடிக்கை. யாருமே தொட முடியாத உச்சத்தை அவர் அடைவார்’’ என்று விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளியுள்ளார். கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களில் மூன்று இரட்டை சதங்களை விளாசியுள்ளார் கோஹ்லி. ‘தொடர்ந்து ஐந்து டெஸ்ட் கிரிக்கெட் சீரிஸ்களை கைப்பற்றிய முதல் இந்திய  கேப்டன்’ என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அவர்.

* ஷாருக் கான் நேரில் வந்து உறுதியளித்த பிறகே, அவரின் ‘ரயீஸ்’ திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறார், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே! இந்தப் படத்தில் பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் முக்கிய ரோலில் நடிக்கிறார். ‘படத்தின் புரொமோஷனுக்கு மஹிரா கான் இந்தியா வந்தால் போராட்டம் நடத்துவோம்’ என ராஜ் தாக்கரே
அறிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் ஷாருக்கின் வெள்ளைக் கொடிச் சந்திப்பு. சமீபத்தில், இயக்குநர் கரன் ஜோகரின் ‘ஏ தில் ைஹ முஸ்கில்’ படத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் நடித்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது படத்தின் தயாரிப்பாளர்கள் ராணுவ நல நிதிக்கு ஐந்து கோடி ரூபாய் தர ஒப்புக்கொண்டபிறகே  ராஜ் தாக்கரே சமாதானமானார்.

* உத்தரப் பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸ் பிரசாரம் அப்படியே ஹால்ட் அடித்து நிற்கிறது. ராகுல் காந்தியும் பிரியங்காவும் நடத்துவதாக இருந்த பேரணிகளின் தேதிகளை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்துவிட்டார்கள். ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு பிரசார ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகள் தடுமாறுவதுதான் காரணம்.

* ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்கைகெவிச்சின் ஒரே பொழுதுபோக்கு ‘ஸ்கூபா டைவிங்’ என்கிற ஆழ்கடல் நீச்சல் மட்டும்தான்.  உயிரைப் பணயம் வைத்து விளையாடும் இதில் மாற்றுத் திறனாளிகளும் பங்குபெற வேண்டும் என்பதற்காக  பிரத்யேகமாக ‘ஸ்கூபா வீல் சேர்’ ஒன்றை வடிவமைத்திருக்கிறார் இவர். ‘‘உலகில் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்கூபா டைவிங் செய்ய ஆசையிருக்கும்.

அவர்களின் ஆசையை நிறைவேற்றவே இதைத் தயார் செய்தேன்’’ என்கிற ஸ்கைகெவிச் உடலால் மட்டுமே ஊனமுற்றவர். ‘உலகிலேயே மலிவு விலையில் கிடைக்கின்ற முதல் ஸ்கூபா வீல் சேரை வடிவமைத்தவர்’  என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதன் விலை ஒன்றும் அதிகமில்லை. ஜஸ்ட், ரூ.73,000/-

* மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் கரன்சிக்கு குட்பை சொல்லியாச்சு. ‘ஆன்லைன் வழியாக பணமில்லா பரிவர்த்தனை செய்யுங்கள். இனிமேல் மொபைல் போன்தான் உங்களின் வங்கி’ என்று பணமில்லா வர்த்தகத்திற்கு அரசு அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மத்திய அரசு துறைகளும், அது சார்ந்த அமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. ‘மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் வருகிற ஜனவரி மாதம் முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே பள்ளிக்கட்டணம் செலுத்த முடியும்’ என்று சி.பி.எஸ்.இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அறிவித்துள்ளார். பெற்றோர்களே! ஆன்லைனில் ஸ்கூல் ஃபீஸ் கட்ட இப்போதே தயாராக இருங்கள்.