குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஒரு எஞ்சினியர்  சொன்ன இடத்துல எல்லாம் செங்கல்லை நட்ட கொத்தனார், கொஞ்ச நாள் கழிச்சு தனியா எட்டடுக்கு பில்டிங் கட்டுறதில்லையா? இல்ல... கொத்தனாரு சொல்ற இடத்துல தட்டுன சித்தாளு,  மேஸ்திரியா புரமோஷனாகி மச்சு வீடு கட்டுறதில்லையா? ஒரு மெக்கானிக் கிட்ட அஞ்சு வருஷமா டயருக்கு பஞ்சர் ஒட்டுன   பையன், கியரை மாத்தி தனியா ஒரு டூவீலர் ஆஸ்பத்திரிக்கு உரிமையாளர் ஆகறதில்லையா?

ஒரு கையை வட துருவத்துலயும் இன்னொரு கையை தென் துருவத்துலயும்  இழுத்து 180 டிகிரி வளைவுல 90 டிகிரி சூட்டுல டீ போடுற மாஸ்டர், கொஞ்ச  நாளுல பைபாஸ் பக்கமா கடை போட்டு தனியா ஈ ஓட்டுறதில்லையா? ஒரு கார்பென்டரோட கட்டைய தேய்ச்சுக்கிட்டு இருந்தவங்க, அளவெடுக்கிற பென்சிலை அல்லக்காதுல வச்சுக்கிட்டு அலமாரி செய்யறதில்லையா? டெய்லர் கடையில காஜா போட்ட சின்னப் பையன், மீசை வந்தப்புறம் தனியா கடை போட்டு கைல கத்திரி பிடிக்க ஆசைப்படுறதில்லையா? லாரி கிளீனரா  ஹைவேல ஹாரன் அமுத்தி போனவங்க, ஏழு வருஷத்துல டிரைவராகி ஒன்வேல ஆக்சிலேட்டரை அமுக்கிறதில்லையா?
 
அதே மாதிரி ஒரு தலைவருக்கு  சட்டை அயர்ன் பண்ணிக் கொடுத்து, மொபைலுக்கு ரீசார்ஜ் செஞ்சு விட்டு, தலைவலி தைலம் தேய்ச்சு விட்டு, தவிக்கிறப்ப தண்ணி பாட்டில் எடுத்துக் கொடுத்து, சமையல் செஞ்சு, சாப்பாடு பரிமாறி, ஹெலிகாப்டர்ல ஏத்தி விட்டு, ஏரோப்ளேன்ல இறக்கிவிட்டு,  பத்து இருபது வருஷமா  கட்சித் தலைவர் கூடவே இருக்கிறவங்க அதே கட்சிக்குத் தலை வராகக் கூடாதா?

பேஸ்ட்ல உப்பு இருக்கோ இல்லையோ, இதுல தப்பு இல்லங்கிறேன். இப்பல்லாம் தலைவராக கூடுதல் தகுதியெல்லாம் தேவையில்லைய்யா! தலைவரோட கூட இருக்கிற தகுதி ஒண்ணே போதாதா?  அதே மாதிரி, ‘ஒரு டாக்டரோட அஞ்சு வருஷத்துக்கு மேல இஞ்செக் ஷன் போட்டுக்கிட்டிருந்த நர்ஸுங்க எந்த அப்ஜக்‌ஷனும் இல்லாம டாக்டராகிக்கலாம். ஒரு கலெக்டருக்கு பத்து வருஷமா காரோட்டுனவரு கலெக்டராகிக்கலாம்’னு சொல்லிட்டா மொத்த மாநிலமும் கெத்து மாநிலமாயிடும்.

கடந்த ஒரு வாரமா வர்ற நியூஸை எல்லாம் பார்க்கிறப்ப ‘வெந்த புண்ல வேலைப் பாய்ச்சி, அதுக்கு கத்த திறந்த வாயில ஈயத்தைக் காய்ச்சி ஊத்துன மாதிரி’ இருக்கு. ‘போர்த்தி வச்ச படுக்கைக்குள்ள இருந்து புது ரெண்டாயிரம் கட்டுகள் அம்பது கோடி ரூபாய்க்கு பிடிபட்டது’ங்கிறாங்க, ‘மூடி வச்ச பாத்ரூமுக்குள்ள இருந்து புது ஐந்நூறு ரூபாய் கட்டுகளா அறுபது கோடி ரூபாய்க்கு பிடிபட்டது’ங்கிறாங்க. அடேய்... பாத்ரூமெல்லாம் அவசரத்துக்குப் பயன்படுத்தறதுடா. இப்படி பணத்தை அடுக்கிற அலமாரியாவா பயன்படுத்துவீங்க?

‘பெங்களூருல பல லட்சம் புது நோட்டு பிடிபட்டது’ங்கிறாங்க, ‘புனேல பல லட்சம் புது நோட்டு பிடிபட்டது’ங்கிறாங்க. ‘கருப்புப் பணத்தை ஒழிப்போம்’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்ட தேசபக்தர் ஒருத்தர்கிட்டயே சேலத்துல பல லட்சம் பிடிச்சிருக்காங்க. சேகர் ரெட்டின்னு ஒரு பால் ரொட்டிகிட்ட எடுத்த பணமெல்லாம் நோட்டடிக்கிற நாசிக்ல இருந்து நேரா வந்த மாதிரி ‘பளிச்’னு இருக்கு.

‘கள்ளநோட்டை ஒழிக்கிறோம், கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம்’னு அரசாங்கம் சொல்லிட்டு லட்சாதிபதி வீட்டு பெட்ரூம்ல இருந்து  கோடீஸ்வரன் வீட்டு பாத்ரூம் வரைக்கும் பணப் புழக்கத்தை விட்டுட்டாங்க. ஆக, இந்தியாவுல புது ரெண்டாயிரமும், ஐந்நூறும் எல்லா இதுலயும் கிடைக்குது, வங்கி ஏ.டி.எம்களைத் தவிர!

பரபரப்பு செய்திகளைத் தருவது வேறு, செய்திகளைப் பரபரப்பாக்கித் தருவது வேறு. ஒரு துக்க செய்தியைக்கூட ‘முதலில் சொன்னது நாங்க; முந்தித் தருவது நாங்க’ன்னு டிஆர்பிக்கு அடிச்சுக்கிறதெல்லாம் ரொம்பவே ஓவர். அதுவும் இந்த ‘வர்தா’ புயல் வந்தப்பவெல்லாம் மக்கள் மனதில் இருந்த பயத்தைக் கரைப்பதை விட்டுட்டு மக்கள் வயிற்றில் புளியைக் கரைச்சுக்கிட்டு இருந்தாங்க பல செய்தி சேனல்கள்.
 
‘பல பேருந்துகள் கவிழ்ந்து கிடக்கிறதென  பறந்து கொண்டிருக்கும் பைக்கிலிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்’னு ஒரு சேனல்ல சொன்னா, இன்னொரு சேனல்ல ‘புயலால் மரம் கீழே விழுந்ததை காட்டணுமே’ன்னு பத்து பேரு சேர்ந்து பத்திரமா நிக்கிற ஒரு புளிய மரத்தை ஆட்டிக்கிட்டு இருக்காங்க.

‘புயலடிச்சு பொழைச்சவன் இருக்கான். ஆனா, ஃபுல்லடிக்காம பொழைச்சவனில்லை’ என்பதை மெய்யாக்கும் விதத்தில் அவனவன் பீர் பாட்டிலை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்கான், இவங்க அப்பதான் அவன் வேட்டியை புடிச்சு நிறுத்தி மூஞ்சில மைக்கை நீட்டி கருத்து கேட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னொரு சேனல்ல ‘கரன்ட் கம்பம் விழப் போகுது, இதோ விழுந்துக்கிட்டு இருக்கு, இந்தா விழுந்திடுச்சு’ன்னு அதே கரன்ட் கம்பத்து மேல ஏறிக்கிட்டே லைவ் கமெண்ட்ரி கொடுத்துக்கிட்டு இருக்காங்க.

இன்னொரு குரூப்பு, பக்கத்து வீட்டு  மாடில இருந்து விழுந்த சின்டெக்ஸ் டேங்கை, ‘பல்லாவரத்துல இருந்து பறந்து வந்து விழுந்துச்சு’ன்னு காட்டிக்கிட்டு இருக்காங்க. மக்கள் செய்தி சேனல்களிடம் விரும்புவது, அவங்க பதற்றப்படாத வகையில செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கணும்னுதான். ஆனா ‘அடுத்தவர்களை விட முன்பே செய்திகளைத் தரணும்’னு செய்தி சேனல்கள்தான் பதற்றமாகிடுறாங்க.

ஓவியங்கள்: அரஸ்