ஆஸ்திரேலியாவில் நான்கு பெண்கள்!



‘‘சுஹாசினி, ராதிகா, ஊர்வசி, குஷ்பு  மாதிரி நாலு சீனியர் நடிகைகளை வைச்சுப் படம் பண்றது சாதாரண வேலையில்லை. எல்லோரும் இந்த காம்பினேஷனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. நிஜம்தானான்னு கேட்காதவங்க பாக்கியில்லை. இது விளையாட்டில்லை. ‘அவங்களுக்கு சீன் நிறைய இருக்கு, எனக்கு இல்லை’ன்னு யாருக்கும் வருத்தம் வந்திடக்கூடாது. கத்தி மேலே நடக்கிற சமாசாரம். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக முடிஞ்சிருக்கு. ‘ஓ! அந்த நாட்கள்’னு பெயர் வைச்சதுகூட ரொம்பப் பொருத்தம். அந்த 25 நாட்களும் குடும்பம் மாதிரி பழகிய அழகிய நாட்கள்...’’ - தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன்.

‘‘அனேகமாக யாரும் இங்கே யோசிக்காத ஸ்கிரிப்ட் இது...’’
‘‘எனக்கே இந்த எண்ணம் திடீரென வந்ததுதான். என் மனைவியோடு காரில் டிரைவ் போயிட்டு இருந்தேன். யதேச்சையாக பேச்சு தமிழ் சினிமா பக்கம் திரும்பிடுச்சு. எப்பவும் ஹீரோயின், ஹீரோ பின்னாலே திரிய வேண்டிய நிலைமையையும், ஒரு நாள் திடீரென ஹீரோ அந்தப் பெண்ணை குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தும்போது குடும்பம் முகம் திருப்பிக்கிறதையும், அப்புறம் தாடி வளர்க்கும் ஹீரோவையும் பற்றி நகைப்போடு பேசிக்கொண்டேயிருந்தோம்.

அப்புறம், ‘முழுக்க பெண்களையே முன்னுதாரணமாக வைச்சு, அவங்க வாழ்க்கை பிரச்னை பத்தி படம் போனா எப்படியிருக்கும்’னு அடுத்த கட்டம் பேசினோம். ‘நீங்க இந்த முயற்சியில் இறங்கினால் நன்றாக இருக்கும்’ என்றார் என் மனைவி. உடனே இந்த ஒன் லைனை முதலில் சுஹாசினிகிட்ட ெசான்ேனன். ‘ரொம்ப நல்லாயிருக்கு. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. நிச்சயம் அது சுவாரசியமா இருக்கும்’னு சொல்லி  அனுப்பி வைச்சாங்க. சுஹாசினி, ராதிகா, ஊர்வசி, குஷ்பு என நாலு பேரும் செய்த முக்கியமான படங்களிலிருந்து அவர்களின் கேரக்டர்களை விரிவுபடுத்தியிருக்கேன்.’’

‘‘அவ்வளவு சுலபமா இந்த சீனியர்கள் சரின்னு சொல்லிட்டாங்களா?’’
‘‘சுஹாசினிதான் முதலில் ஓகே சொல்லி ஆரம்பித்து வைத்தது. ராதிகாகிட்ட ஸ்கிரிப்ட் சொன்னதும், ‘எப்போ’னு ரெடியாகிட்டாங்க. சுஹாசினிக்கு ‘சிந்து பைரவி’யின் கேரக்டரோட விரிவு. ராதிகாவிற்கு ‘ரெட்டை வால் குருவி’யோட எக்ஸ்டென்ஷன். அதில் மோகன் இரண்டாவதாக ராதிகாவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குவாரு. பிறகு முதல் மனைவி அர்ச்சனாவும் ராதிகாவும் கூடிப் பேசி, ‘என்ன பண்றது... இந்த மனுஷன் இப்படிப் பண்ணிட்டாரு’ன்னு நினைச்சு சேர்ந்தே வாழ்ந்திடுவாங்க.

அதற்குப் பிறகு ராதிகாவோட அடுத்த பயணம் இதுல வருது. ஊர்வசி ‘மைக்கேல் மதன காமராஜனி’ல் திரிபுரசுந்தரியாக வந்து, சமையல் கலைஞர் கமலோட தகராறு போட்டு பிறகு காதலில்  சேருவாங்க. அவரோட அடுத்த கட்டம் இதுல இருக்கு. குஷ்பு ‘மன்னன்’ படத்தில் ரஜினியைக் காதலிப்பாங்க. பிறகு விஜயசாந்தி ரஜினியைக் கல்யாணம் செஞ்சிருவாங்க.  தனியாளா ஆகிட்ட குஷ்புவோட நெக்ஸ்ட் மூவ் இதுல இருக்கு. இவங்க எல்லோரும் சென்னையில் சந்திக்கிறாங்க. அப்புறம் எல்லோரும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் போயி ஒரு மாத விடுமுறையில் இருப்பாங்க. அங்கே நடக்கிற சுவாரசிய சம்பவங்கள்தான் மீதிக் கதை...’’

‘‘அவங்களை படம் ஆக்கியது எப்படியிருந்தது?’’
‘‘இவங்க நாலு பேருக்குமே சினிமாவோட திரைமொழி அத்துபடி.  காட்சி என்னன்னு  கோடிட்டுக் காட்டிட்டா போதும்... நமக்குப் பிரச்னையே இல்லை. அதிலும் ஊர்வசி... சான்ஸே இல்லை! டேக் போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் ரெடி பண்ணியிருப்போம். டேக் ஆரம்பிச்சு அடுத்த நொடியில்  இன்னும் அடுத்த கட்டம் போயி காமெடியில் பின்னுவாங்க. ராதிகாவுக்கு டயலாக்கே வேண்டாம். அந்தக் கண்ணும், முகபாவமுமே ஆயிரம் மொழி பேசுது. நுணுக்கத்தில் அவங்க எக்ஸ்பர்ட். சுஹாசினி பாலசந்தர் ஸ்கூல் வேறயா, எமோஷனலில் நிக்கிறாங்க. குஷ்பு எப்பொழுதும்போல் ஜாலியாக சிரித்த முகத்தோடு வர்றாங்க...’’

‘‘ஏன் ஆஸ்திரேலியா?’’
‘‘வித்தியாச களனாக இருக்கும். தமிழ் சினிமாவுல ஆஸ்திரேலியாவை, சும்மா ஒரு பாட்டுக்கு மட்டுமே பார்த்திருக்கோம். இதில் அந்த நாட்டின் அழகை அப்படியே நீங்க தரிசிக்கலாம். இதில் ஒரு இளமை ஜோடி நிதின் - லதா இருக்காங்க. நிதின் நல்ல பாடகனும் கூட. ‘உன் மேலே ஒரு கண்ணு’னு ‘ரஜினி முருக’னில் பாடி வெளுத்துக் கட்டினானே... அந்தப் பையன், அவனை சினிமாவுக்குள்ள கொண்டு வந்திட்டேன். லதா, நியூசிலாந்தில் இருக்கிற அழகு தமிழ்ப் ெபாண்ணு.’’

‘‘நாங்க ‘சுப்ரமணியபுர’த்தில் பார்த்த இசையமைப்பாளர் ேஜம்ஸ் வசந்தன் எங்கே?’’
‘‘நான் எங்கே போனாலும் இந்தக் கேள்வி என்னைத் துரத்திக்கிட்டே வருது. அப்படிப்பட்ட படம் அது. அதில் ஒர்க் பண்ணினபோது நம்ம இருப்பு தெரிஞ்சது. அதற்குப் பிறகு 25 படங்களுக்கு மேலே பண்ணிட்டேன். இருந்தாலும் அந்த உயரத்தை ஏனோ தொட முடியலை. அப்புறமும் ‘ஈசன்’ ‘பசங்க’ன்னு குறிப்பிடத்தக்க படங்களில் நல்ல பாடல்கள் வந்திருக்கு. உங்க கேள்வியை மனசுல இருத்தி வைச்சிருக்கேன். இதுமாதிரி நானே இயக்கும்போது நல்ல பாடல்களுக்கான சுதந்திர வெளி இருக்கு. இதில்கூட அந்த மாதிரி பாடல்கள் இருக்கு. வித்தியாசமான முயற்சிகளை முதலில் வரவேற்கிற தமிழ் சினிமாவிற்கு என்னாலான சமர்ப்பணம் இது. மக்கள் பார்த்து வழங்குகிற தீர்ப்புக்கு நிச்சயம் தலை வணங்குவேன்!’’

- நா.கதிர்வேலன்