2 நாட்டுக் கோழிக்கு 4 கிலோ கடலை எண்ணெய்!



‘‘பணம் என்பதே உழைக்கும் வர்க்கத்தை ஏமாத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒண்ணு! ஒரு பொருளுக்கு மாற்றா இன்னொரு பொருள் கொடுத்து வியாபாரம் செஞ்சிட்டு இருந்தப்போ இந்த உலகம் சிறப்பா இருந்துச்சு. என்னைக்கு பணம்ங்கிற சதி வலையில சிக்கினோமோ, அன்னைக்கே எல்லாமும் சின்னாபின்னமாகிடுச்சு. இப்போ, பணத்துக்கு விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கு.

அதனாலதான், இந்தப் பண்டமாற்று முறையை உடனடியா தொடங்கிட்டோம்’’ - அழுத்தமாகவும் நம்பிக்கையோடும் பேசும் ஏனாதி பூங்கதிர்வேல், ‘மாவேள்’ என்கிற ஆர்கானிக் விளைபொருட்கள் நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர். சீமைக்கருவேல ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுத்து வருபவர்.

சமீபத்தில், ‘உழைப்பவனே செல்வந்தர்! பணமற்ற தமிழ்நாடு படைப்போம்!’ என்ற முழக்கத்தோடு பண்டமாற்று முறையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இவர். பணமில்லா பரிவர்த்தனை நோக்கி நகர்தல் என மத்திய அரசு அதிரடி காட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு விழா உண்மையில் வைரல்தான்.

எப்படி வந்தது இந்த ஐடியா? இதன் கர்த்தாவாக இருந்த பூங்கதிர்வேலிடம் பேசினோம். ‘‘எனக்கு ராமநாதபுரம் பக்கத்துல இருக்கிற ஏனாதி கிராமம். சொந்த நிலத்துல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஆனா என் குடும்பம், வாத்தியார் வேலைக்கு என்னைப் படிக்க வச்சது. எனக்கு அந்த வேலை சரியா வரலை. தொழில் செய்யலாம்னு சென்னைக்கு வந்தேன்.

அம்மா, அப்பா, கூடப் பொறந்தவங்கனு மொத்தக் குடும்பத்தையும் விட்டுட்டு பணத்துக்காக ஓடி ஓடி வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்கோம். எல்லோரது வாழ்க்கையிலும் இந்த நிலை மாறணும்னு நினைச்சேன். அதை மீட்டெடுக்கிற முதல் வேலைதான் இந்தப் பண்டமாற்று’’ என்கிறவரிடம் ‘இது இந்தக் காலத்துக்கு சரி வருமா?’ என்றோம்.

‘‘நம் முன்னோர்கள் ஒருத்தருக்கொருத்தர் தங்களோட பண்டங்களை மாத்திட்டு சந்தோஷமா வாழ்ந்திருக்காங்க. அதைத்தான் மறுபடியும் கொண்டு வந்திருக்கோம். இதை ஒரு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே திட்டமிட்டு வந்தோம். இப்போ ‘பணமில்லா இந்தியா’னு மத்திய அரசு பேச ஆரம்பிச்சிருக்கு. இதுதான் சரியான நேரம்னு தோணுச்சு. உடனே, வேலைகளைத் தொடங்கிட்டோம். இந்த முறையை இப்பவும் பத்து நாடுகள்ல பின்பற்றிட்டு வர்றாங்க.

குறிப்பா, அரபு நாடுகள்ல இந்த முறை இருக்குனு சில இஸ்லாமிய நண்பர்கள் சொன்னாங்க. இதை சிங்கப்பூர்ல பண்ணிட்டு இருக்கிற குழு ஒண்ணு, எங்களைத் தொடர்புகொண்டு ‘பண்டத்துக்குப் பண்டம் கொடுக்கிறதுதான் சரியானது... சிறப்பா செய்ங்க’னு வாழ்த்தினாங்க. இதுதான், உழைப்பவர்களுக்கு  இடைத்தரகர் இல்லாம முழுப்பலனும் போய்ச் சேரும் வழி’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க! ‘சரி, இது பொருட்கள் உற்பத்தி செய்கிறவர்களுக்கு மட்டும்தானே பொருந்தும். சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்?’ அவரிடமே கேட்டோம்.

‘‘இது முதல்கட்ட முயற்சிதான். வெள்ளைக்காரங்க இந்தியாவை ஆண்டபோது கூட இந்தப் பண்டமாற்று முறை ஆங்காங்கே நடந்திட்டுதான் இருந்துச்சு. பணத்துக்கு மட்டும்தான் பொருள்னு ஒரே நாள்ல நடக்கலை. படிப்படியாத்தான் நடந்துச்சு. அதேமாதிரி இந்தப் பண்டமாற்றும் படிப்படியா மீண்டும் திரும்பும். இங்க என் சொந்தபந்தம்தான் விவசாயம் பண்றாங்க. அவங்ககிட்ட இருந்து பொருட்கள் வாங்க எனக்குப் பணம் ேதவையே இல்ல.

இடைத்தரகர்கள்கிட்ட வாங்கத்தான் பணம் தேவைப்படுது. இப்போ, என் கடைகளுக்குத் தேவையான பொருட்களை விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியாவே வாங்குறேன். அதுக்குப் பதில் அவங்களுக்குத் தேவைப்படுற பொருளை எங்கிட்ட பண்டமா வாங்கிடறாங்க. அதைத்தான் இப்ப செய்றோம். நாங்க நிகழ்ச்சி நடத்தின அன்னைக்கு வந்திருந்த எல்லோரும் நகரத்தைச் சேர்ந்தவங்கதான். தங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைவிச்ச காய்கறிகளைக் கொண்டு வந்து கொடுத்துட்டு, தங்களுக்குத் தேவையான பொருட்களை பலர் வாங்கிட்டுப் போனாங்க.

ஒருத்தர் திருச்சியில இருந்து, வீட்டுல வளர்த்த கோழியைக் கொண்டு வந்திருந்தார். இன்னொருத்தர் நாட்டுக் கோழி முட்டை கொடுத்திட்டு தனக்குத் தேவையான பொருளை வாங்கிட்டுப் போனார். நான் 2 நாட்டுக் கோழிக்கு 4 கிலோ மரச்செக்கு கடலை எண்ணெய் கொடுத்தேன். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு பொருள் கொடுத்து விழாவை சிறப்பிச்சாங்க.

எந்தப் பொருளை வேண்டுமானாலும் கொடுத்துட்டு இன்னொரு பொருளை எளிதா வாங்கிட முடியாது. வாங்குறவங்களுக்கும் அது பிடிக்கணும். அப்போதான் மாற்ற முடியும். இப்போதைக்கு சந்தையில அதுக்கான பண விலையை வச்சுதான் பண்டமாற்றை நடத்தியிருக்கோம். நான் வாங்கின இரண்டு நாட்டுக் கோழியின் விலை பல்லாவரம் சந்தையில ஆயிரத்து இருநூறு ரூபாய்னு சொல்றாங்க.

அதே நாமக்கல் ஏரியாவுல இருநூறு ரூபாய்க்கும் கிடைக்குது. ஆனா, நான் அதை வளர்க்க ஆன செலவு எல்லாம் கணக்கிட்டு நாலு கிலோ மரச்செக்கு கடலை எண்ணெய் கொடுத்தேன். இப்படியொரு வரையறை வச்சுதான் இந்தப் பண்டமாற்றை நடத்தினோம்’’ என்கிற பூங்கதிர்வேல், இதற்காக சீக்கிரமே பெரிய சந்தையை நடத்தப் போவதாகச் சொல்கிறார்.

‘‘இப்போ எங்ககிட்ட தமிழகம் முழுவதும் 15 ஆர்கானிக் கடைகள் இருக்கு. இங்கெல்லாம் போய் உற்பத்திப் பொருட்களைக் கொடுத்து பண்டமாற்று முறையில பொருட்களை வாங்கிக்கலாம். கலைஞர்கள் தங்கள் படைப்புகளைக் கொடுத்தும் பொருட்களை மாத்திக்க முடியும். அடுத்து, நாங்க ஒரு ஆஃபர் கூப்பன் கொடுக்கலாம்னு இருக்கோம்.

அதை வச்சு எங்களோட எந்தக் கடையிலும் பொருட்களை பண்டமாற்றம் பண்ண முடியும். விரைவில் ஒரு பண்டமாற்றுச் சந்தை நடத்தி இதைப் பெரிசா மக்கள்கிட்ட கொண்டு போக முடிவெடுத்திருக்கோம். ஒரே ராத்திரியில இதெல்லாம் நடந்து முடியும்னு நாங்க சொல்லல. ஆனா, அதுக்கு இப்பவே திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கினால், நிச்சயம் பணமில்லா பண்டமாற்று தமிழகத்தைப் படைக்கலாம்’’ என உறுதிபட முடிக்கிறார் பூங்கதிர்வேல்!

- பேராச்சி கண்ணன்