குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

குளத்தூர் ஜமீன் கதை

- முத்தாலங்குறிச்சி காமராசு
(காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600024. விலை: ரூ.175/-. ெதாடர்புக்கு: 98404 80232)

தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தாரர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப் போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது.  பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தாரர்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்க வழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக் கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு ைவக்கப்பட்டு இருக்கின்றன.

குளத்தூர் ஜமீன்தாரர்களின் வாழ்க்கைக் கதை சம்பவங்களில் நிறைந்திருக்கிறது. ஒரு திரைக்கதைக்கு நிகரான வாழ்வியல் சித்திரங்கள். மகாத்மா காந்தி இங்கே வந்து சற்றே இளைப்பாறி இருக்கிறார். அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எவ்வளவோ நடந்திருக்கிறது. ஒரு நாவல் மாதிரியான நடையோட்டம். காமராசு பற்றியும், அவருக்குப் பழக்கமான ஜமீனின் வாரிசுகளைப் பற்றியும் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் வண்ணதாசன். அது அந்தப் புத்தகத்திற்கே ஒரு அணிகலன். ‘முன்னோர்களின் சரித்திரம் வசீகரமானது’ என்பதன் சான்றே இந்தப் புத்தகம்.

டெக் டிக்

இதோ வந்துவிட்டது, ‘எலெக்ட்ரிக் எக் குக்கர்’. கண்ணை மூடித் திறப்பதற்குள் அவித்த முட்டை ரெடி! இந்தக் குக்கரை ‘குட்வே’ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 25 மி.லி தண்ணீரில் ஐந்து முட்டைகளை இட்டு சுவிட்சை தட்டிவிட்டால் போதும்... ஏழே நிமிடங்களில் முட்டை வெந்துவிடும்.  ஒரே நேரத்தில் 5 முட்டைகளை  இதில் வேக வைக்கமுடியும். முட்டை வெந்தவுடன் தானாகவே இந்த குக்கர் நின்றுவிடும். அதனால் மின்சார செலவும் மிச்சம். முட்டையை வேக வைக்க சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனதைக் கவரும் பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த குக்கரின்  விலை, ரூ.699/-

சிற்றிதழ் Talk

கலை என்பது என்ன? உயிரின் துடிப்பு. உணர்வின் அசைவு. உள்ளுக்குள் அலைவதைக் கண்ணுக்குள் காண்பது. 27 ஆண்டுகள் நடந்துவிட்டேன். இந்த உலகில் பெருங்கடமை ஒன்று எனக்கு உண்டு. அந்த விருட்சத்தை வரைவது. அங்கு அலைவதை வரைவது. வெயிலை, காற்றை, கடலை, மண்ணை, வெளிகளை வரைவது. என்னையே வரைவது. அவ்வளவுதான்!
- ஓவியர் வான்கா (‘காலச்சுவடு’ இதழில்)

சர்வே

மோடியின் செல்லாக் காசு திட்டத்துக்கு மக்கள் மத்தியில் படிப்படியாக  ஆதரவு குறைந்துவருகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. மூன்று வாரங்களுக்குமுன் இந்தத் திட்டத்துக்கு 51 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்போது அது 39 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ‘அரசியல்வாதிகள், அதிகாரிகள், கான்டிராக்டர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் இருந்த கோடிக்கணக்கான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளிச்சத்துக்கு வந்ததுதான் இந்த திட்டத்தின் மீதான அவநம்பிக்கைக்கு முக்கியக் காரணம்’ என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மூன்று வாரங்களுக்குமுன் ‘இந்தத் திட்டம் சரியாக அமல்படுத்தவில்லை’ என்று 25 சதவீதத்தினர் மட்டுமே சொல்லியிருந்தனர். இப்போது அவர்களின் சதவீதமும் 36 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 3 வாரங்களுக்குள் என்ன நடக்குமோ!

யூ டியூப் லைட்

கங்காரு என்றாலே முதலில் நமக்கு ஞாபகத்துக்கு வருவது, ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ பாடலில் மனிஷா கொய்ராலா அதைத் துரத்தித் துரத்தி  கமலுடன் டூயட் பாடும் காட்சிதான். சாஃப்ட்டான விலங்காகப் பார்த்துப் பழகிப்போன கங்காருவின் மூர்க்கத்தனத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா? ‘viralhog’ யூ டியூப் சேனல் பக்கம் போங்க! ஆஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டில்  நாய் ஒன்று கங்காருவின் பிடியில் சிக்கிக்கொள்கிறது.

அந்த நாயை மீட்பதற்காக கங்காருவின் பக்கம் செல்கிறார் அதனுடைய எஜமான். நாயை விட்டுவிட்டு நெடுநெடுவென நிமிர்ந்து எஜமானைத் தாக்க முற்படுகிற அந்த கங்காருவின் முகத்தில் ஓங்கி செம குத்து விட்டு நாயைக் காப்பாற்றுகிறார் அவர். அப்படியே கதிகலங்கிப் போய் சில விநாடிகள் நின்ற கங்காரு, எதுவும் செய்ய முடியாமல் காட்டுக்குள் ஓடுகிறது. இந்தக் காட்சியை யூ டியூப்பில்  4 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இனி உயிரியல் பூங்கா சென்றால்கூட கொஞ்சம் தள்ளி நின்றே கங்காருவை ரசிப்போம்!

நிகழ்ச்சி மகிழ்ச்சி

சினேகா சிரிப்பைவிட ரசிக்க வைத்தது, அவர் கிரிக்கெட் விளையாடிய அழகுதான். மட்டையைச் சுழற்றியபடி, கணவர் பிரசன்னாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள சினேகா ரெடியாக, ‘‘சினேகா... சிக்ஸர்’’ என கோரஸ் குரல்கள் உற்சாகம் காட்டின. குரல் வந்த திசையில் வெங்கட்பிரபு, ஷாம், நரேன், ரமணா, ஸ்ரீகாந்த், பிரஜின், அசோக் செல்வன் என ஹீரோக்களின் அணிவரிசை. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, திரைப்பட விநியோகஸ்தர் நாசர் அலி, டாக்டர் ரொஃபினா சுபாஷ் இருவரும் இணைந்து சென்னையில் நடத்திய கிரிக்கெட் போட்டியில்தான் இந்த கலகல நிகழ்வு. இதில் சென்னையைச் சேர்ந்த 32 அணிகள் கலந்துகொண்டன. கிரிக்கெட் போட்டியைக் காண வந்த குழந்தைகளிடம் பிரபலங்கள் பலரும் ‘‘இங்கே யாருடைய வாழ்வும் நிரந்தரம் அல்ல. இருக்கும்வரை மகிழ்வாக வாழ்வோம்’’ என்று நெகிழ்ந்து உருகியது, அந்தக் குழந்தைகளுக்கு நம்பிக்கை விதை.