தனியே!



செல்விக்கும் சரணுக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆனது. சரணின் அப்பாவும் அம்மாவும் ஆந்திராவில் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக ஒரு வாரம் போயிருக்க, இருவரும் தனியாகவே இருந்தனர். ‘‘ஒரு வாரம் முழுக்க நானும், சரணும் மட்டுமே வீட்டில் இருந்தோம். யாரோட தொல்லையும் இல்லை. திகட்டத் திகட்ட தனிக்குடித்தன சந்தோஷத்தை அனுபவித்தோம். இன்னைக்கு ராத்திரி அவங்க வந்துடுவாங்க’’ என்று தோழியிடம் போனில் சொல்லிக்கொண்டிருந்தாள் செல்வி.

அப்போது ஆபீஸிலிருந்து வந்த சரண், ஒரு வாரம் வேலை சம்பந்தமாக டூர் போவதாய் சொன்னான். ‘‘ஒரு வாரமா? இங்கு நான் தனியா என்ன செய்வது’’ என கலங்கினாள் செல்வி. சரண் சட்டென, ‘‘நீ வேணும்னா உங்க வீட்டுக்குப் போயி அத்தை, மாமாவோட ஒரு வாரம் இருந்துட்டு வாயேன்’’ என்றான்.

‘‘எனக்கும் வீட்டுக்குப் போக சந்தோஷம்தான். ஆனால், ஊரிலிருந்து  இன்னைக்கு உங்க அம்மாவும் அப்பாவும் வந்துடுவாங்களே! அவங்களை தனியா விட்டுட்டுப் போறது தப்பில்லையா?’’ என்று கேட்டாள். சரண் சிரித்துக்கொண்டே, ‘‘அட அசடே! இத்தனை நாளா நம்ம எல்லோருடனும் சேர்ந்துதானே அம்மா, அப்பா இருந்தாங்க. நாம ஒரு வாரம் சந்தோஷமாய் இருந்தது போல், அவங்களும் ஃப்ரீயா இருக்கட்டுமே’’ என்றவுடன் செல்வி புரிந்துகொண்டு புறப்படத் தயாரானாள்.

-மல்லிகா குரு