விஜயனின் வில்



-கே.என்.சிவராமன் - 6

‘‘மாஸ்டர்... இது... இது...’’ பேச்சு வராமல் ஆதி தவித்தான். தன் கண்முன்னால் விரிந்த வரைபடத்தையே உற்றுப் பார்த்தவன் செய்வதறியாமல் மாஸ்டரை ஏறிட்டான்.

‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோட ப்ளூ ப்ரின்ட்...’’ புன்னகைக்கு இடையில் பதில் சொன்னவர் தன் கரங்களால் வாஞ்சையுடன் அந்த தார்ப்பாயைத் தடவினார். ‘‘இது எப்படி சாத்தியம் மாஸ்டர்?’’ ‘‘எது?’’ ‘‘இந்த மாற்றம். கார்க்கோடகர் தன் வாழ்நாள் முழுக்க பாதுகாத்தது ஸ்ரீரங்கம் கோயிலோட வரைபடம். நம்ம எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும். இந்த உலகத்தைவிட்டு அவர் மறைஞ்சதும் அந்த ப்ளூ ப்ரின்ட் தாரா கைக்கு போயிடுச்சு. உங்க வழிகாட்டுதலோட அவளைத் துரத்திப் பிடிச்சு கொன்னேன்.

நமக்கு சொந்தமான வரைபடத்தை எடுத்து வந்தேன். பார்த்தா... அது தப்பா இருக்கு. என்ன காரணம் சொன்னாலும் நான் செய்தது தப்புதான். அந்த இடத்துலயே இதை பிரிச்சுப் பார்த்திருக்கணும். மன்னிச்சுடுங்க மாஸ்டர். இதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன். அதுக்கு முன்னாடி ஒரேயொரு சான்ஸ் கொடுங்க. எப்படியாவது ஒரிஜினல் வரைபடத்தை தேடிப் பிடிச்சு கொண்டு வந்துடறேன்...’’

தவிப்பும் படபடப்புமாக பேசிவிட்டு நகர முற்பட்ட ஆதியைத் தடுத்து நிறுத்திய மாஸ்டர் அப்படியே அவனைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டார். தாய்ப் பறவையின் சிறகில் குஞ்சு ஒடுங்கியது. ஆதரவுடன் அவன் தலையை வருடியவர் நெற்றியில் முத்தமிட்டார்.  ‘‘நல்லவேளை, கார் எரிஞ்ச சமயத்துல இந்த ப்ளூ ப்ரின்டை நீ பிரிச்சுப் பார்க்கலை...’’ கண்களை அகலமாக விரித்தபடி அவரை ஏறிட்டான். ‘‘என்ன சொல்றீங்க மாஸ்டர்..?’’

‘‘உண்மையை ஆதி...’’ ‘‘புரியலை..’’ ‘‘இன்னுமா..?’’ அவனை அணைத்தபடியே, விரிக்கப்பட்ட வரைபடத்தின் முன்னால் வந்தார். ‘‘இதுதான் கார்க்கோடகர் பாதுகாத்த ப்ளூ ப்ரின்ட். சரியானதைத்தான் நீ கொண்டு வந்திருக்க...’’ ‘‘ஆனா, இது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோட வரைபடம்னு சொன்னீங்களே..?’’ ‘‘இப்பவும் அதையேதான் சொல்றேன். ரங்கமும் மதுரையும் வேற வேறயா என்ன... ஒன்று ஆரம்பம். அடுத்தது முடிவு. இதைத்தான் பொட்டுல அடிச்சா மாதிரி கார்க்கோடகர் உணர்த்தறார்...’’

‘‘சத்தியமா எதுவும் புரியலை மாஸ்டர். ஆனா, நீங்க சொன்னா... அது சரியாத்தான் இருக்கும்...’’ ‘‘இந்த நம்பிக்கைதான் ஆதி உன்னை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு. இதே நம்பிக்கைதான் எதிர்காலத்துல உன்னை மாஸ்டராகவும் உயர்த்தப் போகுது...’’ ‘‘மா...ஸ்...ட...ர்..?’’ ‘‘நெருப்புன்னா வாய் வெந்துடாது. மனிதனா பொறந்த எல்லாருமே ஒருநாள் இறந்துதான் ஆகணும். எனக்காகவும் மரணம் காத்துகிட்டுதான் இருக்கு. ஒருவேளை நான் போயிட்டேன்னா நம்ம அமைப்பை நீதான் வழி நடத்தணும்...’’

ஆதியை நோக்கி கண் சிமிட்டியவர் தோளோடு அவனை அணைத்தபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தார். மரப் படிக்கட்டை ஒட்டியிருந்த நீண்ட ஹாலில் சோஃபாக்கள் போடப்பட்டிருந்தன. எதிலும் அமராமல் ஆளுயர கண்ணாடி ஜன்னல் பக்கம் சென்றார். சூரியனின் கதிர்களை அலைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. தன் இரு கைகளையும் பின்புறம் கட்டியபடி அலைகளின் ஏற்ற இறக்கங்களையே சில நிமிடங்கள் வரை கவனித்தவர் ஒரு முடிவுடன் திரும்பினார்.

முன்புறம் கைகளை கட்டியபடி நின்றுகொண்டிருந்த ஆதியைப் பார்க்கவே அவருக்குப் பெருமையாக இருந்தது. ‘‘இந்த உலகத்தோட குழப்பங்களுக்கு எல்லாம் எது காரணம்னு நினைக்கற ஆதி..?’’ மவுனமாக நின்றான். மனம் மட்டும் மாஸ்டரின் முகத்திலேயே குவிந்திருந்தது. ‘‘சயின்ஸ்தான். குறிப்பா பரிணாம வளர்ச்சி பத்தி எப்ப டார்வின் தன்னோட ‘Origin of Species’ புத்தகத்துல எழுதினாரோ அந்த நொடிலேந்து எல்லா குழப்பங்களும் ஆரம்பமாச்சு.

இதுக்குப் பிறகுதான் யார் எது சொன்னாலும் அதுக்கு ஆதாரம் என்னன்னு இந்த உலகம் கேட்க ஆரம்பிச்சது. நிரூபணம்... புல்ஷிட்... இதைத்தான் கெட்டியா அறிவியல் பிடிச்சு தொங்குது. அதுவும் பத்து முறை பரிசோதனை நடந்தா அதுல எட்டு முறையாவது ஒரே ரிசல்ட் வரணும்னு கண்டிஷன் போடுது...’’ நடுநாயகமாக இருந்த ஒற்றை குஷன் சோஃபாவில் அமர்ந்தவர், தன் எதிரில் இருந்த நாற்காலியில் ஆதியை அமரும்படி சைகை செய்தார்.

‘‘இருக்கட்டும் மாஸ்டர்...’’ சொன்னவன் அவர் பார்வை படும் இடத்தில் நின்று கொண்டான். ‘‘அப்ப நிரூபிக்க முடியாதது எல்லாம் சுத்த ஹம்பக்கா..? கோபமா வருது ஆதி. சாதாரண கல்லைப் பார்த்ததுமே அதுக்குள்ள இருக்கிற உருவம்தான் ஒரு சிற்பியோட கண்ணுக்கு தெரியுது. அதுவே சாதாரண மக்களுக்கு கடவுளா காட்சி தருது. இந்த ரெண்டுமே மனசு சார்ந்த விஷயம். ஒருபோதும் இதை நிரூபிக்க முடியாது. அப்ப இது பைத்தியக்காரத்தனமா..?’’

ஆதியின் புத்தி விழித்துக் கொண்டது. ஒவ்வொரு சொல்லாக தனக்குள் உள்வாங்க ஆரம்பித்தான். ‘‘உண்மைல சயின்ஸ்தான் முட்டாள்தனமானது. ஏன்னா அது அந்தந்த காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது. தொழில்நுட்பங்கள் வளர வளர அறிவியலோட முடிவும் மாறிக்கிட்டே இருக்கு. இதை நாம சொன்னோம்னு வைச்சுக்க...நேரடியா பதில் சொல்ல மாட்டாங்க. மாறா தொழில்நுட்பங்களே அறிவியல் கண்டுபிடிப்புதானேன்னு விளக்கம் தருவாங்க...’’

ஆமோதிக்கும் வகையில் ஆதி அநிச்சையாக தலையசைத்தான். ‘‘எல்லாத்துக்கும் காரணத்தைக் கேட்கிற சயின்ஸ்... சகலத்துக்கும் விளக்கம் சொல்ற அறிவியல்... என்னிக்காவது உலகத்தோட டிசைன் ஏன் இப்படி இருக்குன்னு தெளிவா சொல்லியிருக்கா..? வெயிட்... வெயிட்... உடனே இந்த கெமிக்கலோட சேர்க்கைனால... அந்த ரசாயனக் கலவையாலன்னு சயின்டிஸ்ட் சொல்ற வியாக்கியானத்தை மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்காத. என் கேள்வி எளிமையானது.

எல்லா பாலூட்டிகளும் வைட்டமின் ‘சி’ சாப்பிடறதில்ல. ஆனா, மனுஷங்க மட்டும் தவறாம வைட்டமின் ‘சி’ சாப்பிடறாங்க. அதுவும் டாக்டர்ஸ் சொல்லாமயே. இது எப்படின்னு என்னிக்காவது யோசிச்சிருக்கோமா..?’’ நிறுத்தியவர் ஆதியின் கண்களை உற்றுப் பார்த்தார். இமைக்காமல் அதை எதிர்கொண்டபடி அடுத்து மாஸ்டர் பேசுவதற்காக காத்திருந்தான்.

‘‘பாகவதம் படிச்சிருக்கியா? அதுல மகாவிஷ்ணுவோட ஒன்பது அவதாரங்கள் பத்தி சொல்லியிருப்பாங்க. பத்தாவதா ‘கல்கி’ அவதாரம் வரப் போகுதுன்னு குறிப்பு காட்டியிருப்பாங்க. இதை கடவுள் நம்பிக்கை சார்ந்து படிக்கவும் வேண்டாம். ஏத்துக்கவும் வேண்டாம். ஏன்னா கடவுள் இருக்காரா இல்லையான்னு நமக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்ல. இந்த இரண்டுல எந்தப் பக்கம் நாம நின்னாலும் இந்த உலகம் இப்படியேதான் இயங்கப் போகுது. ஸோ, கடவுளை ஓரமா வைச்சுட்டு பாகவதத்துக்கு வரலாம்...’’ ‘‘...’’

‘‘இதை எழுதினது ஒருத்தரா? இல்ல பல்வேறு காலகட்டங்கள்ல பலரால கொஞ்சம் கொஞ்சமா எழுதி சேர்க்கப்பட்டதா..? இதுவும் தேவையில்லாத கேள்வி. ஒருத்தர் எழுதினா என்ன..? பலர் எழுதினா என்ன..? மொத்தத்துல அது பாகவதம். அதுல ஒன்பது கதைகள் சொல்லப்பட்டிருக்கு. உண்மைல டார்வின் சொன்ன ‘Evolution Theory’ அதுதான்.

மீன், ஆமை, பாதி விலங்கு பாதி மனிதன், முழு மனிதன்... இதெல்லாமே பாகவதத்துல கதைகளா இருக்கு. இதன் மூலமா உயிரினத்தோட தோற்றத்தை, பரிணாம வளர்ச்சியை சொல்லியிருக்காங்க. அப்படீன்னா பாகவதத்தை எழுதினவனும்... ஓகே. எழுதினவங்களும் சயின்டிஸ்ட்தானே..?’’ மாஸ்டர் பேசப் பேச ஆதிக்குள் வெளிச்சம் பரவத் தொடங்கியது. இதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும். அவனை விட்டு தன் பார்வையை விலக்காமல் எழுந்து அருகில் வந்தார்.

‘‘Intelligent Design... சுருக்கமா ‘ID’... இதுதான் நம்ம அமைப்போட தாரக மந்திரம். இதைத்தான் காலம் காலமா நாம உலகுக்கு அறிவிச்சுக்கிட்டே இருக்கோம். இதுக்கு குறுக்க யார் வந்தாலும் அவங்களை நாம கொல்லலாம். அதுல எந்த தப்பும் இல்ல. அதனாலதான் தாராவ எரிக்க சொன்னேன். ஏன் தெரியுமா? வாசுகி பாம்போட வேதனை சாதாரணமானது இல்ல. அது ஒரு சமூகத்தோட இரண்டாயிரம் ஆண்டுக்கால துயரம். அந்த அழுகைக்கு தீர்வு காண தாரா முயலலை. மாறா தன்னுடைய வாழ்க்கைக்கு பதில் தேட புறப்பட்டா. இது தப்பு...’’ ‘‘...’’

‘‘நம்ம மூதாதையர்களோட தொடர்ச்சியா இப்ப நான் நிக்கறேன். எனக்குப் பிறகு இதை நீ தொடரணும். கார்க்கோடகர் வழியா அடுத்த தலைமை நீதான்னு நம்ம முன்னோர்கள் அடையாளம் காட்டியிருக்காங்க. நாம ஆன்மிகவாதியோ நாத்திகவாதியோ இல்ல... ஏன், அறிவியலை நம்பறவங்களும் கிடையாது. அப்படீன்னா நாம யாரு? புத்திசாலித்தனத்தை நம்பறவங்க. அந்த இன்டலிஜென்ஸை எல்லாருக்குள்ளயும் இருக்கிற ஒளிதான் சுடர்விட்டு பிரகாசிக்க வைக்குது.

இந்த உள்ளொளியோட அவசியத்தை இதுவரை கொஞ்சம் கொஞ்சம் உலகுக்கு அறிவிச்சிருக்கோம். இப்பதான் முதல் முறையா பெரிய அளவுல பிரபஞ்சத்துக்கு சொல்லப் போறோம். அதுக்குதான் நீ கொண்டு வந்த வரைபடம் பயன்படப் போகுது...’’ ‘‘எப்படி மாஸ்டர்?’’ ‘‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலோட ப்ளூ ப்ரின்டை தன் உள்ளொளி தரிசனத்தால கார்க்கோடகர் வரைஞ்சிருக்கார். கூடவே மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தோட ப்ளூ ப்ரின்டையும் சேர்த்திருக்கார். டூ இன் ஒன். இரவுல அது ஸ்ரீரங்கம். காலைல அது மதுரை...’’ ‘‘ஏன் இப்படி செய்திருக்கார்..?’’

‘‘14ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரகசியத்தை சொல்லத்தான். தென்னாட்டு மேல இஸ்லாமியர்கள் படையெடுத்த காலம் அது. அப்ப ஸ்ரீரங்கம் ரங்கநாதரோட மூல விக்கிரகத்தை காப்பாத்தறதுக்காக யாருக்கும் தெரியாம ஒரு குழு அதை தூக்கிட்டு ஓடிட்டாங்க. எங்க போனாங்க, விக்கிரகம் என்னாச்சுன்னு ஒருத்தருக்கும் தெரியாது. அமைதி ஏற்பட்ட பிறகுதான் அரங்கனோட விக்கிரகம் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்தது. இடைப்பட்ட காலத்துல அரங்கன் மறைஞ்சிருந்தது எங்க தெரியுமா? மதுரைல!’’

‘‘மாஸ்டர்...’’ ‘‘கார்க்கோடகர் இதைத்தான் குறிப்பா உணர்த்தியிருக்கார். ஸோ ரங்கம் டூ மதுரை... இந்த எல்லைக்குள்ள ஏதோ மறைஞ்சிருக்கு... அது என்ன..? இதை நாமதான் நம்ம உள்ளொளியால கண்டுபிடிக்கணும். அதை மட்டும் நாம செய்துட்டா உலகமே நம்ம பக்கம் திரும்பிடும். தாராவுக்கு அவர் கொடுத்தது வெறும் அஞ்சு முட்டைதான். தாராவா அவர்கிட்டேந்து எடுத்துகிட்டது வரைபடம்.

இதுபோக வேறொரு செய்தியை அவர் தாராவுக்கு சொல்லியிருக்கார்...’’ ‘‘அது இதுவான்னு பாருங்க...’’ ஜெர்கின் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பேப்பரை எடுத்துக் கொடுத்தான். பிரித்துப் பார்த்த மாஸ்டரின் புருவம் உயர்ந்தது. நீல மையினால் எழுதப்பட்ட அந்த வாசகத்தை திரும்பத் திரும்ப படித்தார். ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’

கிருஷின் வருகைக்காக சென்னை விமானநிலையத்தில் ஐஸ்வர்யா காத்திருந்தாள். இப்போது தாரா எங்கிருக்கிறாள்..? போன் ஏன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது..? அவள் குளிக்கும்போது யார் F/5க்குள் நுழைந்து வெந்த முட்டையில் ‘KVQJUFS’ என்று எழுதிவிட்டுச் சென்றார்கள்..?

அடுக்கடுக்கான கேள்விகளை மனம் ஆராய முற்பட்டபோது புத்தி விழித்துக் கொண்டு வினாக்களை எல்லாம் அழித்தது. அதுவரை, தான் படித்த கிரிப்டாலஜி தொடர்பான விஷயங்களை எல்லாம் ஒன்று திரட்டி ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம். திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று ஆராய முற்பட்டது.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்