முகங்களின் தேசம்



ஜெயமோகன் - 50

கூட்டுக்குடும்பம் 2014 ஆகஸ்ட்டில் நாங்கள் காஷ்மீருக்குக் கிளம்பியபோது ஈரோட்டில் இருந்தபடி கிருஷ்ணன் தயாரித்த காஷ்மீர் பயணத்திட்டத்தில் உரி என்றொரு இடம் இருந்தது. அங்கு இரண்டு பெரிய ஏரிகள் இருப்பதாகவும், அவற்றை நோக்கியபடி காஷ்மீரை ஆண்ட சீக்கிய அரசர் ரஞ்சித்சிங்கின் தளபதி ஹரிசிங் கட்டிய சிறிய கோட்டை ஒன்று இருப்பதாகவும், மண்ணில் உள்ள மிக அழகான இடங்களில் ஒன்று அது என்றும் கிருஷ்ணன் குறிப்புகளிலிருந்து வாசித்து எடுத்திருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக அந்தக் குறிப்புகள் அனைத்தும் 1940களுக்கு முந்தைய வெள்ளைக்காரர்களால் எழுதப்பட்டவை. 1947க்குப் பின்னர் இந்தியாவிலேயே மிக அபாயகரமான பகுதிகளாக அவை ஆகிவிட்டிருப்பதை அப்போது நாங்கள் அறியவில்லை. அறிந்திருந்தால் மேலும் உற்சாகத்துடன் கிளம்பி யிருப்போம்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது 1947 அக்டோபர் 22ம் தேதி காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக உரி வழியாகத்தான் பத்தானிய பழங்குடியினரை முகமது அலி ஜின்னா அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் கொடுத்து, இரண்டே இரவில் காஷ்மீருக்குள் நுழைந்து ஸ்ரீநகரைக் கைப்பற்றும்படி ஆணையிட்டிருந்தார்.

ஆனால் அவர்கள் ராணுவ வீரர்கள் அல்ல, நாடோடிகள். உரிக்கு மறுபக்கம் இருந்த பலுசிஸ்தானின் வறண்ட நிலத்தைச் சேர்ந்தவர்கள். காஷ்மீரின் பசுமையையும் வளத்தையும் கண்டவுடன் அவர்களுக்குள் உறைந்திருந்த வேட்டை ஓநாய் உயிர்பெற்றது. பல திசைகளிலும் சிதறி அகப்பட்டதையெல்லாம் கொள்ளையடித்தபடி அவர்கள் நகரை வந்து அடைவதற்கு பல நாட்களாயிற்று.

அதற்குள் ஸ்ரீநகரில் அவசரமாக அமைக்கப்பட்ட விமான ஓடுதளத்தில் இந்திய விமானங்கள் வந்திறங்கின. ஸ்ரீநகர் முழுமையாக இந்தியாவின் பிடிக்கு வந்தது. காஷ்மீருக்குள் நுழைந்த பதான் பழங்குடியினர், எல்லைக்கு அப்பால் துரத்தியடிக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை உரி மிக அபாயகரமான ஓர் இடமாகவே இருக்கிறது. ஓநாய்கள் வழியை மறப்பதில்லை.

இந்தியப் பிரிவினை என்பது, ஒரு கூட்டுக்குடும்பம் பிரிந்து சொத்துக்களைப் பங்கு வைத்தது போன்ற துன்ப நிகழ்வு. பங்கு போட்டதில் மிஞ்சுவது காஷ்மீர். ஆகவே பூசல் முடியவேயில்லை. ஒரே குடும்பத்தினர்தான் அத்தனை தீவிரமாக ஒருவரை ஒருவர் வெறுக்க முடியும். ஏனென்றால் அத்தனை தீவிர அன்பாக இருந்திருப்பார்கள்.

இது தெரியாமல், நாங்கள் அங்கு செல்ல வேண்டுமென்று எங்களை உபசரித்து தங்க வைத்த துணை ராணுவப்படை கமாண்டரிடம் சொன்னோம். ‘உரி’ என்ற சொல்லை முதலில் அவர் காதில் பெற்றுக்கொள்ளவில்லை. ‘‘போகலாம், அதற்கென்ன?” என்று மெல்லிய கொட்டாவியுடன் சொன்னார். ஆனால் அருகே நின்றிருந்த இன்னொரு ராணுவ அதிகாரிக்கு அச்சொல் உறைத்தது. “உரிக்கா? நீங்களா? ஏன்?” என்றார்.

“அங்கு அழகிய ஏரிகள் உள்ளன” என்றார் கிருஷ்ணன். “ஏரியைப் பார்ப்பதற்காகவா? அங்கே இந்திய ராணுவமே செல்வதற்கு பயப்படும்” என்றார். ‘‘ஏன்?” என்றேன். ‘‘அதற்கு பத்து கிலோமீட்டரில்தான் பாகிஸ்தான் இருக்கிறது. இந்தக் குளிர்ந்த மலைப்பகுதியில் எல்லை எல்லாம் ஒரு தோராயக் கணக்குதான். நாம் எந்த எல்லைக்குள் இருக்கிறோம் என்பதை, ‘நம்மைச் சுடுகிறார்களா, இல்லையா’ என்பதை வைத்துத்தான் கண்டுபிடிக்கமுடியும்” என்றார்.

அத்தனை தகவல்களும் எங்களை மேலும் உற்சாகப்படுத்தின. ஏற்கனவே ஜம்முவில் இருந்து மொகல் சாலை வழியாக காஷ்மீருக்குள் நுழையும்போதே ‘ஆபத்து... ஆபத்து...’ என்று பல்வேறு குரல்கள் எச்சரிக்கத் தொடங்கியிருந்தன. பதற்ற நிலையில்தான் பயணம் செய்தோம். எங்கள் வண்டி ஓட்டுநர் நகருக்கு அப்பால் வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். கட்டாயப்படுத்திக் கூட்டிப் போனோம். அதற்கே அவரை துணை ராணுவப்படை கைது செய்து விசாரித்தது.

நாங்கள் எங்கள் தகவலைச் சொல்லி அவரை மீட்டோம். துணை ராணுவப்படை முகாமுக்குள்தான் தங்கியிருந்தோம். காஷ்மீரில் பல இடங்களை அவர்கள் ஏற்பாடு செய்த வண்டிகளில்தான் சுற்றி வந்தோம். உரிக்கு செல்வதைப் பற்றி கிருஷ்ணன் திரும்பத் திரும்பச் சொன்னார். அது சாத்தியமே இல்லை என்று சொன்ன கமாண்டர், பிற்பாடு மெல்ல இசைந்தார். அதற்குக் காரணம் இறுதியாக கிருஷ்ணன் சொன்ன கருத்து.

எழுத்தாளராகிய நான் இந்தியர்களுக்கு உரிக்கு செல்வதற்கு ராணுவம் உதவவில்லை என்றும், உரி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் உள்ளூர் பத்திரிகைகளில் எழுதுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார். கிருஷ்ணன் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வெளியே மிகச்சிறப்பாக வாதாடக்கூடிய வழக்கறிஞர். கமாண்டர் கனிந்தார்.  ‘‘பல அனுமதிகள் வாங்க வேண்டுமே” என்றார். ‘‘வாங்குகிறோம்” என்றோம். “முதலில் எங்கு வாங்க வேண்டுமென்று எனக்கே தெரியாது.

காஷ்மீர் ஐந்து வெவ்வேறு ராணுவ அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்றார் கமாண்டர். “ஐந்து பேரிடமும் அனுமதி வாங்கிவிடுவோம்” என்றார் கிருஷ்ணன். ‘அதற்கு ஆறேழு வருடங்களாகும்’ என்று அவர் நினைத்திருக்கலாம், சொல்லவில்லை. “எல்லைக்காவல் படையில் எனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவர் இருக்கிறார், அவரிடம் பேசிப் பார்க்கிறேன்” என்றார்.

நான்கைந்து முறை தொலைபேசியில் பேசியபின் “அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்கிறார். கிளம்பிச் செல்லுங்கள்” என்றார். மறுநாள் வெள்ளிக்கிழமை. தொழுகைக்குப் பிறகு கல்வீச்சு நடத்துவது என்பது காஷ்மீரின் மதச்சடங்குகளில் ஒன்றாகவே ஆகிவிட்டிருந்தது. குறிப்பாக ராணுவ வாகனங்கள் மீது கல்வீச்சு மிகச்சிறப்பாக நடக்கும். விரைந்து செல்லும் வண்டிக்கு நேரெதிராக வரும் கல், துப்பாக்கிக் குண்டின் பாதியளவுக்கு விசை கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் காவல் நின்றிருந்த ஒரு ராணுவ வீரரை பின்னாலிருந்து தாக்கி கழுத்தை அறுத்துவிட்டு துப்பாக்கியைத் திருடிச் சென்றிருந்தார்கள். அத்தனை செய்திகளும் சேர்ந்து எங்களுக்கு மேலும் உற்சாகத்தையே அளித்தன. ராணுவத்திற்கு உரிய தனியார் வண்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதை ஒரு ஷியா முஸ்லிம் ஓட்டிச்சென்றார். காஷ்மீர் முழுக்க ஷியா முஸ்லிம்கள்தான், இந்திய ராணுவத்தின் ஆதரவாளர்கள்.

ஜீப்பில் கிளம்பிச் சென்றபோது இதயத் துடிப்பைத்தான் பிரதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். புழுதி பறந்த சிறிய ஊர்கள் வழியாகச் சென்றோம். பல ஊர்களில் சாலைகளுக்குக் குறுக்காக தடுப்புகளை ஏற்படுத்தி, உள்ளூர் இளைஞர்களே வண்டிகளை சோதனையிட்டார்கள். அத்தனை ஊர்களிலும் நேரடியாக எல்லை கடந்து தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஓரிருவர் இருப்பார்கள்.

மறைமுகமாக அந்த ஊரை அவர்கள்தான் கட்டுப்படுத்துவார்கள். ஊரின் பொருளாதாரமும் அவர்களைச் சார்ந்தது என்பதால், அவர்களுக்கு அங்கு எதிர்ப்பே இருப்பதில்லை. பல ஊர்களைத் தவிர்ப்பதற்காக வயல்களுக்குள் இறங்கி சிறுமண் சாலைகளில் ஏறி குன்றுகளுக்குள் சரிந்தெல்லாம் சென்றோம்.

உரி நோக்கி ஏறுவதென்பது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் சாலையை நினைவுறுத்தியது. தூசி பறந்த அடித்தளத்திலிருந்து மேலெழ, குளிர் அதிகரித்தது கூடவே. பண்டிப்பூர் என்னும் இடத்திற்கு அப்பால் பசுமைதான். வானம் மழைமுகில் போல குளிர்ந்து மூடி, எங்கும் வெளிச்சம் நிறைந்திருந்தது. குளிர், உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அளித்தது.

‘காஷ்மீரில் தமிழ் எழுத்தாளர் சுட்டுக் கொலை!’ அருமையான தலைப்புச் செய்தி. ஒரு பத்தாயிரம் பேர் எனது எழுத்துக்களை பணம் கொடுத்து வாங்கிப் படிக்கவும் கூடும். அவர்களில் பலர், நான் சுடப்பட்டது நியாயம்தான் என்ற முடிவுக்கு எனது எழுத்துக்களால் தள்ளப்படுவார்கள். உரிக்கு பத்து கிலோ மீட்டர் முன்னாலேயே ராணுவ முகாம் இருந்தது. அங்கே வண்டியை நிறுத்தி எங்களிடம் விசாரித்தனர். எங்கள் நோக்கத்தைச் சொன்னவுடன், விசாரித்த சர்தார்ஜி திக்பிரமை பிடித்தவர் போலானார். நெடுநேரம் அவருக்கு மூளையின் பற்சக்கரங்கள் கிட்டித்து நின்றன.
 
எங்களுக்கு உதவிய கமாண்டரின் எண்ணை அளித்தோம். அவர்களின் கமாண்டரிடம் அவர் பேசிவிட்டதாகவும், எங்களைச் செல்லவிடுமாறும், துணைக்கு வேண்டுமானால் ஒரு ராணுவ அதிகாரியை ஆயுதத்துடன் அனுப்பும்படியும் சொன்னார். எங்கள் வண்டியை ஓரமாக விடும்படி சொன்னார்கள். அந்த மலைச்சரிவு முழுக்க பச்சை நிற ராணுவக் கட்டிடங்களும், தகரக் கூரையிட்ட தங்குமிடங்களும் இருந்தன. ராணுவ அதிகாரிகளுக்கான ஒரு கிளப், மலைச்சரிவில் தெரிந்தது.

திடீரென்று ஒரு குதிரை தரையில் படுத்து, நான்கு கால்களையும் ஆட்டியபடி முதுகைத் தரையில் சொறிந்து கொண்டது. அதைத் தவிர அப்பகுதியில் வேறெந்த அசைவும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலேறிச் சென்றோம். நான்கு பக்கமும் திறந்த ராணுவக் கொட்டகையில் கயிற்றுக்கட்டில்கள் போடப்பட்டிருந்தன. நடுக்கி எடுக்கும் குளிர். கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்த பின், ‘‘இங்கு எங்காவது டீ கிடைக்குமா?” என்று கேட்டோம். உரியில் எந்த நாயரும் டீக்கடை போட்டிருக்க வாய்ப்பில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

இருந்தாலும் அந்தக் கேள்வியின் உட்பொருள் அவர்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு பீகாரி ராணுவ வீரர் எங்களுக்காக டீ போடத் தொடங்கினார். பேசிக் கொண்டிருக்கும்போது 25 வயது மதிக்கத்தக்க கரிய இளைஞர் ஒருவர் பாய்ந்து கீழிறங்கி வந்தார். உரத்த குரலில் மலையாளத்தில், ‘‘யார் கேரளாவிலிருந்து வந்தது?” என்று கேட்டார். ‘‘நான் கேரளாவிலிருந்து வருகிறேன்” என்று மலையாளத்தில் சொன்னேன். ஓடி வந்து என்னிடம் கைகுலுக்கி, “மேலே ஸ்டோரில் இருந்தேன்.

என்னிடம் கேரளத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பெயர் தரன். தொடுபுழாவைச் சேர்ந்தவர். நான்காண்டுகளாக அங்கே பணிபுரிகிறார். என்னைப் பார்த்தது, நெடுங்காலம் பிரிந்திருந்த காதலி திரும்பி வந்ததைக் கொண்டாடும் காதலனின் பரவசத்தை அவருக்கு அளித்தது. பத்து பதினைந்து முறை என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, ‘‘ரொம்ப சந்தோஷம்” என்றார்.

நான் மலையாளத்தில் திரைப்படங்கள் எழுதியிருப்பதைச் சொன்னேன். அது அவருக்குத் தெரியவில்லை. அங்கு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பே அனேகமாக இல்லை. மலையாள நாளிதழ்களும் இல்லை. பத்திரிகைகள், புத்தகங்கள் ஒன்றும் இல்லை. இணைய வசதியும் இல்லை. அங்குள்ள ஒரே செய்தித் தொடர்பென்பது, ராணுவ ரேடியோதான். அதை அதிகாரிகள்தான் கேட்க முடியும். கேட்ட செய்திகளை அவர்களே சொல்வார்கள். அது பெரும்பாலும் கெட்ட செய்திதான்.

“எப்படி இருக்கிறது இங்கே வாழ்க்கை?’’ என்று கேட்டேன். ‘‘நல்ல சம்பளம் தருகிறார்கள். இங்கு கொஞ்சம் பேர்தான் இருக்கிறோம் என்பதால் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கிறோம். பரவாயில்லை, நல்ல வாழ்க்கைதான்” என்றார். சலித்துக் கொண்டு சொல்கிறாரா என்று பார்த்தேன். முகம் மலர்ந்துதான் இருந்தது. புல்வெளிகளைப் பார்த்து, “வெளியே நடை போக முடியுமா? அருமையான இடமாக இருக்கிறதே?” என்றேன்.

“இந்த முகாமை விட்டு வெளியே போவதைப் போல் தற்கொலை முயற்சி வேறு  இல்லை. எந்தக் குன்றுக்குப் பின்னாலும் அவர்கள் பதுங்கியிருக்கலாம். சுட்டுவிட்டு அப்படியே திரும்பி ஒரு மணி நேரத்தில் தங்கள் எல்லைக்குள் சென்றுவிடுவார்கள். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொன்றுக்குப் போவதென்றால் கூட ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் செல்வோம்” என்றார்.

காஷ்மீரில் பல இடங்களில் ராணுவ முகாம்களைப் பார்த்தோம். மிகப்பெரிய கோட்டை போன்ற அரணுக்குள் அவை அமைந்திருக்கும். சில முகாம்கள் நூறு ஏக்கர் நிலம் கூட கொண்டிருக்கும். உள்ளே குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிக்கூடங்கள், மசூதி, தேவாலயம், குருத்வாரா, கோயில் எல்லாமே இருக்கும். அவை முழுமையான கிராமம் போன்றவை.

ஆனால் அங்குள்ள அந்த அரணே அவ்வளவு சோர்வூட்டுவது. இங்கு அரணென ஏதுமில்லை. ராணுவ முகாம் என்று சொல்லப்பட்டாலும், சரிவில் தனித்தனிக் கட்டிடங்களாக சிதறித்தான் இருந்தன. மானசீகமான ஒரு அரணை அவர்கள் கற்பனை செய்துகொள்வார்கள் போல. கேளிக்கை, விளையாட்டு என எதுவுமே இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் இருக்கும் பயிற்சி மட்டும்தான். பெரும்பாலும் அப்பயிற்சியே பெரிய தகரக்கொட்டகைக்குள்தான் நடக்கும்.

பத்து நாளைக்கு மேல் ஈரோட்டில் இருந்தால், ‘அடைஞ்சு கிடக்குறது மாதிரி இருக்கு சார்’ என்று புலம்ப ஆரம்பிக்கும் கிருஷ்ணன் போன்ற ஒருவருக்கு அந்த வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தரன் வாயிலிருந்து அதைப்பற்றி எதிர்மறையாக சொல்ல வைக்கலாம் என்று பல கோணங்களில் அவர் முயற்சி செய்வது தெரிந்தது. ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் எனக்குத் தோன்றியது, உண்மையிலேயே தரன் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று.

சற்று நேரத்தில் சர்தார்ஜி கீழிருந்து வந்து, எங்கள் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னார். ‘‘நேற்று மாலையில் கூட துப்பாக்கிச் சூடுகள் நடந்திருக்கின்றன. ஆகவேதான்...’’ என்று மன்னிப்புக் கோரினார். ‘‘பரவாயில்லை” என்று அவருக்கு ஆறுதல் சொன்னோம். ஜீப்பை திருப்பிக்கொண்டு கீழே இறங்கி வந்தோம். காஷ்மீரின் உயரமான இடங்களில் ஒன்று அது.

ரஸ்தான் பாஸ் என்னும் இடத்தில் அதை அறிவிக்கும் பலகை இருந்தது. அதன் முன் நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம். புல்வெளியை வேடிக்கை பார்த்தபடி கீழே வந்தோம். கிருஷ்ணன் கேட்டார். “உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது அப்படிச் சொல்லும்படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்களா?”

‘‘மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் இடங்களில் ஒன்று ராணுவ முகாம் என்று டால்ஸ்டாய் சொல்லியிருக்கிறார்” என்றேன். ‘‘ராணுவத்தில் கடமைகள் உண்டே ஒழிய, பொறுப்பென்று எதுவும் இல்லை. அதை ராணுவம் என்ற பெரும் அமைப்பே பார்த்துக்கொள்கிறது. ஆகவே, அன்றாட வாழ்க்கையில் சோம்பல் நிறைந்திருக்கிறது. ஆனால் குற்ற உணர்ச்சி இல்லை. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் உயிர் துறக்கச் சித்தமாக இருக்கிறார்கள்.

குற்ற உணர்ச்சி இல்லாமல் சோம்பி இருக்கும் இடத்தில் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்கிறார் டால்ஸ்டாய்.” “அது மட்டுமல்ல” என்றார் ராஜகோபாலன். “இது ஒரு பெரிய குடும்பம் போல. கூட்டுக்குடும்பங்களில் மனிதர்கள் மிக உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், அன்பாக இருந்தால்தான் ஒரு வீட்டுக்குள் சேர்ந்து வாழவே முடியும். அந்தக் கட்டாயமே அவர்களை அன்பாக வைத்திருக்கும் அதுதான் இங்கேயும்.

அந்த கேரள இளைஞர் அவர் மேலதிகாரியிடம் பேசியதைப் பார்த்தேன். தந்தையிடம் பேசுவது போலிருந்தது.’’ கீழிறங்கி வரும் வழியில் பல ஊர்களில் கல்வீச்சு நிகழ்ந்திருப்பதாகச் சொன்னார்கள். முதிய பெண்மணி ஒருத்தி எங்களிடம், “அங்கே கேடிகள் கல்லெறிகிறார்கள். இந்த வழியாகச் செல்லுங்கள்” என்று சொன்னார். ‘பத்மாஷ்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தினார்.

நாங்கள் மையச்சாலைக்கு வரும்போது சாலை முழுக்க கற்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம். ‘போர்’ அப்போதுதான் முடிந்திருந்தது. ஓராண்டு கழித்துத்தான் உரி என்ற சொல்லை அத்தனை பேரும் சொல்வதைக் கேட்டோம். 2016 செப்டம்பர் 16ம் தேதி உரி வழியாக வந்த பாகிஸ்தானின் தீவிரவாதக் கும்பல், ராணுவ முகாமைத் தாக்கி 14 ராணுவ வீரர்களைக் கொன்றது.

(தரிசிக்கலாம்...)

ஓவியம்: ராஜா